YouTurn

இந்தியாவில் உள்நாட்டு புலம்பெயர்தல்: ஓர் பார்வை!

தொழில்மயம், சேவைத்துறை நன்கு வளர்ந்த நகரமயமாக்கப்பட்ட டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா போன்ற மாவட்டங்களை நோக்கியே அதிக புலம்பெயர்ச்சி நடந்திருக்கிறது.

இந்தியாவில் உள்நாட்டு புலம்பெயர்தல்: ஓர் பார்வை!

தொழிற்துறையும் சேவைத் துறையும் போக்குவரத்து சாதனங்களும் பெருமளவு வளர்ந்துவிட்ட இன்றைய காலத்தில் ’புலம்பெயர்தல்’ (Migration) என்பது அடிப்படையான பொருளாதார நடவடிக்கையாகும். நாட்டின் பொருளாதாரத்தில் மனிதவளம் (Human Resource)  என்பது மிக முக்கியமான அம்சமாக இருக்கும் போது ’புலபெயர்தல்’ பற்றிய துல்லியமான புரிதல் இல்லாமல் புதிய திட்டங்களை வகுக்க முடியாது. அந்த வகையில் இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையில் நடக்கும் புலம்பெயர்ச்சி பற்றி பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு சார்ப்பில் கடந்த 2024 டிசம்பர் மாதம் ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.



முதலில் 2011ஆம் ஆண்டு வரையிலான மக்கள் தொகை கணக்கெடுப்புகளின் தரவுகளைக் கொண்டு புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை அறிக்கை கவனப்படுத்துகிறது.


பொருளாதாரம், வேலை வாய்ப்பு ஆகிய காரணங்களுக்காக புலர்பெயர்ந்து செல்வது ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் அதிகரித்தே வந்துள்ளது. 2001ஆம் ஆண்டில் 3.27 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை, 2011 ஆண்டில் 4.5 கோடியாக உயர்ந்துள்ளது. புலம் பெயர்ந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் விகிதம் (Rate) 1991-2001 பத்தாண்டுகளில் 2.7 சதவீதமாக இருந்தது. இது 2001-2011 பத்தாண்டுகளில் 3.7 சதவீதமாக உயர்ந்தது.   


1991-2001 வரையிலான ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக தொழிலாளர் பட்டாளத்தின் (Work Force) எண்ணிக்கை 3.17 கோடியிலிருந்து ஆண்டுக்கு 2.6% என்ற வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து 4.02 கோடியாக வளர்ந்தது. 2001-2011 வரையிலான ஆண்டுகளில் 4.02 கோடியாக இருந்த தொழிலாளர் பட்டாளத்தின் எண்ணிக்கை 4.82 கோடியாக வளர்ந்தது. இதன் வளர்ச்சி விகிதம் 1.99% மட்டுமே ஆகும். இது சென்ற பத்தாண்டைவிட குறைவானதாகும்.



இதிலிருந்து, தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் விகிதம் குறைவாகவும், புலம்பெயர்ந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் விகிதம் அதிகமாகவும் இருப்பதை நாம் பார்க்கிறோம். இது ஒட்டுமொத்த தொழிலாளர் பட்டாளத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் (Migrant Labours) எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காட்டுவதாக இருக்கிறது. 


பல்வேறு காரணிகளையும் போக்குகளையும் கொண்டிருக்கும் சிக்கலான நிகழ்வுப்போக்கான ‘புலம்பெயர்தலை’ முடிந்தளவு துல்லியமாக ஆய்வு செய்ய, இரயிலில் முன்பதிவில்லாமல் எடுக்கப்படும் பயணச்சீட்டுகள்  ‘Unreserved Ticketing System (UTS)’ பற்றிய தரவுகளைக் பயன்படுத்திருக்கிறார்கள். இந்திய இரயில்வே பயணத்தில் முன்பதிவில்லா பயணச்சீட்டுதான் மிக மலிவான கட்டணம் என்பதால் இதனைத்தான் உடலுழைப்பை நம்பி வாழும் தொழிலாளர்கள் (Blue Collar Labours) பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.


இந்த தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் அதிகமான புலம்பெயர் மக்களை உள்ளிழுத்துக்கொள்ளும் (Accommodating In-Migrants) மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 8ஆவது இடத்தில் இருக்கிறது.  மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்கள் மட்டுமே ஒட்டுமொத்த புலம்பெயர் மக்களில் 48 சதவீதம் வரை உள்ளிழுத்துக்கொள்வதாக இருக்கிறது. 



"இந்தியாவில் புலம்பெயர்வு மற்றும் மனித வளர்ச்சி" என்ற கள ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட ஆய்வுரை, புலம்பெயர்ச்சி பற்றி குறைமதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறது. 2009ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வுரையில் இந்தியாவில் தோராயமாக 10 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கிறது.


2016-17 ஆண்டு எடுக்கப்பட்ட பொருளாதார கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் தொழிலாளர் பட்டாளம் (work force) 50 கோடியை தாண்டிவிடும் என்றும், அதில் 20% அதாவது 10 கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் அடங்குவார்கள் என்றும் எடுத்துரைக்கிறது. 


டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா போன்ற தொழில்மயம், சேவைத்துறை நன்கு வளர்ந்த நகரமயமாக்கப்பட்ட மாவட்டங்களை நோக்கியே அதிக புலம்பெயர்ச்சி நடந்திருக்கிறது. அதேவேளையில், 2011 மக்களத்தொகைக் கணக்கெடுப்பின் போது ஒட்டுமொத்த ஜனத்தொகையில் 37.64 சதவீதமாக இருந்த புலம்பெயர்ச்சி விகிதம் தற்போது 28.878 சதவீதமாக குறைந்திருக்க வாய்ப்பிருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது.


பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் நகரங்களுக்கு மட்டுமல்லாமல் சிறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பரவும் போது, புலம்பெயர்ச்சி குறைவதாக கல்விப்புல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புலம்பெயரும் மக்களின் பூர்வீக கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் பொருளாதார வாய்ப்புகள் பெருகும் போது, அவ்விடத்தின் மக்கள் பிற இடங்களுக்கு புலம்பெயர்வது குறைகிறது. ஏனெனில், பொருளாதார வாய்ப்புகளுக்காக புலம்பெயரும் நபர்களே அதிகமாக உள்ளனர். 


இந்த புலம்பெயர்தலில் மிக பெரும்பான்மையாக அதாவது, 75 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது சொந்த இடத்தில் இருந்து 500 கி.மீ தொலைவிற்குள்ளாகவே புலம்பெயர்ந்திருப்பது தெரியவருகிறது. மிக தொலைவான தூரத்திற்கு இருந்து புலம்பெயர்வது தொழிலாளர்களுக்கு மிக அதிக செலவு பிடிப்பதாக இருப்பதால் புலம்பெயர்தலில் அது எதிர்மறை தாக்கம் செலுத்துவதாக இருக்கும்.


2021-ல் செய்திருக்கவேண்டிய மக்களத்தொகை கணக்கெடுப்பு இன்னும் செய்யப்படாமல் இருக்கிறது. இந்த மக்கள்த்தொகை கணக்கெடுப்பு செய்யப்படும் போது இந்தியாவில் உள்நாட்டு புலம்பெயர்ச்சி பற்றி இன்னும் துல்லியமான சித்திரம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை