YouTurn

அதிநவீன வசதிகளுடன் கிண்டியில் இயங்கும் இந்தியாவின் முதல் வயது முதியோருக்கான அரசு மருத்துவமனை!

அதிநவீன வசதிகளுடன் கிண்டியில் இயங்கும் இந்தியாவின் முதல் வயது முதியோருக்கான அரசு மருத்துவமனை!
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 103.8 மில்லியன் முதியவர்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 8.6% ஆகும். குறிப்பாக முதியவர்களின் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டில் நாட்டில் 193 மில்லியன் முதியோர்கள் இருப்பார்கள் என்றும், இது மொத்த மக்கள் தொகையில் 13.1% ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.



மேலும் இந்தியாவில் குழந்தை பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்ததன் விளைவாக, இங்கு இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியோர்களின் பங்கு வருங்காலத்தில் கடுமையாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 2050-க்குள் இந்தியாவில் மூத்த குடிமக்களின் பங்கு 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும், அதாவது இந்தியாவில் ஐந்தில் ஒருவர் முதியவராகவே இருப்பர்.

எனவே முதியோர்களை ஆதரிப்பதற்கான திட்டங்களையும், அவர்களுக்கான வாழ்க்கை தரத்தையும் உயர்த்தவேண்டியது அரசின் தலையாய கடமையாக உள்ளது. அதன்படி இந்திய அரசு 2010-11 ஆம் ஆண்டில் முதியோர்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கான தேசியத் திட்டத்தை (NPHCE) அறிமுகப்படுத்தியது, இது மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வாய்ந்த விரிவான சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளை மாநில அரசுடன் சேர்ந்து பல்வேறு நிலைகளில் வழங்க திட்டமிட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகள் அனைத்தும் இலவசமாகவோ அல்லது அதிக மானியத்துடனோ வழங்க திட்டமிடப்பட்டன.

இதன் முதல்கட்டமாக இந்தியாவின் முதல் வயது முதியோருக்கான மருத்துவமனை 2007 ஆம் ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டு பல்வேறு நிலைகளைக் கடந்து, சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.157 கோடியில் செலவில் "தேசிய முதியோர் நல மையம் (மருத்துவமனை)" என்ற பெயரில் கடந்த பிப்ரவரி 25-ம்தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.



இந்தியாவின் முதல் வயது முதியோருக்கான மருத்துவமனை:

முதியோர்களின் சுகாதாரப் பாதுகாப்புக்கான தேசியத் திட்டத்தின் (NPHCE) ஒரு பகுதியாக தேசிய முதியோர் நல மையம் குறித்த அறிவிப்பு கடந்த 2007 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டாலும், கட்டுமானப் பணிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு தான் தொடங்கப்பட்டன. ஆனால் 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதன் விளைவாக, தேவை கருதி தமிழ்நாடு அரசு இதை கொரோனா மருத்துவமனையாக மாற்றியது. பின்னர் அரசு பல்வேறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு தற்போது இதை இந்தியாவின் முதல் வயது முதியோருக்கான மருத்துவமனையாக திறந்துள்ளது.

சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள இந்த தேசிய முதியோர் நல மருத்துவமனையில் மொத்தம் 60 மருத்துவர்கள், 10 உயர் சிறப்பு மருத்துவர்கள், 216 செவிலியர்கள் தவிர பல இயன்முறை சிகிச்சையாளர்களும் (Physiotherapists) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் முதியோர்களுக்கென்று பிரத்யேகமாக இதயம், சிறுநீரகம், மூளை, மனநலம், பார்வைத்திறன் குறைபாடு, ஞாபக மறதி, நிலை தடுமாறி கீழே அடிக்கடி விழுதல், எலும்புத் தேய்மானம், சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தல், நாள்பட்ட வலி உள்ளிட்ட நோய்களை கண்டறியும் சிகிச்சைக்கான சிறப்பு பிரிவுகள் இங்கு 24 மணி நேரமும் இயங்குகின்றன.

இங்கே அதிநவீன வசதிகளுடன் 40 தீவிரசிகிச்சைப் பிரிவு, 200 படுக்கைகள், 5 அறுவை சிகிச்சை அரங்குகள், 20 கட்டண வார்டுகளும் உள்ளன. ஆரம்பத்தில் இந்த மருத்துவமனை குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு அதிகமாக இல்லை. தற்போது மருத்துவமனை திறக்கப்பட்ட ஒரு மாதத்திலேயே, இங்கு 8,673 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பதையும், உள் நோயாளிகளாக மட்டும் இதுவரை 261 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.



மேலும் இங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டணப் படுக்கைகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு அறையிலும் குளிர்சாதன அறை, தொலைக்காட்சிப் பெட்டி, ஷோபா, மேசை, நாற்காலி மற்றும் பீரோ போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கட்டண அறையில் உணவுடன் சேர்த்து ஒருநாளைக்கு ரூ.900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 கட்டண அறைகள் இயங்குகின்றன.

இது தவிர மாலை நேரங்களில் முதியவர்கள் ஓய்வு எடுப்பதற்கும், இளைப்பாறுவதற்கும் வசதியாக இங்கு நூலகம் அமைக்கப்பட்டிருக்கிறது. நூலகம் மட்டுமல்லாமல் கேரம் போர்டு, செஸ், பல்லாங்குழி போன்ற விளையாட்டு வசதிகளும் இங்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு முதுமையியல், முதியோர் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரங்கள்:

TIE - India’s birth crisis: What the Lancet forecast of fertility rate dip to 1.29 by 2050 means


MOSPI - Elderly in India 2021 Census

PIB - Healthcare of Elderly People

TH - Geriatric patient inflow rises at the National Centre of Ageing
பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை