YouTurn

என்கவுண்டர்கள் சட்டத்தின் படியான குற்றவியல் நடைமுறைக்கு மாற்றாக இருக்க முடியாது!

என்கவுண்டர் கொலைகளை வரவேற்கும் மனநிலை என்பது சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்பு உரிமைகள், குற்றவியல் நீதி அமைப்பு சட்டத்தை அமல்படுத்தும் முகமைகள் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுவதாக இருக்கிறது.

என்கவுண்டர்கள் சட்டத்தின் படியான குற்றவியல் நடைமுறைக்கு மாற்றாக இருக்க முடியாது!

சென்னையில் கடந்த மார்ச் 25ஆம் தேதி நடந்த தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஜாபர் குலாம் உசேன், சூரஜ் ஆகிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் ஜாபர் என்ற நபர்,  திருடப்பட்ட நகைகளையும் திருடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் பைக்கையும் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் சென்னை தரமணியில் உள்ள ஒரு இடத்திற்கு காவல்துறையை அழைத்துச் சென்றதாகவும், அங்கே பைக்கில் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவல்துறை மீது ஜாபர் சுட்டதாகவும், அதனால் காவல்துறை தற்காப்பிற்காகச் சுட்டதில் ஜாபர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. 


image.png


இது கடந்த 2024ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் நடக்கும் நான்காவது என்கவுண்டர் (போலீஸ் மோதல் கொலை) ஆகும். கடந்த 2024அம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) தமிழ்நாடு மாநிலத்  தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் ஜீலை 14ஆம் தேதி என்கவுண்டர் செய்யப்பட்டார். மேலும், செப்டம்பர் 18ஆம் தேதி  ’காக்காதோப்பு பாலாஜி’ போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அடுத்த சில நாட்களில், செப்டம்பர் 23ஆம் தேதி ’சீஸிங் ராஜா’ என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.


A.அருண் சென்னை காவல் ஆணையராக ஜீலை 8, 2024ல் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் இப்படி ‘அடுத்தடுத்து காவல்துறையால் நடத்தப்பட்ட இந்த என்கவுன்டர்கள்’ நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் சென்னை காவல் ஆணையராக பதவியேற்ற உடனே ’ரௌடிகளுக்கு புரியும் மொழியில் பேசுவேன்’ என்ற கூறி சர்ச்சைக்கு உள்ளானதும் குறிப்பிடத்தக்கது. 


image.png


இதுபோன்று தமிழ்நாட்டில் காவல்துறையால் நடத்தப்படும் மோதல் கொலைகள் (என்கவுண்டர்கள்) அதிகரித்து வருவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது. சட்டத்தைச் சிறப்பாக அமல்படுத்தும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்தாலும், குற்றவாளிகள் காவல்துறை அதிகாரிகளைத் தாக்க முயல்வதாகக் கூறப்படுவதும், இதனால் காவல்துறை குற்றவாளிகளைச் சுட்டுக் கொல்வது அல்லது காயப்படுத்துவது அதிகரித்து வருவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


மே 2021-ல் இருந்து காவல்துறையினரால் 14-க்கும் மேற்பட்ட ‘என்கவுண்டர்கள்’ நடத்தப்பட்டுள்ளன. கடந்த 2019 முதல்  சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காவல்துறையினரால் 10 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன, அதில் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.  ’சீஸிங் ராஜா’, தற்போது கொல்லப்பட்ட ‘ஜாபர்’ ஆகிய என்கவுண்டர்களையும் சேர்த்தால் 12 என்கவுண்டர்களில் 16 நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 


ஒரே பாணியில், 'தற்காப்புக்காகச் சுடுதல்' என்ற கதையைப் பயன்படுத்தி  இந்த என்கவுண்டர்கள் காவல்துறையால் நடத்தப்பட்டிருக்கிறது. "உண்மையில், மோதல் கொலை (என்கவுண்டர்கள்) என்பது ’திட்டமிடப்பட்ட காவல்க் கொலை' என்பதற்கான ஒரு மாற்றுச் சொற்பதம் மட்டுமே" என்று ’மக்கள் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் (PUCL)’ தேசிய பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான வி.சுரேஷ் குறிப்பிடுகிறார். 


image.png


இந்தியாவில் என்கவுண்டர்கள் கொலைகள் அதிகரித்து வரும் இந்தப் பின்னணியில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் காவல்துறையால் செய்யப்பட்ட மோதல் கொலைகள் பற்றியும் அவை முறையான விசாரணைக்கு உட்படுத்தப்படாதது பற்றியும் 2021ஆம் ஆண்டு ’Extinguishing Law and Life’ என்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 


அதன்படி, என்கவுண்டர்கள் என்பது அந்தத் தருணத்தில் நடந்த தன்னிச்சையான சம்பவங்கள் அல்ல. அவை காவல்துறையினரால் முன்கூட்டியே  திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கொலைகளாகும் என்று குறிப்பிடப்படுகிறது. சமூகத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்ற எண்ணத்தை பொதுச் சமூகத்தின் மனதில் விதைத்து அவர்களது ஆதரவைப் பெறுவதற்காகவோ அல்லது காவல்துறை அதிகாரிகளின் தங்களது சொந்த அரசியல் அல்லது குற்றவியல் தொடர்புகளை உறுதிபடுத்துவதற்காகவோ என்கவுண்டர்கள் நடைபெறுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. 


குற்றங்களைத் தடுப்பதற்கான ஒரு கொள்கையாக என்கவுண்டர்கள்  நடத்தப்படுவதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். கடந்த 2018ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச காவல்துறை இயக்குநராக இருந்த  ஓ.பி. சிங் “என்கவுண்டர்கள் குற்றக்களை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். உண்மை என்னவென்றால், ’என்கவுண்டர்கள்’ என்பது ஒரு மாநிலக் கொள்கை அல்ல, ஆனால் அது காவல்துறையின் உத்தி. நாங்கள் இதை என்கவுண்டர் என்று அழைப்பதில்லை, ஆனால் காவல்துறை தலையீடு என்று அழைக்கிறோம்” என்று கூறியது இங்கே நினைவு கூறத்தக்கது.  


இதுபோன்று என்கவுண்டர் கொலைகளை வரவேற்கும் மனநிலை என்பது சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்பு உரிமைகள், குற்றவியல் நீதி அமைப்பு சட்டத்தை அமல்படுத்தும் முகமைகள் ஆகியவற்றின் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டுவதாக இருக்கிறது என்பதால் இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றமே குறிப்பிட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற  “instant justice” மீதான அபிமானம் என்பது இந்த வகையில் சட்டத்தின் ஆட்சி,  குற்றவியல் நீதி அமைப்பு ஆகியவற்றின் மீதான நம்பிக்கையின்மையையே காட்டுவதாக இருக்கிறது. 


மேலும் பெரும்பாலான இந்த என்கவுண்டர்கள் குறித்து காவல்துறை மீது ’முதல் தகவல் அறிக்கை(FIR)’ பதிவு செய்யப்படவில்லை. இது காவல்துறைக்கு மக்கள் மீதான கட்டற்ற அதிகாரத்தை வழங்குவதாக உள்ளது. ஆனால் காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம் என்பதற்கான பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.


image.png


குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட நபர்கள் குளியலறையில் வழுக்கி விழுந்து கை, கால்களை உடைத்துக் கொள்வதாகச் சொல்லப்படும் செய்திகள் தற்போது சகஜமாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றாக மாறிவிட்டது.  


”ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தண்டனை வழங்க பல ஆண்டுகள் ஆகும் என்பதால், இவ்வாறு கை கால்கள் உடைக்கப்படுவதுதான் "ஒரே தீர்வு”. ஒரு நபர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பாக, அவர் தொடர்ச்சியான குற்றங்களைச் செய்து பின்னர் தலைமறைவாகிவிடுகிறார். எனவே, இதுபோன்ற எலும்பு முறிவுகள் நிரந்தரத் தீர்வாக இல்லாவிட்டாலும், குறுகிய காலத்திற்கு எங்களுக்கு உதவுகின்றன” என்று ஓய்வுபெற்ற ஐ.ஜி கூறியுள்ளதாக The Print செய்தித்தளம் குறிப்பிடுகிறது. 


