YouTurn

’முதல்வர் மருந்தகம் திட்டம்’ ஒன்றிய அரசு திட்டத்தின் நகலா?

மலிவு விலை மருந்தகம் என்னும் திட்டம் மோடி ஆட்சியில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஒன்றல்ல. அதைத் தமிழ்நாடு அரசு நகல் எடுக்கவுமில்லை.

’முதல்வர் மருந்தகம் திட்டம்’ ஒன்றிய அரசு திட்டத்தின் நகலா?

கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சுதந்திர தின உரையில், "பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் தமிழ்நாடு முழுவதும் துவங்கப்படும்" என அறிவித்தார்.  


இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம், ’முதல்வர் மருந்தகங்கள்’ அமைக்க விரும்பும் தொழில்முனைவோர் இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம் என்றும் அதில் தேர்வு செய்யப்படுவோருக்கு 3 லட்ச ரூபாய் வரை மானிய உதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நேற்று (பிப்ரவரி 24) மலிவு விலையில் மருந்துகளை விற்கக்கூடிய 1,000 'முதல்வர் மருந்தகங்கள்’ துவங்கப்பட்டது. 

‘முதல்வர் மருந்தகம்’ பற்றிய இந்த செய்திக்கு எதிர்வினையாற்றும் விதமாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ‘இந்த திட்டம் பிரிதான் மந்திரி பாரதியா ஜனௌஷதி பரியோஜனா என்னும் ஒன்றிய அரசுத் திட்டத்தினை நகல் எடுத்துச் செயல்படுத்தப்பட்டுள்ளது’ என்று தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருந்தார். 


மேலும் தமிழ்நாடு பாஜக, ‘பிரதமரின் மலிவு விலை மருந்தகங்களின் மீது ஸ்டிக்கர் ஒட்டி “முதல்வர் மருந்தகம்” என்ற பெயரில் தமிழகத்தில் கொண்டுவந்துள்ளது திமுக அரசு’ என்று தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளது. 


பிரிதான் மந்திரி பாரதியா ஜனௌஷதி பரியோஜனா’ திட்டம் முன்னோடியானதா?


அனைவருக்கும் மலிவு விலையில் தரமான ஜெனரிக் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘ஜன் ஔஷதி’ என்ற திட்டம் நவம்பர், 2008ஆம் ஆண்டு இந்திய அரசின் ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழுள்ள மருந்துத் துறையால் தொடங்கப்பட்டது என இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த 2015 செப்டம்பர் மாதம் இந்த திட்டம் புதுப்பிக்கப்பட்டு 'பிரதான் மந்திரி ஜன் ஔஷதி யோஜனா' (PMJAY) என்று பெயர் மாற்றப்பட்டது. மேலும், 2016 நவம்பர் மாதம் இத்திட்டத்திற்கு புதிய உத்வேகம் கொடுக்கவேண்டும் என்று சொல்லி "பிரதான் மந்திரி பாரதிய ஜனௌஷதி பரியோஜனா (PMBJP)” என்று மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 


இதிலிருந்து, மக்களுக்கு மலிவு விலையில் பொதுப்பெயர் மருந்துகளைக் கொண்டு சேர்க்கும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் மோடி தலைமையிலான பாஜக ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த பின்னர் புதிதாகத் தொடங்கப்பட்டதல்ல என்று நாம் தெரிந்துகொள்கிறோம். இது மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலே கொண்டுவரப்பட்ட திட்டமாகும். 

தமிழ்நாட்டில் இதுபோன்ற மலிவு விலை மருந்தகங்கள் எப்போதிலிருந்து செயல்பட்டு வருகிறது என்பது குறித்து இணையத்தில் தேடினோம். 2010 ஆகஸ்ட் மாதம் ’தினமணி’ல் இதுகுறித்து வெளியான செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. அதில், ’சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 50 மருந்துக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் 6 கூட்டுறவு மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக’ அப்போதைய கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி கூறியதாக இச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 


கடந்த 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, “ஏற்கெனவே கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் 210 மருந்தகங்களுடன் கூடுதலாக 100 'அம்மா மருந்தகங்கள்' புதியதாகத் தொடங்கப்படும். இதற்கென 20 கோடி ரூபாய் மாநில விலை நிலைப்படுத்தும் நிதியத்திலிருந்து பயன்படுத்தப்படும்” என்று அறிவித்தார். அதற்கடுத்த ஆண்டுகளில் தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் ’அம்மா மருந்தகங்கள்’ திறக்கப்பட்டது குறித்து செய்திகளை காணமுடிகிறது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து மலிவு விலை மருந்தகங்கள் என்பது தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் இருக்கிறது என்பது தெளிவாகிறது. முதலில் கூட்டுறவுத் துறையால் நடத்தப்பட்டது, பின்னர் ’அம்மா மருந்தகம்’ என்றும் தற்போது ’முதல்வர் மருந்தகம்’ என்றும் அழைக்கப்படுகிறது. 


இதிலிருந்து, தமிழ்நாடு பாஜகவும், அண்ணாமலையும் சொல்வது போல் இந்த மலிவு விலை மருந்தகம் என்னும் திட்டம் மோடி ஆட்சியில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஒன்றல்ல. அதைத் தமிழ்நாடு அரசு நகல் எடுக்கவுமில்லை என்பது நிரூபணமாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை