YouTurn

‘இந்துக்கோவில்கள் மசூதிகளாக மாற்றம்’ எனத் தொடரும் வதந்திகள்!

தமிழ்நாட்டில், திருப்பரங்குன்றம், பிரான்மலை, ஈரோடு தாளவாடி போன்ற பல ஆன்மிக தளங்களில் இன்றும் இந்து கோவில்களும், மசூதிகளும் அருகே அருகே இருப்பதன் மூலம், மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு மதநல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் மதகலவரத்தை தூண்டும் விதமாக பலரும் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர்.

‘இந்துக்கோவில்கள் மசூதிகளாக மாற்றம்’ எனத் தொடரும் வதந்திகள்!

அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி தொடர்பான சர்ச்சைகள் உச்சத்தில் இருந்தபோதிலிருந்தே, காசியின் ஞானவாபி மசூதி, மதுராவின் ஷாஹி ஈத்கா மசூதி உள்ளிட்ட பல மசூதிகளும் இந்துக்கோவில்களில் இருந்து தான் மாற்றப்பட்டுள்ளன என்று கூறி வலதுசாரிகள் பல செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி வந்தனர். இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக வலது சாரி எழுத்தாளரான சீதாராம் கோயல் எழுதிய “Hindu Temples What Happend To Them (Volume 1)” என்ற புத்தகத்தின் பக்கங்களை சமூக ஊடகங்களில் தற்போது மீண்டும் பலரும் வைரலாகப் பரப்பி வருவதைக் காண முடிகிறது. 


அந்தப் புத்தகத்தில், மாநில வாரியாகவும் மாவட்ட வாரியாகவும், இந்து கோவில்களில் இருந்து கட்டப்பட்ட முஸ்லீம் நினைவுச்சின்னங்களின் விவரங்கள் என்று குறிப்பிட்டு மாநில மற்றும் மாவட்ட வாரியானப் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். அதில் தமிழ்நாட்டில் மட்டும் மாவட்ட வாரியாக 175 மசூதிகள் வருகின்றன. நாடு முழுவதும் இவ்வாறு 2000 க்கும் மேற்பட்ட மசூதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில், திருப்பரங்குன்றம், பிரான்மலை, ஈரோடு தாளவாடி போன்ற பல ஆன்மிக தளங்களில் இன்றும் இந்து கோவில்களும், மசூதிகளும் அருகே அருகே இருப்பதன் மூலம், மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு மதநல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் மதகலவரத்தை தூண்டும் விதமாக பலரும் தவறான செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். எனவே அது குறித்த தொகுப்பை இங்கு காணலாம்.


பிரான்மலை: 


"பண்டைய காலத்தில் பறம்புமலை என அழைக்கப்பட்ட இடம் தான் தற்போதைய பிரான்மலை. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரான்மலையில் 1000 ஆண்டுகள் பழமையான இந்து கோவிலை இடித்து விட்டு தான் மசூதி கட்டியுள்ளனர்" என்று குறிப்பிட்டு பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உட்பட பலரும் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பினர். 



இந்நிலையில் பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், பிரான்மலையின் மீது விநாயகர் கோவில், பாலமுருகன் கோவில், ஷேக் அப்துல்லா அவுலியா தர்கா ஆகிய மூன்றும் இருப்பதாக மலையில் பாறையின் மீது எழுதப்பட்டு வழி அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. பிரான்மலைக்கு சென்றவர்களிடம் கோவில்கள் குறித்து கேட்டதில், கோவில் ஒருபுறம், மசூதி ஒருபுறம் இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.


எனவே பிரான்மலையில் இந்து கோவிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதாக கூறுவது தவறான தகவல்கள் என்பதை உறுதிபடுத்த முடிகிறது. மேலும் இது குறித்து கடந்த 2019-லேயே ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும்படிக்க: பிரான்மலையில் இந்து கோவிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டதா ?


தஞ்சாவூர் குரங்கு மண்டபம்: 


தஞ்சாவூரில் உள்ள குரங்கு மண்டபம் இஸ்லாமியர்களின் பராமரிப்பில் இருப்பதாகக் கூறி காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டது. 



இதுகுறித்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் அளித்துள்ள விளக்கத்தில், "காணொளியில் காண்பிக்கப்படும் இடம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சொந்தமானதாகும். இந்த இடத்தில் மதம் தொடர்பான எந்த நிகழ்வுகளும் நடைபெறவில்லை. இங்கு அத்துமீறி நுழைபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை பதாகையும் வைக்கப்பட்டிருக்கிறது", என்றும் கூறியுள்ளார். 


கீழக்கரை ஓடக்கரை மசூதி: 


'பாண்டிய மன்னர் கட்டிய இராமநாதபுரம் கீழக்கரை சிவன் கோயிலை அபகரித்த இஸ்லாமியர்கள்' என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு மசூதியின் காணொளி பகிரப்பட்டது.

 

ஆனால், ஆய்வு செய்ததில் அது கீழக்கரையில் உள்ள பழமையான ஓடைக்கரை மசூதி என்பதை உறுதிபடுத்த முடிந்தது. இது 1850 ஆம் ஆண்டு திராவிட கட்டிடக் கலை பாணியில் கட்டப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசின் அருங்காட்சியகங்கள் துறை கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியிட்ட "Islamic Architecture in Tamil Nadu" என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.


கீழக்கரை பழைய ஜும்மா மசூதி:


இதே போன்று கீழக்கரையின் மற்றொரு மசூதியான பழைய ஜும்மா மசூதியையும் கோயில் என்று இந்துத்துவாவினர் பரப்பி வருகின்றனர்.

இந்த மசூதி கிபி 7 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கிபி 1036 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு, அதன் பின்னர் 17 ஆம் நூற்றாண்டில் மன்னர் கிழவன் சேதுபதி ஆட்சியில் அமைச்சராக இருந்த வள்ளல் சீதக்காதியால் இந்தோ - திராவிட - இஸ்லாமிய கட்டிடக் கலையின் அடிப்படையில் மீண்டும் புதுப்பித்துக் கட்டப்பட்டது.


மேலும் கீழக்கரையில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் மட்டும் திராவிடக் கட்டிடக்கலையில் உருவாக்கப்படவில்லை. அப்பகுதியில் உள்ள பழமையான பல பள்ளிவாசல்கள் திராவிடக் கட்டிடக்கலையில் இருப்பதாக பிபிசி செய்தியில் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: ராமநாதபுரத்தில் உள்ள ஜும்மா பள்ளிவாசல் இந்து கோவிலா ? வரலாறு அறிக.


திருவண்ணாமலை தர்கா: 


"திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான கிரிவல பாதையில் தர்கா கட்டப்பட்டு இருப்பதாகவும், இதன் பின்னர் அந்த மலையே தர்காவுக்கு தான் சொந்தம் என்று சொல்வார்கள்" எனவும் கூறி ஒரு காணொளி பரப்பப்பட்டது.


இது குறித்து ஆய்வு செய்ததில், தர்கா அமைந்துள்ள இடம் திருக்கோயிலுக்கு தொடர்புடையது அல்ல என்றும், சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகத் தர்கா இருப்பதாகவும் திருவண்ணாமலை நகர நில அளவை பதிவேட்டின்படி தெரிய வருகிறது. திருக்கோயில் இடத்தில் தர்கா இருப்பதாகப் பரவும் தகவல் வதந்தி என்று அருணாசலேசுவரர் திருக்கோயில் செயலாளரும் விளக்கமளித்துள்ளார்.


பொட்டல்புதூர் தர்கா: 


திருநெல்வேலி மாவட்டம் பொட்டல்புதூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலை அங்குள்ள இஸ்லாமியர்கள் பள்ளி வாசலாக மாற்றி பயன்படுத்தி வருகிறார்கள் என சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவுகளை காண நேரிட்டது. கடந்த 2018-ல் இருந்தே இப்பதிவு சுற்றித் திரிகிறது.


Facebook link | archive link 


இது குறித்து ஆய்வு செய்ததில், திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் தர்கா இது என்பதை அறிய முடிந்தது. முகைதீன் ஆண்டவர் தர்கா 1674 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கு நடத்தப்படும் வழிபாடு இந்துக்களின் வழிபாட்டு சாயலை ஒத்ததாக இருக்கும் எனவும் கூறுகிறார்கள். இந்த தர்காவிற்கு இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் வருகை தருகிறார்கள்.


மேலும் படிக்க: பொட்டல்புதூர் தர்காவை முருகன் கோவில் என விஷம வதந்தி !


திருப்பரங்குன்றம் தர்கா:


மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் சுப்பிரமணிய சாமி கோவில்,  மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயில்,  சமண குகைகள் மற்றும் சிக்கந்தர் பாதுஷா தர்கா ஆகியவை அமைந்துள்ளது. சிக்கந்தர் தர்கா, கோயிலுக்குச் சொந்தமான இடம் என்றும் அங்கு அயோத்தியைப் போன்று கரசேவை செய்ய வேண்டும் என்றும் வெறுப்புப் பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வந்தது.


ஆனால், அது தர்கா அமைந்துள்ள இடம் கோயிலுக்குச் சொந்தமான இடம் இல்லை என்பது பல்வேறு நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம் தெரியவருகிறது. இருப்பினும் தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொடர்பான வதந்திகள், வெறுப்புப் பரப்புரைகள், வன்முறையைத் தூண்டும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுக்கொண்டே இருக்கிறது.


தாளவாடி ஜாமியா மசூதி:


ஈரோடு மாவட்டம் தாளவாடி ஜாமியா மசூதி கோயிலை ஒட்டி அமைந்துள்ளது. இதனை மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டு வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தன. இந்த நிலையில் அந்த மசூதியையும் ஆக்கிரமிப்பு என்ற ரீதியில் திசைமாற்றி வெறுப்பைப் பரப்பி வருகிறார்கள்.


மேலும் இந்த மசூதிகள் அல்லாமல், தமிழ்நாட்டில் மட்டும் பல்வேறு மசூதிகளைக் இந்துத்துவாவினர் குறிவைத்துள்ளார்கள். இந்த நிலையில் தான், வலது சாரி எழுத்தாளரான சீதாராம் கோயல் எழுதிய “Hindu Temples What Happend To Them (Volume 1)” என்ற 468 பக்க நூல், இவர்களின் தாரக மந்திரமாகத் திகழத் தொடங்கியுள்ளது.


இந்தப் புத்தகத்தில் பெரும்பாலானவை, கோயில் போன்று அமைந்திருக்கும் திராவிடக் கட்டிடக் கலையின் அடிப்படையில் கட்டப்பட்ட கல்லுப்பள்ளிகளாகும். மற்றவை, கோயில் அல்லது அது தொடர்பான இடத்திற்கு அருகாமையிலோ அல்லது ஒட்டியோ அமைந்திருப்பவையாகும். எனவே தான் இவற்றை குறிவைத்து இருவேறு மதத்தினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தவே கடந்த பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார்கள்!

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை