உலகை அச்சுறுத்தும் ’ஆயுத மோதல்கள் மற்றும் புவிசார் பொருளாதார மோதல்கள்’: WEF அறிக்கை
அரசு சார்ந்த ஆயுத மோதல்கள் என்பது இன்றைய காலத்தில் பெரும் அபாயமாக இருப்பதாக ’Global Risks Report 2025’ அறிக்கை கவனப்படுத்துகிறது.
‘World Economic Forum’ அமைப்பு ஆண்டு தோறும் உலகளாவிய அபாயங்களை பற்றி அறிக்கையை ’Global Risks Report’ என்ற பெயரில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான ‘Global Risks Report 2025’ அறிக்கையை கடந்த ஜனவரி 15ஆம் தேதி வெளியிட்டது. ’உலகளாவிய அபாயங்கள்’ என்ற சொல்லாடல் உலக அளவில் பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல், மக்கள்த்தொகை ஆகியவற்றில் எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிகழ்போக்குகளை குறிப்பதாகும். இதில் எந்தெந்த அபாயங்கள் (Risks) குறுகிய காலத்தில் (2 ஆண்டுகள்) கவனத்திற்குரிவை, எவை நீண்ட கால நோக்கில் (10 ஆண்டுகள்) கவனத்திற்குரிவை என்று இரண்டு வகைகளில் இந்த அறிக்கை வரிசைபடுத்துகிறது. வெவ்வேறு அபாயங்கள், நிகழ்வுப்போக்குகளுக்கு இடையிலான தொடர்புகளும் பரிசீலிக்கிறது.

சென்ற ஆண்டு அறிக்கையில் ’Global Risks Report 2024’ முதன்மை அபாயமாக இருந்த ’பொய் செய்திகளை பரப்பப்படுவது (Misinformation and Disinformation)’ தற்போதும் குறுகிய காலத்து அபாயங்களில் முதன்மையானதாகவே இருக்கிறது. இணையமும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் (AI) வெகுமக்களிடம் பரவிவரும் இன்றைய காலத்தில் இது கவனத்திற்குரிய அபாயமாக இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் ஒரு நாட்டின் பொதுத்தேர்தல்களில், வாக்காளர்கள் மத்தியில் கருத்துருவாக்கம் செய்து அவர்களின் முடிவுகளில் தாக்கம் செலுத்தும் வகையில் பொய் செய்திகள் பரப்பப்படுவதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
உலகெங்கிலும் போர்கள், ஆக்கிரமிப்பு யுத்தங்கள் நடந்துவரும் இன்றைய காலத்தில், அது பற்றிய தவறான கருத்துகளை பரப்புவது, உண்மையான கருத்துகளை சந்தேகத்திற்குரியதாக மாற்றுவது போன்ற செயல்களுக்காக பொய் செய்திகள் திட்டமிட்டு உபயோகிக்கப்படும் வாய்ப்புகள் இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த அறிக்கை, ‘அரசு சார்ந்த ஆயுத மோதல் (State-based armed conflict)’ என்பதன் மீது கவனத்தை கோருவதாக இருக்கிறது. இந்த அறிக்கை தயாரிப்பதற்காக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் (Survey) பதிலளித்தவர்களில் 23% நபர்கள் அரசு சார்ந்த ஆயத மோதல்கள் என்பது இன்றைய காலத்தில் பெரும் அபாயமாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக உலம் முழுவதும் ஆயுத மோதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ‘தேசிய பாதுகாப்பு’ என்ற அம்சம் பல்வேறு நாட்டு அரசாசங்களின் நிகழ்ச்சி நிரலில் முன்னிலைக்கு வந்துள்ளது. பதிலிப் போர்கள் (proxy wars), உள்நாட்டுப் போர்கள் (civil wars) ஆட்சிக் கவிழ்ப்புகள் (coups), பயங்கரவாதம் (terrorism) ஆகிய வகைகளில் ஆயுத மோதல்கள் பல்வேறு நாடுகளில் நடந்துவருகிறது.
புவிசார் பொருளாதார மோதல்கள் (Geoeconomic confrontation) போன்ற அபாயங்கள் இதனுடன் தொடர்புடையதென இந்த அறிக்கை கூறுகிறது. புவிசார் பொருளாதார மோதல்கள் என்ற அபாயம் சென்ற ஆண்டு பட்டியலில் 14ஆவது இடத்தில் இருந்து தற்போது 9ஆவது இடத்திற்கு வந்திருப்பது உலகளாவிய பொருளாதார உறவுகளில் ஏற்பட்டு வரும் பிரச்சனைகளை காட்டுவதாக இருக்கிறது. சீனா போன்ற குறிப்பிட்ட நாடுகளின் பொருட்களுக்கு அதிகமான சுங்கக் கட்டணங்கள் விதிப்பது, குறிப்பிட்ட நாடுகளை குறிப்பிட்ட துறைகளில் மூலதனமிட முடியாதவாறு தடுப்பது (investment screening), பொருளாதார தடைகள் விதிப்பது (sanctions) போன்ற நடவடிக்கைகளால் புவிசார் பொருளாதார மோதல்கள் மேலும் தீவிரமாகிறது.

பொருளாதார ரீதியான சமத்துவமின்மை (Wealth Inequality) என்பது பல்வேறு பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருப்பதாக அறிக்கை கூறுகிறது. நழிந்த வாழ்க்கை, சமூகங்களுக்கு இடையிலான பிளவு (Societal polarization), புலம் பெயர்வது (migration), மனித உரிமைகளும், குடிமை உரிமைகளும் குறைந்துவருவது போன்ற பிரச்சனைகளுக்கு இந்த சமத்துவமின்மை (Wealth Inequality) மையக் காரணமாக இருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வளர்ந்து வரும் AI என்னும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பொய் செய்திகளை பரப்பப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி உயர் தொழில்நுட்பங்களைக் பொய்யாக தகவல்கள் பரப்பப்படுவதால் உண்மையான தகவல் எது என்று கண்டுபிடிப்பது மிகுந்த சிரமமாகி வருகிறது. இப்படி AI மூலமாக பரப்பப்படும் பொய் செய்திகள் சமூகத்தில் ஏற்கனவே நிலவும் சமூகங்களுக்கிடையிலான பிளவுகளை (Societal polarization) அதிகரிக்கவே செய்யுமென்று அறிக்கை கூறுகிறது.
நீண்டகால (10 ஆண்டுகள்) நோக்கில் தீவிரமாக மாறிவரும் வானிலை, பல்லுயிர் பெருக்கம் மற்றும் சுற்றுசூழல் பாதிப்படைவது, பூமியின் அமைப்புகளில் ஏற்பட்டு வரும் தீவிரமான மாற்றங்கள், இயற்கை வளங்கள் மோதுமான அளவில் இல்லாமல் இருப்பது போன்ற அபாயங்கள் குறித்தும் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், அரசு சார்ந்த ஆயத மோதல், புவிசார் பொருளாதார மோதல்கள், சமூகங்களுக்கிடையிலான பிளவுகள், பொய் செய்திகள் ஆகிய அபாயங்கள் பற்றி அறிக்கை மிகுந்த கவனம் செலுத்துகிறது. இயற்கை அபாயங்களைவிட சமூகத்தில் உருவாகிவரும் அபாயங்கள் மிகுந்த அச்சுறுத்தல் தருவதாக இருக்கிறது என்பதன் வெளிப்பாடாக இதனை பார்க்கலாம்.