பிரக்யா சிங் தாக்கூர்: மத வெறுப்பு பேச்சின் முகவரி
மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய மத வெறுப்பு கருத்துகளையும் அறிவியலுக்கும் வரலாற்றுக்கும் புறம்பான கருத்துகளையும் பேசி வந்துள்ளார்.
போபால் நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் வெறுப்புப் பேச்சுக்கும் சர்ச்சைக் கருத்துகளுக்கும் பெயர் போனவர். சமீபத்தில் போபாலில் மதம் சார்ந்த கூட்டம் ஒன்றில் பேசிய பிரக்யா சிங் தாக்கூர், ‘இந்து மதத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகள் இந்து அல்லாதவர்களின் (Non Hindus) வீடுகளுக்கு சென்றால், அவர்கள் கால்களை உடைக்கவும் தயங்காதீர்கள் ‘ என்று மத ரீதியான வெறுப்பு பேச்சை பேசியுள்ளார். அவர் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
இவ்வாறு மத ரீதியான வெறுப்பு பேச்சை பிரக்யா சிங் தாக்கூர் பேசுவது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் இது போன்ற வெறுப்பு பேச்சையும் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களையும் பேசி வந்துள்ளார்.
இதேபோல் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ‘இந்து ஜாகரன வேதிகே’ என்ற இந்துத்துவ அமைப்பு கர்நாடகவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசும்போது, ‘வீட்டில் ஆயுதங்களை வைத்திருங்கள். அவற்றை கூர்மையாக வைத்திருங்கள். அந்தக் கத்திகளால் நமது காய்கறிகளை முறையாக வெட்ட முடிந்தால், நமது எதிரிகளின் தலைகளையும் வெட்ட முடியும்’ என்று இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஆயுதங்களை ஏந்த வேண்டும் என்று வெறுப்பையும் மத வன்முறையையும் தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
மேலும் ‘லவ் ஜிகாத்’க்கு எதிராக இந்துப் பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் பேசியுள்ளார். லவ் ஜிகாத் அதாவது, ‘முஸ்லிம் ஆண்கள் இந்து பெண்களை காதலித்து அவர்களை மதம் மாற்றுகிறார்கள், இதன் மூலம் அவர்கள் முஸ்லிம் மக்கள்தொகையை அதிகரித்து இந்துக்களை சிறுபான்மை ஆக்குகிறார்கள்’ என்ற சதிக் கோட்பாட்டை முன்வைத்து மத வெறுப்பை தொடர்ந்து பரப்பி வருகிறது பாஜக. இந்து பெண்கள் தற்காப்பிற்காக ஆயுதங்கள் வைத்துக்கொள்ளுங்கள், எதிரிகளின் தலைகள் வெட்டப்படும் என்ற வெறுப்பு பேச்சின் ஊடாகவே இந்த ‘லவ் ஜிகாத்' என்ற சதிக் கோட்பாட்டையும் இணைத்து பேசினார் பிரக்யா சிங் தாக்கூர். இது வெளிப்படையான மதக் கலவரத்திற்கான அறைகூவல் என்று பலரால் விமர்சிக்கப்பட்டது. ஆனால் இதற்காக அவர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மகாராட்டிர மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய மாலேகான் நகரத்தில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. அதில் 6 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் பிரக்யா சிங் தாக்கூரும் ஒருவர். 9 ஆண்டுகள் சிறையில் இருந்த இவரை மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2015ஆம் ஆண்டு, தேசிய புலனாய்வு முகமை (NIA) அவருக்கு ‘clean chit’ கொடுத்தது. மேலும் இவர் இந்த குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையில் இருக்கும் போதே, 2019 நாடாளுமன்ற தேர்தலில் போபால் தொகுதியில் பாஜக சார்பாக நின்று வெற்றி பெற்றார்.
மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து போது ‘மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படை’யின் (ATS) முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரே என்ற ஐபிஎஸ் அதிகாரி தன்னை கொடுமைப் படுத்தியதாகவும் அதனால் ‘நீ அழிந்து போவாய்’ என்று நான் அவருக்கு சாபம் விட்டேன் என்று கூறினார் பிரக்யா சிங் தாக்கூர். மேலும் ‘நான் சாபம் விட்டு ஒன்னே கால் மாதத்தில் அவர் தீவிரவாத தாக்குதலில் இறந்துபோனர்’ என்று 2019 நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். பிரக்யா சிங் தாக்கூர் குறிப்பிடும் ஹேமந்த் கர்கரே 2008 நவம்பர் 26 அன்று மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் இறந்து போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது மரணமடைந்த போலீஸ் அதிகாரி இறந்தது குறித்து, ‘தனது ‘தெய்வவாக்கால்’ தான் அவர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக’ சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்தது.
இதுபோல் 2021ஆம் ஜனவரி மாதம் நாடாளுமன்ற கூட்டதிலே, காந்தியை கொலை செய்த ‘நாதுராம் கோட்சே’வை தேச பக்தர் என்று கூறியது பெரும் சர்ச்சை ஆனது. இவ்வாறு பிரக்யா சிங் தாக்கூர் ‘கோட்சே’வை தேச பக்தர் என்று கூறியது ‘மன்னிக்க முடியாதது, கண்டிக்கத்தக்கது’ என்று மோடியே சொல்லும் அளவுக்கு பெரிய சர்ச்சையானது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய பொது சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த போது (மே 2021), ‘தான் தினமும் மாட்டு மூத்திரம் குடித்து வருவதாகவும், அது நுரையீரல் நோயிகளிலிருந்து மனிதர்களை காக்கிறது என்றும் அதனால் தான் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை’ என்றும் பிரக்யா சிங் தாக்கூர் அறிவியலுக்கு புறம்பான கருத்துகளை பசி சர்ச்சையில் சிக்கினார்.
இவ்வாறு தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த பிரக்யா சிங் தாக்கூருக்கு கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து கடந்த 2025 ஜூலை மாதம் விடுதலை செய்யப்பட்டார் பிரக்யா சிங் தாக்கூர்.