YouTurn

உலக மதுபான சந்தை வளர்ச்சியில் இந்தியா முதலிடம்! அதிகளவில் மது அருந்தும் நாடாக மாறுகிறதா இந்தியா?

தொடர்ந்து 3-வது ஆண்டாக இந்தியா மது வகைகள் பயன்பாட்டில் அதிக வளர்ச்சி அடைந்த நாடாக இருந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்தியாவில் மதுபானங்கள் பயன்படுத்துவது 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக IWSR இன் அறிக்கை கூறுகிறது.

உலக மதுபான சந்தை வளர்ச்சியில் இந்தியா முதலிடம்! அதிகளவில் மது அருந்தும் நாடாக மாறுகிறதா இந்தியா?

உலகளாவிய மதுபான ஆராய்ச்சி நிறுவனமான IWSR இன் தரவுகளின்படி, இந்தியா மீண்டும் மதுபானத் துறையில் வலுவான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் (ஜனவரி-ஜூன்), சீனா, அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, மெக்ஸிகோ, ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், போலந்து, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, கொலம்பியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட 20 உலகளாவிய சந்தைகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 


2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இந்தியாவின் மொத்த பான மதுபான (TBA) அளவு ஆண்டுக்கு 7% அதிகரித்து, 440 மில்லியன் 9-லிட்டர் கேஸ் என்ற அளவைத் தாண்டியுள்ளது. 9-லிட்டர் கேஸ் என்பது IWSR ஆல் பயன்படுத்தப்படும் ஒரு நிலையான அளவீட்டு அலகு ஆகும். இது 750 மில்லி லிட்டர் அளவுள்ள 12 பாட்டில்களுக்கு சமமான ஒரு அளவுக்கூறு (12 × 0.75 L = 9 L).



இந்திய விஸ்கி தொடர்ந்து, 7% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஜனவரி மற்றும் ஜூன் 2025 க்கு இடையில் 130 மில்லியனுக்கும் அதிகமான 9 லிட்டர் கேஸ்கள் விற்பனையாகியுள்ளன. இதே போன்று, வோட்கா 10 சதவீதமும், ரம் 2 சதவீதம் மற்றும் ஜின் மற்றும் ஜெனிவர் விற்பனை 3 சதவீதமும் இந்தியாவில் அதிகரித்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.


2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அளவு மற்றும் மதிப்பு (Volume and value) ஆகிய இரண்டின் அடிப்படையிலும் இந்தியாவில் பிரீமியம் மற்றும் அதற்கு மேற்பட்ட ஆடம்பர ஆல்கஹால் வகைகள் 8% வளர்ச்சியடைந்துள்ளன. இதே போன்று தயார்நிலை மதுபானங்கள் (Ready-to-drink ), 11% வளர்ச்சியடைந்துள்ளன.


IWSR கணிப்புகள், 2027 ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த மதுபான சந்தையில், இந்தியா ஜப்பானை முந்திச் செல்லும் பாதையில் உள்ளது என்றும், 2033 ஆம் ஆண்டுக்குள் ஜெர்மனியையும் விஞ்சக்கூடும் என்றும் கூறுகின்றன. இதன் மூலம் உலகின் முதல் ஐந்து மது நுகர்வு சந்தைகளில் ஒன்றாக இந்தியா இடம்பிடிக்கும். தற்போது, ​​சீனா, அமெரிக்கா, பிரேசில் மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகள் உலகளவில் முன்னணியில் உள்ளன. 


இந்த தொடர்ச்சியான வளர்ச்சி, மதுபானங்களுக்கான வலுவான மற்றும் விரிவடைந்து வரும் நுகர்வோர் சந்தையாக இந்தியா மாறி வருவதைக் குறிக்கிறது. இது உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு சாதகமாகவும் அமைய உள்ளது. இந்நிலையில் IWSR இன் ஆசிய-பசிபிக் தலைவரான ‘சாரா கேம்பல்’, இந்தியா மதுபான தொழிலுக்கான உலகளாவிய ஒரு மையமாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார். 


அதிகளவில் மது அருந்தும் உலகின் முதல் ஐந்து நாடுகள்: 


2022 ஆம் ஆண்டின் உலக மக்கள்தொகை மதிப்பாய்வு அறிக்கையின்படி, 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் உலகளவில் ஆல்கஹால் அதிகமாக அருந்தும் நாடுகளில் ஐரோப்பிய நாடுகள் அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 



இதில் முதல் இடத்தில் ருமேனியா (17.1 லிட்டர் / ஆண்டு) உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் ஜார்ஜியா (15.5 லிட்டர் / ஆண்டு), லாட்வியா (14.7 லிட்டர் / ஆண்டு), மால்டோவா (14.1 லிட்டர் / ஆண்டு) மற்றும் செக் குடியரசு (13.7 லிட்டர் / ஆண்டு) ஆகிய நாடுகள் உள்ளன.  இந்தியாவைப் பொருத்தவரையில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் சராசரியாக ஆண்டுக்கு 4.5 லிட்டர் ஆல்கஹால் அருத்துவதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்த கணக்கீடு என்பது ஒருவர் அருந்தும் மொத்த மது பானங்களின் அளவைக் குறிப்பதில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு மதுபானத்திலும் உள்ள தூய ஆல்கஹால் (Pure Alcohol / Ethanol) அளவை வைத்தே இந்த மதிப்பீடுகள் கணக்கிடப்படுகின்றன. 


52.6 சதவீதத்துடன் முன்னிலையில் உள்ள அருணாச்சலப் பிரதேசம்!


2023 ஆம் ஆண்டிற்கான சுகாதாரம் மற்றும் குடும்ப நல புள்ளியியல் வெளியீட்டின் படி, இந்தியாவில் தேசிய சராசரியாக 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் மது அருந்தும் ஆண்களின் சதவீதம் 18.7% ஆகவும், பெண்களின் சதவீதம் 1.3% ஆகவும் உள்ளது. 



அருணாச்சலப் பிரதேசம் இதில் மிக உயர்ந்த சதவீதத்தைக் கொண்டுள்ளது (52.6%). அதைத்தொடர்ந்து தெலங்கானா (43.4%), சிக்கிம் (39.9%) ஆகியவை உள்ளன. 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் மது அருந்தும் பெண்களின் சதவீதம் அதிகபட்சமாக அருணாச்சலப் பிரதேசத்தில் 24.2% ஆக உள்ளது.



இதே போன்று ஆண்களில் (15-49 வயது), வாரம் ஒருமுறை மது அருந்தும் மக்களின் சதவீதம் மேற்கு வங்காளத்தில் 27.3% ஆகவும், அதிகபட்சமாக ஆந்திரப் பிரதேசத்தில் 56.7% ஆகவும் உள்ளது. இதன் தேசிய சராசரி 43.4% ஆக உள்ளது. 



இதே போன்று பெண்களில் (15-49 வயது), வாரம் ஒருமுறை மது அருந்தும் மக்களின் சதவீதம் நாகாலாந்தில் 8.8% இருந்து சத்தீஸ்கரில் 47.6% வரை உள்ளது. இதன் தேசிய சராசரி 36.6% ஆகும். 



பெரும்பாலான மாநிலங்களில், வாரத்தில் ஒருமுறை மது அருந்தும் ஆண்களின் சதவீதம் பெண்களை விட அதிகம். ஆனால் மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகிய சில மாநிலங்களில், வாரம் ஒருமுறை மது அருந்தும் பெண்களின் சதவீதம் ஆண்களை விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை