YouTurn

இந்தியாவை அச்சுறுத்தும் காசநோய் (TB)!

உலகளவில் காசநோயால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படும் நாடு இந்தியா.

இந்தியாவை அச்சுறுத்தும் காசநோய் (TB)!

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் மக்கள் 'TB' எனப்படும் காசநோயினால் பாதிப்பிக்கப்படுகின்றனர். உலகின் மொத்த மக்கள்தொகையில் கால் பங்கினர் (25%) காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுக்கப்படக்கூடிய, குணப்படுத்தக்கூடிய நோயாக இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் மக்கள் காசநோயால் இறக்கின்றனர். 


’உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான காசநோய் பற்றிய அறிக்கை’ இதனை கவனப்படுத்துவதன்மூலம் காசநோயினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க பல்துறை சார்ந்த செயல்திட்டங்களை வலியுறுத்துகிறது.



உலகிலே அதிகமாக காசநோயால் பாதிக்கப்பட்ட மக்களைக்கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. உலகம் முழுவதும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 26% இந்தியாவில் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் 10% இந்தோனேசியா நாட்டினர் பாதிக்கப்படுகின்றனர். எனினும் இது இந்தியாவைவிட இரண்டு மடங்கு குறைவானதுதான். இதைக் கணக்கில்கொண்டு பார்க்கும்போது, இந்தியாவில் காசநோயின் தீவிரத்தை புரிந்துகொள்ள முடியும். 


HIV நோய், நீரிழிவு நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள மக்களும், புகையிலையைப் பயன்படுத்துபவர்களும் காசநோயால் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது. மேலும், ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது காசநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.


'TB' பாக்டீரியால் பாதிக்கப்பட்டிருந்தாலும் உடலில் அது காசநோயாக இன்னும் மாறாமல் இருக்கும் நிலையை  ’Latent TB infection’ என்று சொல்வார்கள். ஊட்டச்சத்துக் குறைபாடு இந்த Latent TB infection செயல்முனைப்புள்ள காசநோயாக வளர வைக்கிறது. இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகமாக இருப்பது காசநோய் தொற்று அதிகம் ஏற்பட ஒரு காரணமாகும். 


இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு பற்றி,
மேலும் படிக்க: https://youturn.in/articles/state-of-hunger-and-undernourishment-inindia.html 


காசநோயால் ஏற்படும் இறப்பு, பாதிப்புகள் மற்றும் துன்பங்களை வெகுவாகக் குறைப்பதன்மூலம் உலகளாவிய காசநோய் தொற்றை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு, உலக சுகாதார சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ’The End TB Strategy’ என்பதன் இலக்கை அடைய காசநோயை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் போன்ற செயல்திட்டங்கள் நடைமுறையில் சாதிக்கப்பட வேண்டும். 


ஒவ்வொரு ஆண்டும் காசநோயால் பாதிக்கப்படுபவர்கள் என்று மதிப்பிடப்பட்ட எண்ணிக்கைக்கும் (Estimated Numbers), புதிதாக கண்டறியப்பட்டு அதிகாரப்பூர்வமாக காசநோயுள்ளவர்கள் என அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கும் (Officially Reported Numbers) இடையே இன்னும் கணிசமான இடைவெளி உள்ளது. இது காசநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிதல், காசநோயுள்ளதாக  கண்டறியப்பட்டவர்கள் தேசிய அதிகாரிகளிடம் புகாரளித்தல் ஆகியவற்றில் உள்ள பிரச்சனைகளை பிரதிபலிக்கிறது.


இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட காசநோய் பாதிப்புகளுக்கும் பதிவாகாமல் போன பாதிப்புகளுக்கும்  இடையே சுமார் ஐந்து லட்சம் இடைவெளி உள்ளது. காசநோய் கண்டறிதலில் இருக்கும் இந்த இடைவெளி, காசநோய்க்கு எதிரான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் தடுப்பதாக இருக்கும். ஏனெனில், காசநோய் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியதாகும். நோய் கண்டறிதலில் இருந்து விடுபட்ட நபரின் சிகிச்சையளிக்கப்படாத நோய் (Untreated Disease) பிறருக்கு பரவ அதிக வாய்ப்பிருக்கிறது. 


காசநோய் ஒழிப்பில் நோய் கண்டறிதலுக்கு அடுத்தபடியாக மிக முக்கியத்துவம் வாய்ந்தது பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்படுவதாகும். இதில் இரண்டு முக்கியக்கூறுகள் அடங்கியிருக்கிறது. ஒன்று, நோயுள்ளவர்களாக பதிவு செய்யப்பட்டவர்களில் எத்தனை நபர்களுக்கு சிகிக்கை அளிக்கப்படுகிறது. மற்றொன்று, இந்த மருத்துவ சிகிச்சைக்காக மொத்த குடும்ப வருமானத்தில் பெரும்பகுதி செலவு செய்யப்படுதல். 


ஒட்டுமொத்தமாக, காசநோயால் பாதிக்கப்பட்ட நபர்களில் 80% நபர்கள் வரை இந்தியாவில் சிகிக்கைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் இது பிரச்சனையின் ஒரு பகுதி மட்டுமே ஆகும். 


மருத்துவ சிகிச்சைக்காக அதிகமாக செலவுகள் செய்யவேண்டிய நிலை இருக்கும்போது, மக்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள முன்வரமாட்டார்கள் என்ற காரணத்தை அடிப்படையாகக் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் ”காசநோயால் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பேரழிவுச்  செலவுகளை” 2020ஆம் ஆண்டிற்கு முன்பாகவே ’0 %’ குறைக்கவேண்டுமென்று இலக்கு வைத்திருந்தது. ஒரு குடும்பம் பொதுவாக காசநோய் சிகிச்சைக்காக அதன் ஆண்டு வருமானத்தில் 20% க்கும் அதிகமாக செலவழிப்பது 'பேரழிவுச் செலவு' என்று கருதப்படுகிறது. இந்தியாவில், காசநோயாளிகள் உள்ள குடும்பங்களின் மொத்த எண்ணிக்கைகள் குறைந்தபட்சம் 20% குடும்பங்கள் மேற்குறிப்பிட்ட 'பேரழிவுச் செலவுகளை' செய்துவருகிறது. இந்த வகையில் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த இந்த இலக்கை இந்தியா எட்டவில்லை.



உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த மற்றொரு இலக்கின்படி,  2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது காசநோயால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டு 35% குறைத்திருக்கவேண்டும். ஆனால், இந்தியா 2023ஆம் ஆண்டிலே 18% தான் குறைத்திருக்கிறது. 


உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த இடைக்கால இலக்கின்படி,  இந்தியா 2025 ஆண்டிற்குள்ளாக ஒரு லட்சம் மக்களுக்கு 55 நபர்களுக்கு மட்டுமே காசநோய் ஏற்படுகிறது என்ற விகிதத்தை அடையவேண்டும். ஆனால், 2023ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, இந்தியாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 195 நபர்களுக்கு காசநோய் ஏற்படுகிறது. 


மேற்குறிப்பிட்ட இந்த இலக்குகளை இந்தியா எட்டவில்லை. மருத்துவரீதியாக தடுக்கக்கூடிய காசநோய் இத்தனை தீவிரமானதாக இந்தியாவில் இருப்பதற்கு மேற்கூறிய இந்த இலக்குகளை அடைவதில் உள்ள பின்தங்கிய நிலையும் ஒரு காரணமாகும்.  உலக சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான காசநோய் பற்றிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகளில் இந்தியா இன்னும் நெடுந்தூரம் பயணித்தால்தான் காசநோயை ஒழிக்கமுடியும். 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை