குடிநீர் உற்பத்தியை 'மிகுந்த கண்காணிப்பிற்குரியதாக’ அறிவித்தது FSSAI!
குடிநீர் உற்பத்தி FSSAI நிறுவனத்தால் ஆய்வுக்கும், தணிக்கை விதிமுறைகளுக்கும் உட்படுத்தப்படும்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), புட்டியில் அடைக்கப்பட்ட குடிநீர் (Packaged Drinking Water), Mineral water ஆகியவற்றை ‘மிகுந்த கண்காணிப்பிற்கு உட்படுத்தவேண்டிய உணவுப் பட்டியலில் (High Risk Food Category)’ சேர்த்துள்ளது. இதனால், இந்த புட்டியில் அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் FSSAI நிறுவனத்தால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதுடன், தணிக்கை விதிமுறைகளுக்கும் (Audit Norms) உட்படுத்தப்படும்.

குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ‘இந்தியத் தரநிலைகள் பணியகத்திடம் (Bureau of Indian Standards)’ கட்டாயமாகச் சான்றிதழ் பெற்றிருக்கவேண்டும் என்ற நடைமுறையைக் கைவிடுவதாக மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் அறிவித்ததைத் தொடர்ந்து FSSAI இந்த முடிவை எடுத்திருக்கிறது.

’இந்தியத் தரநிலைகள் பணியகம்’ குறிப்பிட்ட சில நுகர்வுப்பொருட்களுக்கு கட்டாய சான்றிதழ் பெரும் முறையிலிருந்து விலக்கு அளித்துள்ளது. அதில் குடிநீர் உற்பத்தியும் ஒன்று. இதனால், இந்த குடிநீர் உற்பத்தியாளர்களின் தரம், செயல்படும் முறை ஆகியவற்றை BIS நிறுவனம் இனிமேல் கண்காணிப்பு செய்யாது. அதே வேளையில், குடிநீர் என்பது மிக முக்கியமான நுகர்வுப் பொருளாக இருப்பதால், அதன் தரம் அங்கீகரிக்கப்பட்ட வகையில் இருப்பது அவசியமாகும். இந்த நிலையைக் கணக்கில் கொண்டுதான் FSSAI குடிநீரை ‘மிகுந்த கண்காணிப்பிற்கு உட்படுத்தவேண்டிய உணவுப் பட்டியலில்’ சேர்த்துள்ளது.

இதன்படி, குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் கட்டாய ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும். குடிநீர் உற்பத்தியை ’ஆய்வு செய்வதற்கான வகையினத்தில்’ சேர்க்கும் பொருட்டு, FSSAI தனது ’ஆய்வு குறித்த கொள்கைகளில்’ திருத்தங்கள் செய்துள்ளது. இதன்படி புட்டியில் அடைக்கப்பட்ட குடிநீர், Mineral water ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆண்டிற்கு ஒருமுறை ஆய்விற்கு உட்படுத்தப்படும். அதே நேரத்தில் இந்த குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுவதற்கான உரிமம் வழங்கப்படுவதற்கு முன்பும் இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இந்த மாற்றங்கள் செய்யப்படும் சில காலத்திற்கு முன்னர், குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் BIS, FSSAI ஆகிய இரண்டு நிறுவனங்களிடமும் கட்டாயம் அனுமதி வாங்கும் முறை நடைமுறையில் இருந்தது. இதனை மாற்றியமைக்கக் கோரி அரசாங்கத்திடம் குடிநீர் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தினார்.
FSSAI கடந்த நவம்பர் 29ஆம் தேதியிட்ட ஆணையின் படி, ’BIS-ன் கட்டாய அனுமதிச் சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட உணவு உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும், உரிமம் பெறுவதற்கு முன்பாகவே FSSAI-யால் ஆய்விற்கு உட்படுத்தப்படும்’.
மத்திய அரசு நிறுவனங்களிடம் இருந்து உரிமம் பெற்று இயங்கும் அனைத்து ‘High Risk Food Category’ வகை உணவு உற்பத்தி நிலையங்களும் ஆண்டிற்கு ஒருமுறை தணிக்கைக்கு உட்படுத்தப்படும் என்றும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, FSSAI-யால் அங்கீகரிப்பட்ட சுயட்சையான தணிக்கை (Third party Audit) நிறுவனங்களின் மூலமாக நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.