YouTurn

அனைவருக்கும் ஐ.ஐ.டி திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள்.. பரவும் செய்திகளும் உண்மைகளும்!

இந்தியாவின் மிக முக்கிய நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ், தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களை அறிவியல் துறையில் ஊக்குவிக்க்கும் வகையில் `அனைவருக்கும் ஐஐடி' எனும் முன்னெடுப்பை பள்ளிக் கல்வி துறையுடன் இணைந்து தொடங்கியது. அதன்படி சென்னை ஐஐடியில், அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் கீழ் பி.எஸ். டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் போன்ற இணையவழி படிப்புகளை 2022ம் ஆண்டு முதல் அறிமுகம் செய்துள்ளது.

அனைவருக்கும் ஐ.ஐ.டி திட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள்..  பரவும் செய்திகளும் உண்மைகளும்!

‘அனைவருக்கும் ஐஐடி’ என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பி.எஸ். டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இணையவழி படிப்புகளில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 28 மாணவா்கள் நிகழாண்டில் சோ்க்கை பெறவுள்ளனா். 

 

இந்நிலையில் “தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் ‘அனைவருக்கும் ஐஐடி’ என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் இணைந்திருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார். ஆனால் இது பொய்யான தகவல். ஐஐடிகளுக்கான மாணவர் சேர்க்கை ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வு (முதன்மை), ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வு (உயர்நிலை) என இரு கட்டத் தேர்வுகளின் வாயிலாகத் தான் நடைபெறும். முதன்மைத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் உயர்நிலைத் தேர்வுகளுக்கு தகுதி பெறுவர். உயர்நிலைத் தேர்வுகளில் அதிக தரவரிசை பெற்றவர்களுக்கு ஐஐடிகளில் கலந்தாய்வு மூலம் பி.டெக் படிப்பில் சேர இடம் ஒதுக்கப்படும். இந்த முறையில் சேர்ந்தவர்கள் தான் ஐஐடி மாணவர்களாக கருதப்படுவர். ஆனால், தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் 28 மாணவர்களும் பி.டெக் படிப்பில் சேரவில்லை” என்று குறிப்பிட்டு பாஜகவின் எஸ்.ஜி.சூர்யா மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 



எனவே ‘அனைவருக்கும் ஐஐடி’ திட்டத்தில் தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்தும் அதன் பின்னணி குறித்தும் இந்த கட்டுரையில் விரிவாகக் காண்போம். 


‘அனைவருக்கும் ஐஐடி’ திட்டம்: 


இந்தியாவின் மிக முக்கிய நிறுவனமாக ஐஐடி மெட்ராஸ், பள்ளிக் கல்வி துறையுடன் இணைந்து தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களை அறிவியல் துறையில் ஊக்குவிக்கும் வகையில் `அனைவருக்கும் ஐஐடி' எனும் முன்னெடுப்பை தொடங்கியது. அதன்படி சென்னை ஐஐடியில், அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் கீழ் பி.எஸ். டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் போன்ற இணையவழி படிப்புகளை 2022ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த படிப்புக்கான பிரத்யேக நுழைவு தேர்வு ஐஐடியில் நடைபெறுகிறது. வரும் காலங்களில் வேலைவாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதால் இந்த படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களை அதிகளவில் சேர்க்க பள்ளி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.



மேலும் இதற்கான சென்னை ஐஐடியின் பிரத்யேக இணையதளப் பக்கத்தில் இது குறித்து ஆய்வு செய்ததில், இந்த படிப்பில் இது வரை 36,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பதை அறிய முடிந்தது. இந்த படிப்பிற்காண காலம் கற்பவரின் வேகம், அவர்களின் விருப்பம் மற்றும் மதிப்பீடுகளின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு நான்கு ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை கற்பிக்கப்படுகிறது. 


