YouTurn

UPI பணப் பரிமாற்றத்தில் தவறான நபருக்கு பணம் அனுப்பிவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

தவறான UPI எண் அல்லது தவறான அலைபேசி எண்ணிற்கு பணம் அனுப்பிவிட்டால் NPCI  தளத்தில் ‘UPI Dispute Redressal Mechanism’ என்ற பிரிவில் சென்று புகாரை பதிவு செய்யலாம். இதன்மூலம், தவறுதலாக அனுப்பப்பட்ட பணம் உங்களுக்கு திரும்பக் கிடைக்க சில வாய்ப்புகள் உள்ளது.

UPI பணப் பரிமாற்றத்தில் தவறான நபருக்கு பணம் அனுப்பிவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

Unified Payments Interface (UPI) என்று சொல்லப்படும் மின்னணு பணப் பரிவர்த்தனை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையில் UPI மூலமாக இந்தியா முழுவதும் 15,547 கோடி எண்ணிக்கையிலான பரிவர்த்தனைகள் நடந்திருக்கிறது. இதன் மூலம் ரூபாய்.223 லட்சம் கோடி நிதி பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

 

காய்கறி, துணி, உணவு போன்ற சில்லறை வர்த்தகத்திலும் தனிநபர்களுக்கு இடையிலும் UPI மூலமாக பணப் பரிவர்த்தனை பெருமளவில் நடைபெறுகிறது. இதனால், சில சமயங்களில் தவறான UPI எண் அல்லது தவறான அலைபேசி எண்ணிற்கு பணம் அனுப்புவது நடக்கிறது. அதேபோல், சில சமயங்களில் பயனர்களின் அனுமதி இல்லாமல் (without authorisation of user) சில பணப் பரிமாற்றங்கள் நடப்பது, மின்னணு மோசடிகள் மூலமாக  பயனர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணப் பரிமாற்றம் நடப்பது போன்ற நிகழ்வுகளை நாம் சந்திக்கிறோம். இதுபோன்ற சமயங்களில் பணத்தை திரும்பப் பெற வாய்ப்புகள் இருக்கிறது.

 

இதுபோன்ற சம்பவங்கள் நிகழும் பட்சத்தில், முதலில் Google pay, Paytm போன்ற எந்த UPI  நிறுவனத்தின் தளத்தை  பயன்படுத்துகிறார்களோ அந்த UPI சேவை தளத்தின் வாடிக்கையாளர் புகார்த்துறையில் (Customer Complaints) புகார் அளிக்க வேண்டும். அதன் பின்னர், பயனர்கள் எந்த வங்கியில் கணக்கு (Bank Account) வைத்திருக்கிறார்களோ அந்த வங்கியில் புகார் செய்வது மிக முக்கியமானதாகும். எந்தளவிற்கு விரைவில் வங்கியில் புகார் செய்யப்படுகிறதோ அந்தளவிற்கு நல்லது. இதனைத் தொடர்ந்து, கட்டண சேவை வழங்குநர் (PSP) வங்கியிடம் புகார் தெரிவிக்க வேண்டும்.

 

அதன்பின்னர், National Payments Corporation of India (NPCI)  தளத்தில் UPI Dispute Redressal Mechanism என்ற பிரிவில் சென்று புகாரை பதிவு செய்யவேண்டும். அதில் UPI பரிவர்த்தனை விவரங்கள், பணப் பரிமாற்றம் பற்றிய விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், மின்னஞ்சல், அலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிடவேண்டும். மேலும், தவறுதலாக வேறொரு கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக (Incorrectly transferred to another account)  குறிப்பிட்டு புகார் அளிக்க வேண்டும்.

 

அப்போதும் பணம் திரும்பக் கிடைக்கவில்லை என்றால், ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட வங்கி முறைகேள் அலுவலரிடம் (Banking Ombudsman) புகார் தெரிவிக்கலாம். இந்த வங்கி முறைகேள் அலுவலர் ATM அட்டைகள், பண பரிமாற்ற முறைகேடு ஆகியவற்றை கையாளும் பொறுப்பில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மின்னணு பணப் பரிமாற்றம் முறை அதிகரித்த அளவில் பயன்படுத்தப்படுவதால், தேவையற்ற வகையில் நமது பணத்தை அதில் இழக்காமல் இருக்க இதுபோன்ற புகார் அளிக்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை நாம் வளர்த்துக்கொள்வது அவசியமானதாகும்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை