YouTurn

தமிழ்நாடு செலுத்தும் வரியைவிட அதிக நிதி ஒதுக்குகிறதா ஒன்றிய அரசு? உண்மை நிலை என்ன?

ஒன்றிய அரசுக்கு பல்வேறு வகைகளில் செலுத்தும் வரியை விட தமிழ்நாடு குறைவாகவே நிதியை பெறுகிறது.

தமிழ்நாடு செலுத்தும் வரியைவிட அதிக நிதி ஒதுக்குகிறதா ஒன்றிய அரசு? உண்மை நிலை என்ன?

ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுக்கவேண்டிய நிதிப் பகிர்வை நியாயமான விதத்தில் தருவதில்லை என்று தமிழ்நாடு அரசியல் தளத்தில் தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வை தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளதை விட அதிகரிக்கவேண்டும் என்றும் குரல் எழுப்படுகிறது. 


ஆனால் தமிழ்நாடு ஒன்றிய அரசிற்கு செலுத்தும் வரியைவிட, ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அதிகமான நிதி வழங்குவதாக பாஜகவச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இந்நிலையில், பாஜகவின் தமிழ்நாடு மாநில செயலாளரான S.G.சூர்யா, “தமிழகம் கொடுக்கும் ஒவ்வொரு ரூ.1 ரூபாய்க்கும் மத்திய மோடி அரசு ரூ.1.19 திருப்பி கொடுப்பதாக” தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பரப்பிவருகிறார். 


image.png


கடந்த 2024-லிருந்து ஓராண்டாக இந்த கருத்தை பாஜகவைச் சேர்ந்தவர்கள் பரப்பிவருகிறார்கள். ஒன்றிய அரசின் நலத்திட்டங்களை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா' என்ற நிகழ்ச்சி பிரதமரால் தொடங்கப்பட்டது. ஆனால், இது மோடி ஆட்சிக்காலத்தில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்யும் விதமாக பாஜகவினரால் மாற்றப்பட்டது தனிக்கதை. இந்த  'விக்சித் பாரத் சங்கல்ப யாத்ரா' சம்பந்தமாக சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடந்த நிகழிச்சியில் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “2014-2023 காலக்கட்டத்தில் தமிழகத்திடம் இருந்து மத்திய அரசு ரூ.6.23 லட்சம் கோடி வரியாக பெற்றது; பெற்ற வரியை விட கூடுதலாக தமிழகத்திற்கு ரூ.6.69 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளோம்” பேசினார். 


image.png


நிர்மலா சீதாராமன் கூறிய இந்த தகவல் தவறானது என்று அப்போதே நமது ‘Youturn’ தளத்தில் அம்பலப்படுத்தினோம். 


“நிதி ஆணையத்தின் பரிந்துரையின் பெயரில் 2014 மோடி ஐயா ஆட்சி வந்ததில் இருந்து 2023-24 வரை தமிழ்நாட்டிற்கான Total Tax Devolution 2,88,627 கோடி ரூபாய். அதை தவிர்த்து மானியமாக (Grant) கொடுக்கப்பட்டது 2,58,338 கோடி ரூபாய். இதை தவிர கொரோனவிற்கு பிறகு ஒவ்வொரு மாநிலமும் நன்றாக வெளியே வர வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டிற்கு கொடுத்த பணம் 6,412 கோடி ரூபாய். இவற்றை எல்லாம் மொத்தம் சேர்த்தால் 6,96,666 கோடி ரூபாய் வருவதாக” கூறினார் நிர்மலா சீதாராமன்.  


ஆனால்,  நிர்மலா சீதாராமன் கூறிய இந்த மூன்று தொகைகளை கூட்டினால், ரூ.5,53,377 கோடி தான் வருகிறது. ஆனால், ரூ.6,96,666 கோடி என்ற பிழையான தகவலை அவர் கூறியுள்ளார்.  