இந்த படிப்பில் தேர்வாகும் மாணவர்களுக்கு தேர்வு எழுதும் கட்டணத்தை அரசு சார்பில் செலுத்தப்படுகிறது. இதுதவிர தேர்வில் தேர்வாகும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், கல்வி கட்டணத்தில் 75 சதவீதத்தை ஐஐடியே வழங்குகிறது


மீதமுள்ள 25 சதவீதத்தை எஸ்சி, எஸ்டி மாணவர்களாக இருப்பின் அவர்களுக்கான கட்டணத்தை தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் செலுத்துகிறது. மேலும் மற்ற பிரிவினர் 25 சதவீத கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். அதன்படி இத்திட்டத்தின் கீழ் 2022ம் ஆண்டு முதல் இதுவரை 353 அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அதைதொடர்ந்து இந்தாண்டும் 170 பேர் தகுதித் தேர்வை எழுதியுள்ளனர். அதில் 28 பேர் வெற்றி பெற்று, சென்னை ஐஐடியில் சேர்ந்துள்ளனர். 


இதனையடுத்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளாா்.



மேலும் இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “திட்டம் பெயரே “அனைவருக்குமான ஐஐடி” என்பது தான். இதுவரை 354 அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இந்த ஆண்டில் மட்டும்  28 பேர் தேர்வாகியுள்ளனர். இதற்கென மாணவர்களுக்கு பிரத்யேகமாக பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கும் ஐஐடி வளாகத்தில் பயிற்சி வழங்கியிருக்கிறோம். இந்த இணையவழி பயிற்சியில் கலந்து கொண்டே மாணவர்கள் வேறு படிப்பையும் தொடர முடியும். 


மேலும் இந்த படிப்பு முடித்ததும் ஐஐடியில் மற்ற படிப்புகளுக்கு வழங்கப்படுவது போன்று இதற்கும் சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. ஐஐடி முன்னாள் மாணவர்களுக்கான (ALUMNI) கார்டும் மற்ற மாணவர்களை போல இவர்களுக்கு வழங்கப்படுகிறது. முக்கியமாக மேல்நிலை பள்ளிகளில் வரத்தகம் (COMMERCE) படிப்பு படிக்கக் கூடிய குழந்தைகள், அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் கீழ் பி.எஸ். டேட்டா சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் போது அவர்களும் பொறியியல் படிப்பு படித்ததற்கிணையான மாணவர்களாக கருதப்படுவார்கள். இவ்வாறு ஐஐடியில் படிக்க முடியுமா என்ற எண்ணத்தை உடைத்து மாணவர்கள் ஐஐடியில் படிப்பதற்கான வழியை எளிமையாக்கியுள்ளோம்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். 


இந்த புதிய படிப்புகள் குறித்து ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில்நாடு முழுவதும் கற்போருக்கு ஐஐடி-யின் தரமான கல்வியைக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே சென்னை ஐஐடி இந்தத் தனித்துவமான பி.எஸ்.சி. பட்டப்படிப்பைத் தொடங்கியது. தரவு அறிவியல் என்பது தற்போது வளர்ந்துவரும் துறையாகும். நிறுவனங்களைப் பொருத்தவரை திறன்மிக்கவர்களுக்கான தேவை மிக அதிகமாகவே இருந்து வருகிறது. உயர்தரமான கல்வியை வழங்குவதில் சென்னை ஐஐடி நெடிய வரலாற்றைக் கொண்டதாகும். 


மிகப்பெரிய அளவில் போட்டியிருக்கக் கூடிய ஜே.இ.இ. தேர்வு எழுதாமலேயே சென்னை ஐஐடி-யில் மாணவர்கள் கல்வி பயில்வதை இத்திட்டம் முதன்முறையாகச் சாத்தியமாக்கி உள்ளது. ஜே.இ.இ. பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க முடியாமல் தவிக்கும் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மாணவர்களுக்கு இது நேரடியாகப் பயன் அளிக்கிறது“ என்றும் கூறியுள்ளதைக் காண முடிகிறது.  


இதன் மூலம் ஐஐடி அனைவராலும் அணுகக் கூடியது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டு, தற்போது தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டும் வருகிறது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை