YouTurn

அமெரிக்க குழந்தைகள் மத்தியில் வேர்க்கடலை ஒவ்வாமை!

சிறு வயதிலே வேர்க்கடலை உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் அது வேர்க்கடலை ஒவ்வாமை ஏற்படுவதை தவிர்க்கலாம் என்ற ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பிற்கு நடைமுறை நிரூபணம் கிடைத்துள்ளது.

அமெரிக்க குழந்தைகள் மத்தியில் வேர்க்கடலை ஒவ்வாமை!

உணவு ஒவ்வாமை (Food allergies) என்பது உலகம் முழுவதும் குறிப்பிட்ட சதவீத குழந்தைகள் மற்றும் வளர்ந்த மனிதர்களிடத்தில் பொதுவாக இருப்பதுதான். இந்த உணவு ஒவ்வாமை அதிகமாக குழந்தைகளிடமே காணப்படுகிறது. பெரும்பாலான குழந்தைகள் வளரும் போது தங்களின் உணவு ஒவ்வாமையை கடந்து (overcome), எல்லா உணவுகளை உண்ணத் தொடங்கிவிடுகிறார்கள். உலகில்  பெருமளவில் உணவு ஒவ்வாமைகளுக்கு காரணமாக இருப்பது பசும்பால், முட்டை, சோயா, கோதுமை, வேர்க்கடலை, பாதாம் பிஸ்தா போன்ற கொட்டை வகைகள் மற்றும் மீன் ஆகிய 8 உணவுகள் தான்.


 

ஆனால் இதில் வேர்க்கடலை ஒவ்வாமை (Peanut allergy) குறிப்பான கவனத்தை கோருவதாக இருக்கிறது. பெரும்பாலான உணவு தொடர்பான கடுமையான ஒவ்வாமைகளுக்கு  வேர்க்கடலை காரணமானதாக இருக்கிறது. பொதுவாக சிறுவயதிலேயே தொடக்கிவிடும் இந்த வேர்க்கடலை ஒவ்வாமை காலப்போக்கில் கடந்து வரக்கூடியதாக இருப்பதில்லை. பெரும்பாலான நபர்களிடத்தில் ஆயுள் வரை இந்த ஒவ்வாமை இருக்கிறது. மேலும் மிகச்சிறிய அளவில் உணவில் எடுத்துக் கொண்டாலும் கூட இது உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது.


 

அமெரிக்காவிலும்  ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வேர்க்கடலை ஒவ்வாமை அதிகமாக இருக்கிறது. இந்த நாடுகளில் உள்ள மொத்த மக்கள்தொகையில் 2% மக்கள் வரை இந்த வேர்க்கடலை ஒவ்வாமையால் பாதிக்கப்படுவதாக தெரியவருகிறது. இதனால் அமெரிக்காவில் வேர்க்கடலை சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை பள்ளிகளிலும் குழந்தைகள் கூடும் பிற இடங்களிலும் தவிர்த்து வந்தனர்.


 

இந்நிலையில் அமெரிக்காவை மையமாக கொண்டு செய்யப்பட்ட சமீபத்திய ஆய்வு, வேர்க்கடலை சேர்க்கப்பட்ட உணவுகளை மிகச் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு கொடுப்பதால் குழந்தைகளுக்கு வேர்க்கடலை ஒவ்வாமை ஏற்படுவது குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது.


 

வேர்கடலையால் ஏற்படும் ஒவ்வாமையை வேர்க்கடலையை சிறிய வயதிலே கொடுப்பதன் மூலம் தடுக்கமுடியும் என்பதை எவ்வாறு ஆய்வாளர்கள் கண்டுபிடித்தார்கள் என்பது சுவையான கதையாக இருக்கிறது.

 

இந்த ஆய்வின் தொடக்கப்புள்ளி 2015ஆம் ஆண்டு தான். குழந்தைகளுக்கு வேர்க்கடலை ஒவ்வாமை இருப்பது பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது, ஆய்வாளர்கள் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை கவனிக்கிறார்கள். அதவாது இஸ்ரேலில் உள்ள யூத குழந்தைகளைவிட பத்து மடங்கு அதிக அமெரிக்க குழந்தைகளுக்கு வேர்க்கடலை ஒவ்வாமை இருக்கிறது. ஆனால் இந்த இரண்டு நாடுகளிலும் உள்ள யூத குழந்தைகள் ஒத்த மூதாதையர்களை (similar ancestry) கொண்டவர்கள் தான். இதனால் இந்த வேறுபாடு மரபணு ரீதியானதாக இருக்க வாய்ப்பில்லை. சமூக பழக்க வழக்கங்களாலே அதிகமான அமெரிக்க குழந்தைகளுக்கு வேர்க்கடலை ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வாளர்கள் கருதியிருக்கிறார்கள்.


 

இந்த வகையில் ஆய்வு செய்தபோது, அமெரிக்கா இங்கிலாந்து ஆகிய நாட்டிலுள்ள பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வேர்க்கடலை சார்ந்த உணவுகளை கொடுப்பதை தவிர்த்து வருவதை ஆய்வாளர்கள் காண்கிறார்கள். அதேவேளையில், இஸ்ரேலிய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே வேர்க்கடலை சார்ந்த உணவை கொடுக்கிறார்கள். இதனை கணக்கில் கொண்டு சிறு வயதிலே வேர்க்கடலை உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் அது சார்ந்து ஒவ்வாமை ஏற்படுவதை தவிர்க்கலாம் என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வருகிறார்கள்.

 

இதனை அடிப்படையாகக் கொண்டு 2015ஆம் ஆண்டில் ‘அமெரிக்கர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள்’ என்ற உணவுப் பட்டியலில் திருத்தம் கொண்டு வருகிறார்கள். 4 முதல் 6 மாதங்கள் உள்ள குழந்தைகளுக்கு வேர்க்கடலை சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை கொடுக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். மேலும் 2017ஆம் ஆண்டில் அமெரிக்கவின் ‘தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம்’ கூட குழந்தைகளுக்கு வேர்க்கடலை சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை கொடுக்கச் சொல்லி பரிந்துரைத்தது.

 

இந்த வழிகாட்டுதல் கடந்த 10 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டதன் விளைவாக குறைந்தபட்சம் 40,000 குழந்தைகளுக்கு வேர்க்கடலை ஒவ்வாமை ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள 120,000 குழந்தைகளின் மருத்துவ தரவுகளை பரிசோதித்து செய்யப்பட்ட இந்த ஆய்வில், வேர்க்கடலை ஒவ்வாமை 43% குறைந்துவிட்டதாக தெரியவருகிறது. அதேபோல் பொதுவாக உணவு ஒவ்வாமை என்பது 36% குறைந்துள்ளதாக தெரிகிறது.

 

120,000 குழந்தைகளின் மருத்துவத் தரவுகளை மட்டும் கொண்டு செய்யப்பட்ட இந்த ஆய்வு வரம்பிற்கு உட்பட்டது தான் என்று இதனை செய்த டேவிட் ஹில் என்பவரே ஒப்புக் கொள்கிறார். ஏனெனில் மருத்துவ தரவுகளில் உள்ள எண்ணிக்கை உண்மையான ஒவ்வாமை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையுடன் நிச்சயம் வேறுபட்டதாகவே இருக்கும்.

 

மேலும் கோரின் கீட் என்ற பேராசிரியர் இது குறித்து கூறுகையில், ‘ஒவ்வாமை குறித்த எனது சொந்த ஆய்வின் போது 2015 உணவு வழிகாட்டுதல்களை பல குடும்பங்கள் முழுமையாக பின்பற்றாமல் இருப்பதை கவனித்திருக்கிறேன். வழிகாட்டுதல் படி குழந்தைக்கு வேர்க்கடலை சேர்த்த உணவு கொடுத்தால், ஏற்கனவே ஒவ்வாமை உள்ள மூத்த குழந்தைகளும் பெற்றோர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்திற்காக அதனை பின்பற்றாமல் இருக்கிறார்கள்’ என்கிறார்.

 

இதனால் இதுகுறித்து இன்னும் விரிவாக ஆய்வு செய்யவேண்டும் என்று ஆய்வாளர்களும் பேராசிரியர்களும் வலியுறுத்துகிறார்கள். இருப்பினும்,  அமெரிக்காவில் பெரும் குறிப்பிடத்தக்க பிரச்சினையாக பார்க்கப்பட்ட வேர்க்கடலை ஒவ்வாமை குறித்த முக்கிய ஆய்வாக இது பார்க்கப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை