கேரளாவை அச்சுறுத்தும் போதைப் பொருள் பழக்கம்!
கேரளாவில் ’Narcotics Drugs and Psychotropic Substances (NDPS) Act’ என்னும் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மிக அதிகமாக வழக்குகள் பதிவாகியிருக்கிறது.
கேரள மாநிலத்தில் போதைப் பொருள் தொடர்பான வழக்குகள் மிக அதிகமாக பதிவாகியிருப்பதாக சமீபத்திய செய்தி தெரிவிக்கின்றன. ’Narcotics Drugs and Psychotropic Substances (NDPS) Act’ என்னும் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2021ஆம் ஆண்டில் 5,695 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் 30,000 வழக்குகளுக்கும் மேல் பதிவாகியிருக்கிறது.
சமீபத்தில் கேரள உயர்நிதிமன்றம் போதைப் பொருள் மாபியாகள் ஆபத்தாகி வருவது குறித்த தனது கருத்தை தெரிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, கேரளா சட்டமன்றம் தனது வழக்கமான பணிகளை ஒத்திவைத்துவிட்டு போதைப் பொருட்களால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதித்திருக்கிறது. இவையெல்லாம் இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்த்துவதாக இருக்கிறது.

மாகராஷ்ட்ரா, பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலக்களிலும் போதைப் பொருள் தொடர்பான வழக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் பதிவாகியிருக்கின்றன. ஆனால், கேரளாவில் இந்த வழக்குகள் பதிவான விதம் (Pattern) மற்ற மாநிலக்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கிறது.
ஏனெனில், மற்ற மாநிலங்களில் போதைப் பொருள் தொடர்பான வழக்குகள் பெரும்பாலும் பெரு நகரங்களையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும்தான் அதிகமாக பதிவாகும். 2022ஆம் ஆண்டில் மகாராஷ்ட்ர மாநிலத்தில் போதைப் பொருட்கள் தொடர்பாக பதிவான வழக்கு எண்ணிக்கையில் 80 சதவீத வழக்குகள் மும்பை மாவட்டத்தில் பதியப்பட்டது. அதேபோல், கர்நாடகாவின் மொத்த வழக்கு எண்ணிக்கையில் 63 சதவீத வழக்குகள் பெங்களூரு மாவட்டத்தில் பதியப்பட்டது.

ஆனால் கேரளாவில், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 500 வழக்குகள் பதிவாகியுள்ளது. எந்தவொரு மாவட்டத்திலும் 10 சதவீதத்திற்கு மேலான வழக்குகள் பதிவாகவில்லை. இதிலிருந்து கேரளாவில் போதைப் பழக்கம் நகரமயமாக்கல் நன்கு வளர்ந்த பெருநகரங்களில் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் பரவலாக உள்ளது என்பதை இதன் மூலம் புரிந்துகொள்ளலாம்.
கேரளாவில் ஒரு லட்சம் மக்களுக்கு 78 போதைப் பொருட்கள் தொடர்பான வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு லட்சம் மக்களுக்கு 30 வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது.

போதைப் பொருள் தடுப்புச் சட்டமான ‘Narcotics Drugs and Psychotropic Substances (NDPS) Act’-ல் இரண்டு முக்கியமான பிரிவுகள் இருக்கிறது. ஒன்று, போதைப் பொருள் பயன்படுத்துவது பற்றியது; மற்றொன்று போதைப்பொருள் கடத்துவது பற்றியது. 2022ஆம் ஆண்டு கேரளாவில் பதிவான வழக்குகளில் 94 சதவீத வழக்குகள் போதைப் பொருள் பயன்படுத்துவது குறித்த வழக்குகளாகும். இதனைக் கொண்டு கேரளாவில் போதைப் பழக்கத்தின் தீவிரத்தை நம்மால் உணர்ந்துள்ள முடியும்.
இந்தியாவில் போதைப் பொருட்கள் வெகுவாக புழக்கத்தில் இருப்பது கடந்த சில வருடங்களாகவே பேசு பொருளாக இருந்திருக்கிறது. இதனால் இந்தியாவில் எந்த அளவிற்கு, எந்த மாதிரியான போதைப் பொருள் புழக்கத்தில் இருக்கிறது, எந்த வயதினர் அதிகம் போதைப் பொருள் பயன்படுத்துகிறார்கள் என்ற துல்லியமான விவரங்களுக்கான தேவை எழுந்தது. இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 473,569 நபர்களிடம் கருத்து கேட்டு ஆய்வு செய்து ’இந்தியாவில் போதைப்பொருள் பயன்பாட்டின் அளவு- 2019’ என்ற அறிக்கையாக ’சமூக நீதி மற்றும் மக்கள் மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Social Justice and Empowerment)’ வெளியிட்டது.

அந்த அறிக்கையில் சில அம்சங்கள் சொல்லப்பட்டிருந்தது. அதில் முக்கியமாக, இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கமுள்ளவர்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
16 கோடி பேர் மது பழக்கம் உள்ளவர்கள் என்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை 3 கோடி நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள்தொகையில் 2.8 சதவீதமாகும். கஞ்சா தவிர்த்து ஓப்பியம் (Opium) கெராயின் (Heroin) போன்ற போதைப்பொருட்களை 2 கோடி 26 லட்சம் நபர்கள் பயன்படுத்துகிறார்கள். இது மொத்த மக்கள்தொகையில் 2.1 சதவீதமாகும். இவையெல்லாம் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள். கடந்த ஐந்தாண்டுகளில் இந்த எண்ணக்கை அதிகமாகியிருக்கவே வாய்ப்புகள் உள்ளது.

ஒருவர் எந்த மாதிரியான சூழ்நிலைகளின் கீழ் போதைப் பழக்கத்திற்கு உட்படுகிறார் என்பது குறித்து 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘Dynamics of Drug Addiction and Abuse in India’ புத்தகம் விரிவாக பேசுகிறது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய ஐந்து மாநிலங்களில் போதைக்கு அடிமையான 950 நபர்கள் உட்பட அவர்களது குடும்பம் மற்றும் சுற்றத்தவர்கள் என 3300 நபர்களிடம் கருத்துக் கேட்டு ஆய்வு செய்து இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
அந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளதன் படி, போதைப் பொருள் பழக்கமுள்ளவர்கள் பெரும்பாலும் குறைவான ஊதியத்திற்கு வேலை செய்பவர்களாக, அமைச்சாரா தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அதில் 61% நபர்கள் தங்களது 20 வயதிலே உழைக்கத் தொடங்கியவர்கள். குடும்பத்தில் பிரச்சனை, நட்பு வட்டத்தில் இருப்பவர்களின் வற்புறுத்தல் (peer pressure) ஆகியவை காரணமாக போதைப் பழக்கத்தை தொடங்கியதாக அவர் சொல்கிறார்கள்.
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட 950 நபர்களில், 78 % நபர்களின் வீடுகளில் யாராவது ஒருவர் குறிப்பாக தந்தை புகை மது ஆகிய போதைப் பழக்கமுடையவர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களும் புகை, மது என ஆரம்பித்து கஞ்சா, ஓப்பியம், கெராயின் போன்ற narcotic drugs வகை போதைப் பழக்கத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள். அதில் 47% நபர்கள் 20 வயதிற்கு முன்பாகவே போதைப் பொருட்கள் பயன்படுத்த தொடக்கியுள்ளார்கள்.
அதிகரித்து வரும் இந்த போதைப் பழக்கம் சமூக வாழ்வில் மிக கேடான விளைவுகள் ஏற்படுத்தும் என்பதால், இதனைத் தடுக்க கேரளா அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக, உயர்கல்வித் துறை மற்றும் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது.