அபிநந்தன் உருவில் இந்தியாவை கேலி செய்த பாகிஸ்தான் தொலைக்காட்சி விளம்பரம் !
2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் 16-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியை கேலி செய்யும் நோக்கத்தில் வெளியான பாகிஸ்தான் நாட்டின் தொலைக்காட்சி...

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியை கேலி செய்யும் நோக்கத்தில் வெளியான பாகிஸ்தான் நாட்டின் தொலைக்காட்சி விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தி, கண்டனங்களை பெற்று வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் என்றால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாய் இருக்கும். போட்டிகள் நடைபெறுவதற்கு முன்பு கிரிக்கெட் அணிகளை கேலி செய்து விளம்பரங்கள் வெளியிடுவதை பலமுறை பார்த்து இருப்போம். ஆனால், இம்முறை பாகிஸ்தான் நாட்டின் தொலைக்காட்சி விளம்பரம் எல்லை மீறியதாக அமைந்து உள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் நாட்டின் எல்லையில் சிக்கிக் கொண்டு பின் விடுதலை செய்யப்பட்டார் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான். பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி இருந்த நேரத்தில் அவரை விசாரணை செய்த போது நிகழ்ந்ததை மையமாக வைத்து விளம்பரம் சித்தரிக்கப்பட்டு உள்ளது.
முந்தைய செய்தி : பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய IAF வீரர்.
Shameful for Pakistan to mock our hero #Abhinandan ahead of #INDvsPAK World Cup cricket game. We need to retaliate! pic.twitter.com/BQcLxyQPvH
— Harsh Goenka (@hvgoenka) June 11, 2019
அதில், அபிநந்தன் போன்று மீசை வைத்த ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி உடன் கையில் டீ கப்-ஐ வைத்து இருப்பது போன்று காண்பிக்கப்படுகிறார். மேலும், இந்திய அணி டாஸ் வென்றால் என்ன செய்யும் ? யார் யார் விளையாடுவார்கள் ? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படுகிறது. அதற்கு பதில் கூற மறுக்கிறார். டீ எப்படி இருக்கிறது எனக் கேட்டதற்கு நன்றாக உள்ளது என பதில் அளிக்கிறார். பின்பு அவர் எழுந்து செல்லும் பொழுது " கப்பை " எடுத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு பாகிஸ்தான் தொலைக்காட்சி விளம்பரத்தில் காட்டப்படுகிறது.

இந்த விளம்பரத்திற்கு இந்தியர்கள் பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்பு விளம்பரங்களில் மற்ற நாட்டு கிரிக்கெட் அணியை கேலி செய்யும் விளம்பரங்கள் இரு நாட்டிலும் வெளியாவது உண்டு.
Cringeworthy ads on both sides of the border 🤮 seriously guys, you don’t need to ‘hype up’ or market the match anymore specially with rubbish! it has ENOUGH attention already!It’s only cricket for God sake, and if you think it’s anymore than that then get a grip or get a life !!
— Sania Mirza (@MirzaSania) June 12, 2019
பாகிஸ்தான் நாட்டின் தொலைக்காட்சி விளம்பரம் குறித்து இந்திய டென்னிஸ் வீராங்கனையும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோகிப் மாலிக் உடைய மனைவியுமான சானியா மிர்ஷா ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார். அதில், " இரு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் தர்மசங்கடமான விளம்பரத்தை வெளியிடுகின்றனர். யாரும் விளையாட்டை விளம்பரப்படுத்த அவசியமில்லை. இது வெறும் விளையாட்டு தான். ஒருவேளை விளையாட்டை விட வேறெதையும் பெரிதாக நினைத்தால் வாழ்க்கையை தேடுங்கள் " என கூறியுள்ளார்.
முன்பெல்லாம் இரு நாட்டு அணிகளை, ரசிகர்களை கேலி செய்து இருப்பர். ஆனால், இம்முறை இந்திய விமானப்படை வீரரை சித்தரித்து கேலி செய்து இருப்பது கண்டனங்களை பெற்று வருகிறது. அணிகளுக்கான விளையாட்டில் ஒரு நாட்டின் ராணுவ வீரரை அவமதிப்பது எவ்விதத்தில் சரியான செயலாகும்.
ஜூன் 16-ம் தேதி டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுகிறது. ஏற்கனவே மழையால் பல போட்டிகள் தடைப்பட்டு வருவதாலும், சறுக்கலில் இருக்கும் பாகிஸ்தான் அணி இந்தியாவை வெல்லுமா என்ற கேள்வியும் உள்ளது. காரணம், உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவை ஒருமுறை கூட பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.