சட்டத்தின் படி நடந்துகொள்ள வேண்டிய அமைப்புகள் இவ்வாறான நீதிக்குப் புறம்பான கொலைகள் என்று சொல்லப்படும் இந்த என்கவுண்டர்களைச் செய்வதில்தான் ஆபத்து இருக்கிறது. இது காவல்துறைதுறையே வழக்கறிஞர், நீதிபதி, தண்டனையை நிறைவேற்றும் நபர் என அனைத்து துறை நடவடிக்கைகளையும் செய்வது போன்றதாகும். இது குற்றவியல் நீதி அமைப்பின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது. என்கவுண்டர்களால் குற்றங்களைக் குறைக்க முடியாது என்பது மட்டுமல்ல, காவல்துறை இந்த என்கவுண்டர்களைத் தவறாகப் பயன்படுத்தவும் அதிகம் வாய்ப்பிருக்கிறது. 


கடந்த 2019ஆம் ஆண்டு ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் 26 வயதான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அது தொடர்பாக நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் தப்பிக்க முயன்றதாகச் சொல்லப்பட்டு அவர்கள் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்டர் கொலையை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட மூன்று நபர்கள் கொண்ட குழு, தனது விசாரணை அறிக்கையை 2022 மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இது ஒரு ’போலி என்கவுண்டர்’ என்றும் குற்றம்சாட்டப்பட்ட நபர்களைக் கொல்லும் எண்ணத்துடனே காவல்துறை அவர்களைச் சுட்டுள்ளதாகவும், இதனைச் செய்த 10 காவலர்கள் மீது கொலைக் குற்ற வழக்குப் பதிவு செய்யப் பரிந்துரைப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  


image.png


காவல் வன்முறைகள் (Custodial Violence) என்று சொல்லப்படும் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் காவல்துறையால் துன்புறுத்தப்படும் நிகழ்வுகள் இந்தியா முழுவதும் நடக்கும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ஆகிய இருவர் காவல் வன்முறையால் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் காவல் வன்முறை காரணமான மரணங்கள் (Custodial Deaths) தொடர் கதையாகி வருவதை மதுரையைச் சேர்ந்த அரசு சாரா மனித உரிமைகள் அமைப்பான ‘People’s Watch’ சமீபத்தில் கண்டித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2018 முதல் 2023 வரையிலான ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் 36 காவல் கொலைகள் (Custodial Deaths) நடந்திருக்கிறது. இது தென்னிந்திய மாநிலங்களிலே அதிகமானதாகும். 


image.png

ஓவ்வொரு என்கவுண்டர் நடக்கும் போதும் மக்கள் மத்தியில் பேசுபொருளாக்கப்படும் விவகாரம் என்னவென்றால், இப்படி என்கவுண்டர் செய்தால் தான் ரவுடிகளுக்கு பயம் வரும், குற்றங்கள் தடுக்கப்படும் என்பதுதான். ஆனால் ஆம்ஸ்ட்ராங்க் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட அடுத்த இரண்டு நாட்களிலேயே மதுரையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சமீபத்தில் கூட திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு முன்பாக கனிமவளக் கொள்ளைகள் தொடர்பாக போராட்டம் நடத்திய ஜெகபர் அலி படுகொலை செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன் ஈரோட்டில் ஜான் என்பவர் நடுரோட்டில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டார். என்கவுண்டர்கள் மூலம் குற்றங்கள் தடுக்கப்படும் என்ற வாதத்தில் எந்த உண்மையும் இல்லை என்பதையே தமிழகத்தில் நடந்த இத்தகைய சம்பவங்கள் காட்டுகின்றன.


சட்டத்தை மீறிய செயலாக இருப்பதாலும், மனித உரிமை விதிகளை தூக்கி எறிகிற செயலாக இருப்பதாலும், குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு அவருடைய தரப்பு வாதத்தை முன்வைக்கும் வாய்ப்பை மறுப்பதாலும், போலியாக பல கொலைகள் என்கவுண்டரின் பெயரில் நடந்திருப்பதற்கான ஆவணங்கள் இருப்பதாலும் என்கவுண்டர்கள் என்னும் இத்தகைய காவல்துறை மோதல் கொலைகளை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இத்தகைய நடைமுறையால் குற்றங்கள் குறைந்திருக்கிறதா என்றால் அதற்கான தரவுகளும் இல்லை. மேலும் சட்ட விரோத என்கவுண்டர்களை நியாயப்படுத்தும் மனநிலை என்பது சட்டத்தின் ஆட்சி,  குற்றவியல் நீதி அமைப்பு ஆகியவற்றின் மீதான நம்பிக்கையின்மையின் வெளிப்பாடாகவே அமையும். 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை