YouTurn

ஆலைகள் மூடப்பட்டதற்கு தொழிற்சங்கங்கள்தான் காரணமா?

சந்தை நிலைமைகளாலும், தொழில்நுட்ப மேம்படுத்தல் இல்லாததாலும், வரி பிரச்சனைகளாலும், சூற்றுச்சூழல் பிரச்சனைகளாலும் ஆலைகள் மூடப்பட்டன.

ஆலைகள் மூடப்பட்டதற்கு தொழிற்சங்கங்கள்தான் காரணமா?

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதியிலிருந்து சென்னையின் புறநகர் பகுதியான சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் ஆலைத் தொழிலாளர்கள் மேம்பட்ட வேலை நிலைமைகளுக்காகவும், புதிதாக அமைக்கப்பட்ட தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வலியுறுத்தியும் போராடி வந்தனர். அக்டோபர் 9, 2024 அன்று போராடிய தொழிலாளர்களை காவல்துறை கைது செய்ததால், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் பற்றி ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. 


கடந்த இரண்டு நாட்களாக ’ஆலைகளில் தொழிற்சங்கம் அமைக்கப்படுவதால்தான் ஆலை நஷ்டமடைந்து மூடப்படுகிறது அல்லது வேறு மாநிலங்களுக்கு ஆலை இடமாற்றம் செய்யப்படுகிறது’ என்ற வகையில் சமூக வலைதளங்களில் பலரும் பேசி வருகிறார்கள். மேலும், தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் சாம்சங் நிறுவனம் ஆலையை உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டா நகருக்கு இடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் பரப்பப்படுகிறது. 



ஆனால், சாம்சங் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் “உற்பத்தி தளத்தை தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்யும் திட்டம் தங்களுக்கு இல்லை” என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளனர். 


இதற்கிடையில், ’ஊடகவியலாளர் குபேந்திரன்' என்பவர் பாலிமர் செய்திக்கு அளித்த பேட்டி ஒன்று யூட்யூப் தளத்தில் வெளியானது. ”CITU உள்ளே வந்துவிட்டால் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்துவார்கள். கோயம்புத்தூரில் ப்ரிகோல், விஸ்கோஸ் எதற்காக மூடப்பட்டது? சென்னையில் பின்னி மில், ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ், நோக்கியா மூடப்பட்டதற்காக காரணம் என்ன?... CITU உள்ளே வந்துவிட்டால் நிறுவனம் நடந்ததாக வரலாறே இல்லை” என்று குபேந்திரன் பேசியிருந்தார். இதனை அடிப்படையாக கொண்டு ’சங்கம் அமைக்கப்பட்டதால்தான் ஆலைகள் மூடப்படிகின்றன’ என்று எக்ஸ் தளத்தில் பலரும் பதிவிட்டிருந்தனர்.



ஆலைகளில் சங்கம் அமைக்கப்படுவதும் போராட்டங்கள் நடப்பதும் பொதுவான ஒன்றுதான். ஆனால் சங்கம் அமைக்கப்பட்டதால்தான் ஆலைகள் மூடப்பட்டன என்று சொல்வதை நாம் கவனமாக ஆராயவேண்டும். அதனால், அவர் கூறிய ஒவ்வொரு நிறுவனங்களைப் பற்றிய செய்திகளையும் ஆராய்ந்தோம்.


2013ஆம் ஆண்டு மார்ச் மாதம், நோக்கியா தயாரிக்கும் அலைபேசிகளில் பயன்படுத்தும் மென்பொருளுக்கான ராயல்டியாக அதன் தாய் நிறுவனத்திற்கு செலுத்திய தொகைக்கு வரி செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக வருமான வரித்துறை நோக்கியா நிறுவனத்திடம் 2,080 கோடி ரூபாய் கோரியது. இந்த பிரச்சனையின் போக்கில்தான் நோக்கியா தனது சாதனங்கள் மற்றும் சேவைகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பதாகவும், முடிவாக சென்னை நோக்கியா ஆலையை மூடுவதாகவும் அறிவித்தது.



இதிலிருந்து, நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதில் தொழிற்சங்கத்தின் பங்கு எந்தவகையிலும் இல்லை என்பது தெளிவாகிறது


’The New Indian Express’ல் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சென்னை ’பின்னி மில்’ வீழ்ச்சிக்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது, காலாவதியான இயந்திரங்கள், தொழிலாளர் பிரச்சனைகள் மற்றும் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளத் தவறிய நிர்வாகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 'Madras Musings' என்னும் பத்திரிக்கை ’மாறிவரும் காலத்துடன் பின்னி ஆலையின் தயாரிப்புகள் ஒத்திசைவாகாமல் இருந்தது. நிறுவனம் புதிய இயந்திரங்களில் முதலீடு செய்ய முடியவில்லை, புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முடியவில்லை’ என்று எழுதியுள்ளது. மேலும், காலனிய காலமான 1920களிலே பின்னி ஆலை நிர்வாகத்திற்கும்  ‘மெட்ராஸ் யூனியன்’ என்னும் சங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற போராட்டங்கள் வரலாற்று குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது ஆலை வெற்றிகரமாகவே செயல்பட்டுவந்தது. 

தொழில்துறை மற்றும் நிதி மறுசீரமைப்பு வாரியம் (BIFR) 1993ஆம் ஆண்டில் பின்னி ஆலையை Sick Unit என்ற வகையினத்தில் சேர்த்திருந்தது. அதாவது, பின்னி ஆலை தனது ஒட்டுமொத்த நிகர மதிப்பிற்கு சமமாகவோ அல்லது அதற்கு கூடுதலாகவோ நஷ்டத்தில் இயங்கி வந்தது என்று இதற்குப் பொருள். 


மேற்கூறிய செய்திகளின் அடிப்படையில், பின்னி ஆலையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நிர்வாகம் செய்படவில்லை என்பதுதான். 


கோயம்புத்தூர் ப்ரிகோல் ஆலையில் 2017ஆம் ஆண்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தொழிலாளர் சங்கம், ஆலை நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், போராடிய தொழிலாளர்கள்மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்கமாட்டோம் என்று ஆலை நிர்வாகம் உறுதியளித்தது. ஆனால் வாக்குறுதியை மீறி, 302 தொழிலாளர்களை உத்தரகாண்ட், ஆந்திரா, மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் உள்ள ஆலைகளுக்கு இடமாற்றம் செய்வதாக அறிவித்தது. இவ்வாறு தொழிலாளர்களை இடமாற்றம் செய்து சங்கத்திற்கான ஆதரவுதளத்தை சிறுபான்மையாக்க முயற்சித்தது. இந்த பிரச்சனை தொழிற்துறை தீர்ப்பாயம்வரை கொண்டு செல்லப்பட்டது. இந்த வழக்கில் தொழிற்துறை தீர்ப்பாயம், ‘தொழிலாளர்களை பணி இடமாற்றம் செய்தது நியாயமற்றது என்றும், வழக்கிற்காக செலவுகளை ஆலை நிர்வாகம் செலுத்தவேண்டும் என்றும், தொழிலாளர்களை மறுபடியும் வேலைக்கு சேர்த்துக்கொள்ள வேண்டும்' என்று தீர்ப்பளித்தது. 



மேலும், ப்ரிகோல் ஆலை இன்னும் கோயம்புத்தூரில் இயங்கிவருகிறது. அது மூடப்படவில்லை. 


கோவை மாவட்டத்தின் சிறுமுகை பகுதியில் இயங்கி வந்த சவுத் இந்தியா விஸ்கோஸ் (SIV) இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை பவானி ஆற்றில் விடுவதை 1997ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுட்டிக்காட்டியது. இந்த சுத்திகரிக்கப்படாத கழிவுகளால் சுற்றிலும் உள்ள கிராமங்களில் குடிநீர், விவசாயம் என அனைத்தும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆலை நிர்வாகம் கழிவு நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்தது. சில ஆண்டுகளுக்கு பிறகு நஷ்டம் காரணமாக,  தொழில்துறை மற்றும் நிதி மறுசீரமைப்பு வாரியத்தால் (BIFR) 2003 ஆம் ஆண்டு Sick Unitஆக அறிவிக்கப்பட்டது. பின்பு, அதன் சொத்துகளை விற்று கடனை அடைப்பதாக செய்தி வந்தது. 


விஸ்கோஸ் ஆலை வீழ்ச்சியடைந்தற்கும் அதன் சொத்துக்கள் விற்கப்பட்டதற்கும் எந்தவகையிலும் தொழிற்சங்கம் காரணமாக இருக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாககிறது.


சென்னை பெருங்களத்தூரில் செயல்பட்டு வந்த  ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் 1980களில்  சிறப்பாக செயல்பட்டு வந்தது. 1980களின் பிற்பகுதியில், இந்திய அரசு தானியங்கி துறையின் சந்தையை புதிய போட்டியாளர்களுக்கு திறந்துவிட்டது. இது 1980களின் தொடக்கத்தில் இருந்து மாறிவந்த இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கையின் ஒரு அங்கமாக செய்யப்பட்டது. இதனால், DCM, Eicher போன்ற நிறுவனங்கள் ஜப்பானிய நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு தானியங்கி துறையில் முக்கிய போட்டியாளர்களாக வளர்ந்தனர்.


மாறிவரும் இந்த போட்டி நிலைமைகளையும், சந்தை நிலவரங்களையும்  ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் உடனடியான உள்வாங்கிக்கொள்ளவில்லை. புதிய வகை கார்களை தயாரிக்கும் அதன் யோசனைகள் சந்தையில் எடுபடவில்லை என்று 'Madras Musings' என்ற பத்திரிகை எழுதியுள்ளது. இப்படி மாறிவந்த சந்தையின் போட்டி நிலைமைகளும், நிர்வாகத்தின் செயல்தந்திரங்களும் தான் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தது.




மேற்கூறிய விவரங்கள் அனைத்தையும் நாம் தொகுத்துப் பார்க்கும்போது, தொழிற்சங்கம் அமைப்பட்டதால் நல்ல நிலையில் இயங்கிவந்த ஆலைகள் மூடப்பட்டதாக பரப்பப்படும் தகவல் பொய்யானது என்று தெரியவருகிறது.


References:

1.) https://www.business-standard.com/article/companies/a-timeline-of-nokia-s-tax-problems-in-india-114103100511_1.html

2.) https://www.newindianexpress.com/cities/chennai/2010/Nov/19/the-legendary-past-of-binny-204152.html

3.) https://www.madrasmusings.com/vol-31-no-22/the-fall-and-fall-of-binny/

4.) https://simplicity.in/coimbatore/english/news/87980/Labour-tribunal-rules-judgement-in-favor-of-workers-in-Pricol-Issue

5.) https://www.business-standard.com/article/companies/south-india-viscose-to-sell-off-properties-106082201091_1.html

6.) https://www.madrasmusings.com/vol-31-no-24/standard-motors-do-you-remember-the-vanguard/


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை