தடுப்பூசி போடாத குழந்தைகளின் பட்டியலை வெளியிட்டுள்ள WHO மற்றும் UNICEF: உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா!
இந்தியாவில் 2023-ஆம் ஆண்டில் சுமாா் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு DTP தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்று ஆய்வு கூறுகிறது.
இந்தியாவில் பொதுவாக, பிறந்தது முதல் 12 வயது வரை, குழந்தைகள் பல வைரஸ் மற்றும் பாக்டீரியா சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுவதால், தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கவும், தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கவும், குழந்தைகளுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றது. நோய் அல்லது தொற்று ஏற்பட்டால், அதன் விளைவுகள் குழந்தைகளுக்கு மோசமாக இருக்கும். டிப்தீரியா (Diphtheria), டெட்டனஸ் (Tetanus), இடைவிடாத தீவிர இருமல் (Whooping cough) மற்றும் HPV போன்ற சில நோய்கள் இன்றும் குழந்தைகளிடத்தில் பரவலாக உள்ளன.
இதில் டிடிபி தடுப்பூசி என்பது டிப்டீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் இருப்பதற்காக, குழந்தை பிறந்த, 6வது வாரத்தில் முதல் டோஸ், 10வது வார வயதில் இரண்டாவது டோஸ் மற்றும் 14வது வார வயதில் மூன்றாவது டோஸ் என்று பரிந்துரைக்கப்படுகிறது. பூஸ்டர் டோஸ் 12 மற்றும் 23 மாதங்களுக்கு இடையில் பரிந்துரைக்கப்படுகிறது.
இதே போன்று MCV தடுப்பூசி என்பது 6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு அதிக காய்ச்சல், இருமல், சளி, வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய தட்டம்மை நோய் வராமல் தடுப்பதற்கு வழங்கப்படும் தடுப்பூசி வகையாகும். தடுப்பூசி போடப்படாத இளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள், கடுமையான சிக்கல்களுக்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளன. எனவே இத்தகைய தடுப்பூசிகள் கட்டாயமாக பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி, உலகளவில் 2023ஆம் ஆண்டில் DTP தடுப்பூசிகளைப் பெறுவதில் தவறவிட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 14.5 மில்லியனாக உள்ளது. DTP தடுப்பூசிகளில் ஒரு டோஸ் கூட பெறாத குழந்தைகளின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 12.8 மில்லியனாகவும், 2022ஆம் ஆண்டில் 13.9 மில்லியனாகவும் இருந்தநிலையில், 2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.

உலகளவில் ஒரு DTP தடுப்பூசி கூட செலுத்தப்படாத குழந்தைகள் பட்டியலில் 1.6 மில்லியன் எண்ணிக்கைகளுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் நைஜீரியா (2.1 மில்லியன்) முதலிடத்தில் உள்ளது. முதல் 10 இடங்களில் எத்தியோப்பியா, DR காங்கோ, சூடான், இந்தோனேசியா, ஏமன், ஆஃப்கானிஸ்தான், அங்கோலா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளன.

இதே போன்று 2023ஆம் ஆண்டில், உலகளவில் MCV தடுப்பூசிகளைப் பெறுவதில் தவறவிட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 22.2 மில்லியனாக உள்ளது. இது 2019ஆம் ஆண்டில் 19.3 மில்லியனாக இருந்தநிலையில், 2023ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 22.2 மில்லியனாக அதிகரித்துள்ளது.

2023ஆம் ஆண்டில், 55% குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி இல்லாத உலகின் முதல் 10 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. நைஜீரியா மற்றும் காங்கோவுக்கு அடுத்தபடியாக தட்டம்மை தடுப்பூசி போடப்படாத குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

HPV தடுப்பூசிகளைப் பொறுத்தவரையில், இதற்கு முந்தைய அறிக்கைகளை ஒப்பிடும்போது, பெண்களிடையே அதிகளவில் சென்று சேர்ந்துள்ளதாக தற்போதைய அறிக்கை கூறுகிறது.
மேலும் ஒப்பீட்டளவில் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகள் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுவதால், அங்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அனைத்து நிலைகளிலும் முயற்சிகளை வலுப்படுத்த உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகள், தடுப்பூசி செலுத்துவதில் சிறந்த முன்னேற்றம் அடைந்துள்ளன என்பதை பின்வரும் வரைபடத்தின் மூலம் அறிய முடிகிறது.

இந்நிலையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடர்பாக, உலக சுகாதார அமைப்பு மற்றும் யூனிசெப் இணைந்து வெளியிட்டு உள்ள புள்ளிவிவரங்கள் பட்டியலுக்கு, ஒன்றிய அரசு சமீபத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தப் புள்ளிவிவரங்களில் சில அடிப்படை தவறுகள் உள்ளன. நம் நாட்டில், 16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படாத நிலையிலும், அது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 0.11 சதவிகிதமே. இது, மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவே” என்று கூறியுள்ளது.
ஆதாரங்கள்:
2. WHO/UNICEF estimates of national immunization coverage
3. Union Government's Reply against UNICEF & WHO Report