இந்தி பேசும் மாநிலங்களில் தழைத்தோங்கும் ஒரு மொழிக் கொள்கை!
உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் இந்திக்கு எதிரானவர்களா? இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கை தான் இன்றும் தழைத்தோங்குகிறதா? - ஒரு பார்வை!
சமீபத்தில் உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பதால் ரூ. 2,152 கோடி எஸ்எஸ்ஏ (சமக்ரா சிக்ஷா அபியான்) நிதியை விடுவிக்க சட்டத்தில் இடம் இல்லை. தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
இதன் மூலம் 2023-24 கல்வியாண்டிற்கான நான்காம் தவணை எஸ்எஸ்ஏ நிதி ரூ.249 கோடியும், 2024-25 கல்வியாண்டிற்கான எஸ்எஸ்ஏ நிதியான ரூ.2,152 கோடியும் ஒன்றிய அரசால் இன்னும் விடுவிக்கப்படாததால் மாநில அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழி கொள்கையைக் கொண்டு வந்து, இந்தியை திணிக்கக் கூடாது என்றும் கடுமையாக பதிலளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சமக்ரா சிக்ஷா அபியான் நிதி என்றால் என்ன? அது எதன் அடிப்படையில் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் பிரித்து கொடுக்கப்படுகிறது? பிஎம் ஸ்ரீ பள்ளிகள் என்றால் என்ன? தேசிய புதிய கல்விக் கொள்கை 2020-ற்கும் இவற்றிற்கும் என்ன தொடர்பு? என்பன போன்ற பல கேள்விகள் நமக்கு வரிசையாக எழுகின்றன. அவற்றிற்கான பதில்களைப் பார்க்கலாம்.
’சமக்ரா சிக்ஷா அபியான்' vs பிஎம் ஸ்ரீ திட்டம் - ஒரு ஆழமான பார்வை:
’சமக்ரா சிக்ஷா அபியான்' (SSA) திட்டம்:
’சமக்ரா சிக்ஷா அபியான்' (SSA) திட்டம் என்பது பள்ளிக்கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமாகும். இது அங்கன்வாடியிலிருந்து 12ஆம் வகுப்பு வரை பள்ளிக்கல்வியின் அனைத்து வரம்புகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இத்திட்டம் 2018-19 கல்வியாண்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது. இது சர்வ சிக்ஷா அபியான் (SSA), ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா அபியான் (RMSA) மற்றும் ஆசிரியர் கல்வி (TE ) ஆகிய 3 திட்டங்களை உள்ளடக்கியது.
PM SHRI திட்டம்:
PM SHRI (PM-Schools for Rising India) திட்டம் என்பது 2022 ஆம் ஆண்டு இந்திய அரசால் தொடங்கப்பட்ட ஒன்றிய அரசின் ஒரு நிதியுதவி வழங்கும் திட்டம். இது தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ஐ செயல்படுத்தி, ஒன்றிய அரசு/மாநிலம்/யூனியன் பிரதேச அரசு/KVS (Kendriya Vidyalaya Sangathan) மற்றும் NVS (Navodaya Vidyalaya Samiti) உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகளால் நிர்வகிக்கப்படும் 14,500 க்கும் மேற்பட்ட PM SHRI பள்ளிகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 12,499 PM SHRI பள்ளிகள் PM SHRI டாஷ்போர்டில் பட்டியலிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 34 PM SHRI பள்ளிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த 34 பள்ளிகளும் கேந்திரியா வித்யாலாயா பள்ளிகள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டத்தின் காலம் 2022-23 முதல் 2026-27 வரை. இத்திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கும், சட்டமன்றம் கொண்ட யூனியன் பிரதேசங்களுக்கும் நிதி பகிர்வு முறை 60:40 (ஒன்றிய அரசு:மாநில அரசு) ஆகவும், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி பகிர்வு முறை 90:10 (ஒன்றிய அரசு:மாநில அரசு) ஆகவும், சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசின் நிதியுதவி 100%-மாகவும் உள்ளது.
’சமக்ரா சிக்ஷா அபியான்' (SSA) திட்டத்தைப் பொறுத்தவரையில், கடந்த 2018 ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது, அதே நேரத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஆம் ஆண்டில் தான் தொடங்கப்பட்டது. இந்நிலையில் சமக்ரா சிக்ஷா அபியான்' (SSA) திட்டம் 2021 இல் NEP உடன் இணைக்கப்பட்டது. இறுதியில் 2022 ஆம் ஆண்டில், PM-SHRI திட்டம் அறிவிக்கப்பட்டு, இதுவும் ’சமக்ரா சிக்ஷா அபியான்' (SSA) திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டது.
இதன் மூலம் சமக்ர சிக்ஷா மற்றும் PM SHRI போன்ற ஒன்றிய அரசின் திட்டங்கள், “தேசிய கல்விக் கொள்கை 2020” ஐ நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக உள்ளன என்பதை அறிய முடிகிறது.
உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் இந்திக்கு எதிரானவர்களா?
இந்தி பிரச்சார சபா தரவுகளின் படி, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் இந்தி தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. 2009-ஆம் ஆண்டு சென்னையிலிருந்து 27,600 மாணவர்களும் சென்னை தவிர தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து 1.5 லட்சம் மாணவர்களும் இந்தி தேர்வு எழுதியுள்ள நிலையில், 2024-ம் ஆண்டு இந்தி தேர்வுகளை சென்னையிலிருந்து 1,39,311 பேரும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து 2,11,354 பேரும் எழுதியுள்ளனர்.
இடையில் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்து, மீண்டும் குறைந்து காணப்பட்டாலும், 2009-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதையே காண முடிகிறது.

இதே போன்று தென்னிந்திய தரவுகளை ஆய்வு செய்ததில், கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மொத்தம் 3,50,665 பேர் இந்தி தேர்வுகளை எழுதியுள்ள நிலையில், ஆந்திரா & தெலங்கானாவில் 1,10,376 பேரும், கேரளாவில் 9,110 பேரும் கர்நாடகாவில் 5,584 பேரும் இந்த தேர்வை எழுதியிருந்தனர். கடந்த ஆண்டு மட்டுமல்லாமல் அதற்கு முந்தைய சில ஆண்டுகளிலும், தென்னிந்திய மாநிலங்களில் இதேநிலை தான் நிலவி வந்துள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இலட்சக்கணக்கானோர் ஏற்கனவே இந்தியை விரும்பி கற்கின்றனர் என்பதும், விருப்பமுள்ளோர் இந்தி கற்பதற்கு தமிழ்நாட்டில் எந்த தடையும் விதிக்கப்படுவதில்லை என்பதும் தெளிவாகிறது.
இந்தி பேசும் மாநிலங்களில் தழைத்தோங்கும் ஒரு மொழிக் கொள்கை!
தி இந்து ஆய்வு செய்த தரவுகளின் படி, பீகார், உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் 90% க்கும் அதிகமான மக்கள் ஒரே ஒரு மொழியை மட்டுமே பேசுகிறார்கள், மிகக் குறைவான மக்களே இரண்டாவது மொழியில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே சமயம் தமிழ்நாடு, கேரளா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் இருமொழி பேசுபவர்களின் விகிதம் கணிசமாக அதிகமாக உள்ளது.
1991 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளுக்கான, மொழிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவுகளின் அடிப்படையில், இந்தி பேசாதவர்கள் பொதுவாக புதிய மொழிகளைக் கற்க அதிக விருப்பமுள்ளவர்களாக இருப்பதன் மூலம் அவர்களின் பன்மொழித்தன்மை அதிகளவில் இருப்பதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன. அதேசமயம் இந்தி பேசுபவர்கள் குறைந்த பன்மொழித் தன்மையையேக் கொண்டுள்ளார்கள்.
விளக்கப்படம் 1-ன் மூலம், 1991 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் 84.5% பேர், தமிழ்மொழி மட்டும் பேசுபவர்களாக, அதாவது ஒருமொழி பேசுபவர்களாக இருந்தனர், இந்த எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டில் 78% ஆகக் குறைந்தது. அதேபோல், ஒடிசாவில் ஒருமொழி பேசுபவர்களின் பங்கு 86% இலிருந்து 74.5% ஆகக் குறைந்தது. இதே நிலை தான் மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத் மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களிலும் நிலவுகிறது.

இதற்கு நேர்மாறாக, இந்தி முதன்மையான முதல் மொழியாக இருக்கும் மாநிலங்களில் ஒருமொழி பேசுபவர்களின் பங்கு அதிகரித்து காணப்படுகிறது. உதாரணமாக, 1991 ஆம் ஆண்டில், பிரிக்கப்படாத பீகாரில் இந்தி பேசுபவர்களில் 90.2% பேர் ஒருமொழி பேசுபவர்களாக இருந்தனர். 2011 ஆம் ஆண்டில், பிரிக்கப்பட்ட பீகாரில், இந்த எண்ணிக்கை 95.2% ஆக உயர்ந்தது. இதேபோல், ராஜஸ்தானில், இந்தி பேசுபவர்களிடையே ஒருமொழி பேசுபவர்களின் பங்கு 1991 இல் 93% ஆக இருந்து 2011 இல் 94.3% ஆக அதிகரித்தது. உத்தரபிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலும் இந்தி பேசுபவர்களிடையே இதேபோன்ற போக்கையே காண முடிகிறது.
இதே போன்று விளக்கப்படம் 2, தங்கள் தாய் மொழியைத் தவிர குறைந்தது ஒரு மொழியையாவது பேசும் மாநிலங்கள் குறித்த தரவுகளைக் காட்டுகிறது.

விளக்கப்படம் 3, தங்கள் தாய் மொழியைத் தவிர ஆங்கிலம் பேசுபவர்கள் குறித்த தரவுகளை மாநில வாரியாகக் காட்டுகிறது.

தமிழ்நாட்டில், 1991 இல் தாய்மொழி பேசுபவர்களில் 13.5% பேர் ஆங்கிலம் பேசினர், இது 2011 இல் 18.5% ஆக உயர்ந்தது. அதே சமயம், ஹரியானாவில், ஆங்கிலம் பேசும் இந்தி பேசுபவர்களின் பங்கு அதே காலகட்டத்தில் 17.5% இலிருந்து 14.6% ஆகக் குறைந்துள்ளது. இதே போக்கே மற்ற இந்தி பேசும் மாநிலங்களிலும் நிலவுகிறது.
இதன் மூலம் இந்தி பேசக்கூடியவர்கள் பெரும்பாலும் ஒரு மொழிக்கொள்கையையே பின்பற்றுகின்றனர். ஆனால் இந்தி தவிர்த்து மற்ற மொழி பேசிக்கூடியவர்கள் தாய் மொழி மற்றும் ஆங்கிலம் இரண்டையும் கற்பதில் ஆர்வமுடையோராய் இருக்கின்றனர் என்பதை தெளிவாகக் காண முடிகிறது!