மேலும், தமிழ்நாடு ஒன்றிய அரசிற்கு செலுத்திய வரியைப் பற்றி பேசும் போது, நேரடி வரியைப் பற்றி மட்டுமே பேசுகிறார் நிர்மலா சீதாராமன். வருமான வரி, கார்ப்பரேட் வரி ஆகிய நேரடி வரி வகையில் 2014 முதல் 2022 - 23 மார்ச் 31ம் தேதி வரை தமிழ்நாடு ஒன்றிய அரசிற்கு செலுத்திய தொகை ரூ. 6,23,713.3 கோடி என்று குறிப்பிடுகிறார். இதில் மறைமுக வரிகளான ஜிஎஸ்டி வரி, மதிப்பு கூட்டு வரி (VAT Tax), செஸ் வரி (Cess) ஆகியவற்றை சேர்க்கவில்லை. ஆனால், ஜிஎஸ்டி வரி பற்றி பேசும் போது, 2022-23ம் ஆண்டில் வசூலிக்கப்பட்ட GST வரி தொகையை மட்டும் சொல்கிறார். 2017ம் ஆண்டு முதல் எவ்வளவு GST வசூலிக்கப்பட்டது என்கிற முழு விவரத்தைச் அவர் சொல்லவில்லை. 


ஆக மேற்கூறிய விவரங்களிலிருந்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்கு சாதகமான சில விவரங்களை மட்டுமே பேசியுள்ளார் என்பது தெளிவாகிறது. அவரது இந்த கணகீட்டின் படியே எடுத்துக்கொண்டாலும் ரூ.5,53,377 கோடி  என்பது தமிழ்நாடு கடந்த 2014 முதல் 2023 மார்ச் வரையில் செலுத்திய நேரடி வரியான ரூ. 6,23,713.3 கோடியை விட குறைவாகத் தான் உள்ளது. 


image.png


ஆனாலும், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய இந்த ஒருதலைபட்சமான விவரங்களை வைத்து பாஜகவின் அண்ணாமலை, S.G.சூர்யா போன்றவர்கள் திரும்பத் திரும்ப தவறான தகவலை பரப்பி வருகிறார்கள்


மேலும், ஒன்றிய அரசு கொடுத்துள்ள தரவுகளின்படி சமீபத்திய நான்கு நிதியாண்டுகளை கணக்கில் கொண்டு பார்த்தாலும், தமிழ்நாடு செலுத்திய வரியைவிட குறைவாகவே நிதியை பெற்றுள்ளது தெரியவருகிறது. 


2018-19 நிதியாண்டு முதல் 2021-22 வரையில் மட்டுமே ரூ. 2,93,608 கோடி தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு நேரடி வரியாக செலுத்தியுள்ளது. மேலும், இதே நிதியாண்டுகளில் தமிழ்நாட்டிலிருந்து கிடைத்த ‘CGST’ வரி ரூ. 76,189 கோடி ஆகும். இதே காலகட்டத்தில் வசூலிக்கப்பட்ட செஸ் வரி ரூ. 25,724 கோடி ஆகும். ஆக மொத்தம் ரூ. 3,95,521 கோடி தமிழ்நாடு இந்த நான்கு நிதியாண்டுகளில் ஒன்றிய அரசுக்கு வரியாக செலுத்தியுள்ளது. 


ஆனால், ஒன்றிய அரசே கொடுத்துள்ள தரவுகளின்படி, 2018-19 முதல் 2021-22 வரையில் உள்ள நான்கு நிதியாண்டுகளில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுத்த நிதி (Tax Devolution) ரூ. 1,19,414 கோடி மட்டுமே என்பது தெரிய வருகிறது. இதில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு கொடுத்த மானியங்கள் கடன்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து ஒன்றிய அரசுக்கு பல்வேறு வகைகளில் செலுத்தும் வரியை விட தமிழ்நாடு குறைவாகவே நிதியை பெறுகிறது என்பது  தெரியவருகிறது. மேலும், 2024ஆம் ஆண்டில் நிர்மலா சீதாராமன் பேசிய ஒருதலைபட்சமான தகவலின் அடிப்படையில் பாஜகவினர் தொடர்ந்து தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை