இந்திய சூழலில் மனநல ஆரோக்கியம்!
மனநல பிரச்சனைகளுக்கான தீர்வுகளை அணுகுவதில் உள்ள சிக்கல்களை பன்முகத்தன்மையுடன் அணுகவேண்டும்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளின்படி கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும் 13,089 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். அதாவது 2021ஆம் ஆண்டில் நாள் ஒன்றில் 36 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்திய சூழலை பொறுத்தவரை அனைத்து தற்கொலைகளும் சரிவர பதிவு செய்யப்படுவதுமில்லை, எனவே நமக்கு தற்போது கிடைத்துள்ள புள்ளிவிவரங்களை காட்டிலும் அதிக தற்கொலைகள் நிகழ்ந்திருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது இந்தியாவில் மனநலம் சார்ந்த பிரச்சனையின் நுனி மட்டுமே.
தீவிரமான மனநல பிரச்சனையின் காரணமாக தற்கொலை எண்ணங்களோடு வாழ்பவர்கள் இந்த எண்ணிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.உண்மையில், இப்படி எண்ணிக்கையில் வராமல் போனவர்களின் பிரச்சனைகளை அடையாளம் காண்பது, புரிந்துகொள்வது, சிகிச்சைக்கு உட்படுத்துவது போன்ற முன்னெடுப்புகள்தான் அவசியமானது.

இந்திய சூழலில் மனநல பிரச்சனையை அணுகுவது, அதற்கான சிகிச்சை என்பது பல்வேறு சிக்கலுக்கு உட்பட்டது. முதலில், மனநல பிரச்சனையை ஒரு நோய்க்கூறாக (Pathology) புரிந்துகொள்வது இன்றியமையாதது. மன அழுத்தத்தால் (Depression) பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட அனுபவம் எனக்கு உண்டு. அந்த வகையில், இதன் முக்கியத்துவத்தை நன்கு அறிவேன். சிகிச்சையின்மூலம் மன அழுத்தத்தை கடந்து வர எனக்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டது. ஆனால், எனக்கு மன அழுத்தம் இருப்பதை புரிந்துகொள்ள 10 மாதங்கள் ஆனது.

சப்பல் மெஹ்ரா என்பவர் சொல்வது போல, மனநல பிரச்சனை காரணமாக தாங்கள் எதிர்கொண்டுவரும் சவால்களை மற்றவர்களுக்கு புரியும்படி வெளிப்படுத்தும் திறன் பல நபர்களுக்கு இருப்பதில்லை. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும்போது நான் ஏன் ஊக்கமில்லாமல், உற்சாகமில்லாமல் இருக்கிறேன் என்று எனக்கு விளக்கமாக சொல்லத் தெரியாது. மேலும், பிரச்சனையை வெளிப்படுத்த சரியான வார்த்தைகள் கிட்டாது.
Obsessive Compulsive Disorder (OCD) நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நபருக்கு பதட்டமும் பயமும் ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்தான விடாப்பிடியான எண்ணங்களும் கட்டுப்படுத்தமுடியாத அளவுக்கு இருக்கும். ஆனால் இதை மற்றவர்களிடம் சொல்லும்போது, அவர்கள் ‘எனக்கும்தான் பயம் பதட்டம் இருக்கிறது. இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை’ என்பார்கள். மனநல மருத்துவர்களால் மட்டுமே இந்த பயத்தையும் பதட்டத்தையும் அதன் உண்மையான பொருளில் புரிந்துகொள்ள இயலும்.
ஆனால், மருத்துவரிடம் செல்லும் அளவுக்கு ஒருவருக்கு பிரச்சனை இருப்பதை உணர்ந்துகொள்ள வெகுகாலம் பிடிக்கும். ஏனெனில், இந்த பிரச்சனைகளைப் பற்றிய குறைந்தபட்ச பொதுஅறிவு உடைய நபர்கள் கிராமம் மற்றும் சிறுநகர பகுதிகளில் மிகவும் அரிது. அதனால், மனநலப் பிரச்சனை, அதற்கான சிகிச்சை ஆகியவை பற்றிய வழிகாட்டுதல்கள் கிராமம் மற்றும் சிறுநகர பகுதிகளில் ஒருவருக்கு கிடைப்பது கடினமானதாக உள்ளது.
அடுத்தது, மனநல பிரச்சனைகள் என்பது ‘மேட்டுக்குடிகளின் பிரச்சனை' (Elite’s Problem) என்றும், ’மனநல மருத்துவரை நாடுபவர்கள் இயல்பானர்கள் அல்ல’ என்ற தப்பெண்ணங்களும் இந்திய சமூகத்தில் நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. ஆனால் சமீப காலமாக மக்கள் இந்த கருத்துகளை கைவிட்டு மனநல மருத்துவதை அணுக ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆனால், அப்படி மனநல மருத்துவத்தை அணுகிவரும் மக்களுக்கு சேவைசெய்ய போதுமான மருத்துவக் கட்டமைப்பு இந்தியாவில் இல்லை. குறிப்பாக, போதுமான மனநல மருத்துவர்கள் இல்லை. உலக சுகாதார நிறுவன (WHO) வழிகாட்டுதலின்படி, ஒரு லட்சம் நபர்களுக்கு மூன்று மனநல மருத்துவர்கள் இருக்கவேண்டும்.
ஆனால் இந்தியாவில் 2015 - 2016 காலகட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஒரு லட்சம் நபர்களுக்கு 0.75 மனநல மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள். அதாவது, 36,000 மனநல மருத்துவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் வெறும் 9,000 தான் இருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த எண்ணிக்கையிலான மனநல மருத்துவர்களை கொண்டுவர இந்தியாவுக்கு இன்னும் 27 ஆண்டுகள் தேவைப்படும்.

அதே நேரத்தில் மனநல பிரச்சனைகளை நாம் முழுக்க முழுக்க மருத்துவர்களை நம்பியே கையாளமுடியாது. Children First சேவை நிறுவனத்தின் இணை நிறுவனர் சென் கூறுவது, ‘இந்தப் பிரச்சனைக்கான நமது அணுகுமுறை என்பது நிறுவனமயப்பட்டதாகவும் (Systemic) பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்கவேண்டும். குடும்பம், கல்வி நிறுவனங்கள், வேலை செய்யும் இடம், வளர்ந்து வந்த சூழல் ஆகியவற்றை கணக்கில்கொண்டு மனநல பிரச்சனையை அணுகவேண்டும்.
இதைச்செய்வதில் அரசின் செயல்பாடுகளும், கொள்கை ஆக்கங்களும் முக்கிய பாத்திரம் வகிக்கிறது என்றாலும் ஒரு பொறுப்புள்ள சமூகமாக நாம் மனநல ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை தேவைப்படும் மக்கள் பிரிவினரிடம் கொண்டு செல்வதற்கு முயற்சிகள் எடுக்கவேண்டும்.
References:
1. Despite rising demand and changing attitudes, Indians have limited access to mental healthcare: Data
2. The kids are not all right – the challenges of youth mental health in India
3. A cry for help that goes unnoticed