தேர்தல் நன்கொடை! வெளிவந்த புதிய மர்மம்!
பெரிதும் பிரபலமில்லாத கட்சிகள் மிகக் பெரிய அளவில் நன்கொடைகள் பெறுவதும் அவற்றின் செலவு விவரங்கள் மறைக்கப்படுவதும் தேர்தல் ஜனநாயகத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் அங்கீகரிக்கப்படாத 10 கட்சிகள் கடந்த 2019-20 முதல் 2023-24 வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ. 4300 கோடி நன்கொடை பெற்றதாக செய்திகள் வெளியாகின.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 2796 பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (Registered Unrecognised Political Parties) இருந்திருக்கிறது. இந்த பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தேர்தல் ஆணையம் விதித்துள்ள நிபந்தனைகளை கடைபிடித்து நடக்கவேண்டும். அதில் முக்கியமான இரண்டு நிபந்தனைகள் இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சிக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் குறித்த அறிக்கையை (contribution report) சமர்பிக்க வேண்டும். இவ்வாறு கட்சிக்கு வந்த நன்கொடைகள் எவ்வாறு செலவழிக்கபட்டது என்பது குறித்த தணிக்கை அறிக்கையை (Audited Annual Statements) சமர்ப்பிக்க வேண்டும். இந்த செலவீனங்கள் பற்றிய கணக்குகள் கட்சி தலைமையகம் முறையாக பராமரிக்க வேண்டும்.
இந்த வகையில் நன்கொடைகள் குறித்த அறிக்கை மற்றும் தணிக்கை அறிக்கைகள் மூலமாக குஜராத் மாநிலத்தில் சிறிதும் பிரபலமில்லாத 10 கட்சிகள் ரூ. 4300 கோடிகள் வரை நன்கொடை பெற்றுள்ளதும் அதனை செலவு செய்த விதமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2019 முதல் 2024 வரையிலான நான்கு ஆண்டுகளில், இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களும், 2022ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலும் நடந்திருக்கிறது. இந்த மூன்று தேர்தல்களிலும் சேர்த்து இந்த கட்சிகள் மொத்தம் 43 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியுள்ளது. இந்த வேட்பாளர்கள் மொத்தமாக 54,069 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர்.
இந்த மூன்று தேர்தல்களிலும் இந்த 10 கட்சிகளின் வேட்பாளர்கள் வெறும் ரூ. 39 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளதாக தேர்தல் செலவு அறிக்கையில் வேட்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால், இந்த கட்சிகளின் செலவுகள் குறித்து தணிக்கை (Audit) செய்தபோது, இவை ரூ. 3500 கோடி செலவு செய்துள்ளதாக தெரிகிறது.
குஜராத் மாநில தேர்தல் ஆணைய அதிகாரியின் அறிக்கை படி, இந்த கட்சிகள் இந்தியாவில் 23 மாநிலங்களில் இருந்து நன்கொடை பெற்றுள்ளன என்பது தெரியவருகிறது. தணிக்கை அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் இந்த கட்சிகள் தேர்தல்களுக்காக 352.13 கோடி ரூபாய் செலவு செய்துள்ளன என்று தெரியவருகிறது.
பாரதிய ஜனபரிஷத், சௌராஷ்டிர ஜனதா கட்சி, சத்யவாதி ரக்ஷக் கட்சி, லோக்ஷாஹி சத்தா கட்சி, தாய் நிலம் தேசியக் கட்சி ஆகிய 5 கட்சிகளின் தணிக்கை அறிக்கைகளின் படி இந்த செலவு தெரியவருகிறது. ஆனால் மற்ற 5 கட்சிகள் தணிக்கை அறிக்கைகளிலும் தேர்தல் ஆணையம் பரிந்துரைத்த படிவத்தின் படியும் தேர்தல் செலவுகள் பற்றிய விவரங்களை வெளியிடவில்லை.
தேர்தலுக்காக இந்த கட்சிகள் 352.13 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தணிக்கை அறிக்கைகள் கூறும் அதேவேளையில் நன்கொடையாக பெற்ற ரூ.4300 கோடிகளில் ரூ.3500 கோடிகள் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அப்படியானால் தேர்தல் அல்லாத செலவுகளுக்காக மீதிப் பணம் செலவு செய்யப்பட்டதா? அவை என்ற மாதிரியான செலவுகள்? போன்ற கேள்விகள் எழுகின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், ‘குஜராத்தில் யாருமே கேள்விப்பட்டிராத பெயர்களை உடைய கட்சிகள் ரூ.4300 கோடி வரை நன்கொடை பெற்றுள்ளது’ என்றும் ‘இதனையாவது தேர்தல் ஆணையம் விசாரிக்குமா’ என்றும் விமர்சித்துள்ளார்.
இந்தக் கட்சிகள் செலவு செய்ததாக கணக்கு காட்டிய தொகைக்கும் தணிக்கை அறிக்கைகள் வெளிக்கொண்டு வந்த செலவுத் தொகைக்கும் உள்ள பாரிய வேறுபாடு இந்த கட்சிகள் தங்களது நன்கொடை மற்றும் செலவு விவரங்களை இருட்டடிப்பு செய்வதாகவே புரிந்துகொள்ள முடியும். ஜனநாயக நாட்டில் தேர்தல் முதுகெலும்பு போன்றது. கட்சிகள் நன்கொடை வாங்குவது அவற்றை எவ்வாறு செலவு செய்கிறது என்பது போன்ற அடிப்படையான விவரங்கள் இருட்டடிப்பு செய்யப்படும் போது, ஜனநாயகம் அங்கே வலுவிழப்பதாகவே பொருள்.