அதிக ஆபத்து நிறைந்ததா மயோனைஸ்? தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு தடை ஏன்?
முறையற்ற வகையில் மயோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மயோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாகக் கூறி தமிழ்நாடு அரசு மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் தற்போது மயோனைஸ் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இது பொதுவாக பச்சை முட்டையின் மஞ்சள் கரு, தாவர எண்ணெய், வினிகர் மற்றும் சில மசாலாப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் வழுவழுப்பான அரை திடப்பொருள் வடிவில் இருக்கும் ஒரு உணவுப்பொருள்.
தந்தூரி சிக்கன், பார்பிகியூ, சவர்மா, பிரெஞ்ச் பிரைஸ் மற்றும் கிரில் உணவுகள் தொடங்கி தற்போது காய்கறி சாலட் வரை மயோனைஸ் முக்கிய உணவு சேர்க்கையாக மாறியுள்ளது. இந்நிலையில் முறையற்ற வகையில் மயோனைஸ் தயார் செய்வது மற்றும் முறையாக சேமித்து வைக்கப்படாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் மயோனைஸ் பொது சுகாதாரத்திற்கு அதிக பாதிப்பை விளைவிப்பதாகக் கூறி தமிழ்நாடு அரசு மயோனைஸுக்கு ஓராண்டு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் தடை உத்தரவு:
தமிழ்நாடு அரசின் அரசிதழில் மயோனைஸுக்கு தடை விதிப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், “உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம், 2006-ன் பிரிவு 30 (2) (a) படி முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் வகைகளுக்கு ஓராண்டு காலம் தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் நலன் கருதி தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும், மயோனைஸ் உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, விநியோகம் செய்வது, விற்பனை செய்வது உள்ளிட்டவைகளுக்கு தடை. இந்தத் தடை உத்தரவு ஏப்ரல் 8-ம் தேதியிலிருந்து ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், “சால்மோனெல்லா டைபிமுரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சயா கோலி மற்றும் லிஸ்டீரியா மொனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், முட்டைகளால் செய்யப்பட்ட மயோனைஸ் உணவு மூலம் பரவும் நோய்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் முட்டையில் செய்யக்கூடிய மயோனைஸில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து மிக அதிகம்” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கேரளா மற்றும் தெலங்கானாவிலும் தடை:
தமிழ்நாட்டில் மயோனைஸுக்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்பே தெலங்கானா மற்றும் கேரளாவிலும் மயோனைஸ் தயாரிக்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் 2024 இல், குறிப்பாக ஷவர்மா தயாரிக்கும் உணவகங்களில் சாப்பிட்ட பலருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், தெலங்கானா மயோனைஸுக்கு ஒரு வருட கால தடையை விதித்தது.
தமிழ்நாடு, தெலங்கானாவிற்கு முன்பே 2023-ல் மயோனைஸுக்கு தடை விதித்தன் மூலம், மயோனைஸுக்கு தடை விதித்த முதல் மாநிலமாக கேரளா உள்ளது. உணவு நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதைக் கண்டறிந்த ஆய்வக சோதனைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அதிக ஆபத்துகள் நிறைந்த மயோனைஸ்:
பச்சையான அல்லது சமைக்கப்படாத முட்டைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதன் மூலம் ஏற்படும் இரைப்பை மற்றும் குடல் சார்ந்த நோய்களுக்கு முக்கிய காரணியாக சால்மோனெல்லா என்னும் பாக்டீரியா உள்ளது.
பச்சை முட்டையில் இருந்து தயாரிக்க்கப்படும் பொருட்களை உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து சுகாதார நிபுணர்கள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் 2013 மற்றும் 2015 க்கு இடையில் சால்மோனெல்லா பாக்டீரியா குறித்து செய்யப்பட்ட ஆய்வில், சால்மோனெல்லா மூலம் பரவும் நோய்களில் 58% முட்டை சார்ந்த உணவுகளின் மூலமே ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மற்றுமொரு ஆய்வில் 1973 மற்றும் 2009 க்கு இடையில் 1328 பேருக்கு சால்மோனெல்லா என்டெரிடிடிஸ் தொற்றுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, 4325 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், 104 இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேலும் 2009 ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்தில் மொத்தம் 6.2 மில்லியன் சால்மோனெல்லோசிஸ் வழக்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை பச்சை முட்டை சார்ந்த உணவுகளான மயோனைஸ் ஆகியவற்றை உண்டதால் தான் ஏற்பட்டுள்ளன. இதன் மூலம் சால்மோனெல்லா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், பச்சை முட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் போன்ற உணவுகளின் மூலம் உலக அளவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதை அறிய முடிகிறது.
இத்தகைய சால்மோனெல்லா தொற்றுடன் கூடிய மயோனைஸ் சாப்பிட்டால், நீடித்த வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி, காய்ச்சல் போன்ற சிக்கல்கள் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் மயோனைஸின் முக்கிய மூலப் பொருள், பச்சை முட்டை மற்றும் தாவர எண்ணெய் ஆகிய இரண்டும் மட்டுமே. இவற்றில் நிறைய கலோரிகள் காணப்படுகின்றன. அதே நேரத்தில், அதில் உள்ள கொழுப்பின் அளவும் மிக அதிகமாக உள்ளது. எனவே இவை உடலுக்கு தீங்கையே ஏற்படுத்துகின்றன. மேலும் அதிகமாக மயோனைஸ் சாப்பிடுவது உங்களை உடல் பருமனாக மாற்றும். இது இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கிறது.
நீங்கள் ஒவ்வொரு நாளும் நிறைய மயோனைஸை சாப்பிட்டால், அது நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிப்பதோடு, மயோனைஸில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்களின் அளவு மிக அதிகமாக உள்ளதால், இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே தமிழ்நாடு அரசின் இந்த தடை உத்தரவு, வரவேற்கத்தக்கதே என்கின்றனர் மருத்துவர்கள்!