YouTurn

மனித உரிமை ஆணையத்திடம் மன்னிப்பு கேட்டாரா, காவல் ஆணையர் அருண்?

காவல் ஆணையர் அருண் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் சமர்பித்த வாக்குமூலத்தில் ‘மன்னிப்பு (Sorry அல்லது Apologize)’ என்ற வார்த்தை எங்கும் இல்லை.

மனித உரிமை ஆணையத்திடம் மன்னிப்பு கேட்டாரா, காவல் ஆணையர் அருண்?

’ரௌடிகளுக்கு புரியும் மொழியில் பேசுவேன்’ என்ற சர்ச்சை பேச்சிற்காக சென்னை காவல் ஆணையர் அருண் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் ’மன்னிப்பு’ கேட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டது.



சென்னையின் காவல் ஆணையராக கடந்த ஜீலை மாதம் 8ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்ட A.அருண், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில், “ரௌடிகளிடம் அவர்களுக்கு புரியும் மொழியில் பேசுவேன்” என்று கூறியிருந்தார். அவரது இந்த பேச்சு குறித்து பத்திரிக்கைகளில் வெகுவாக பேசப்பட்டது. 



இது நடந்த சில நாட்களிலே, பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) தமிழ் மாநிலத்  தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் ஜீலை 14ஆம் தேதி என்கவுன்டர் செய்யப்பட்டார். மேலும், செப்டம்பர் 18ஆம் தேதி  ’காக்காதோப்பு பாலாஜி’ போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அடுத்த சில நாட்களில், செப்டம்பர் 23ஆம் தேதி ’சீஸிங் ராஜா’ என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இப்படி அடுத்தடுத்து காவல்துறையால் நடத்தப்பட்ட இந்த என்கவுன்டர்களையும், ”ரௌடிகளுக்கு புரியும் மொழியில் பேசுவேன்’ என்ற காவல் ஆணையரின் கூற்றையும் இணைத்துப் பார்க்கும் வகையில் பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிட்டன. 


இதற்கிடையில், காவல்துறை உதவி ஆணையர் இளங்கோவன் ரோந்துப் பணியின் போது சரித்திரப் பதிவேடு ரௌடி (History Sheeter) ஒருவரின் மனையிடம் “இனி அவன் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவன் கை, கால்கள் உடைக்கப்படும்; கொலை போன்ற கடுமையான குற்றங்களில் ஈடுபட்டால், அவன் என்கவுண்டில் கொல்லப்படுவான்” என்று மிரட்டும் யூடியூப் வீடியோ வெளியானது. 


காவல் ஆணையர் அருண் பொறுப்பெடுத்துக் கொண்ட பிறகு, இப்படி அடுத்தடுத்து என்கவுன்டர்கள் நடப்பதையும், உதவி ஆணையர் ரௌடிகளை ’என்கவுன்டர் செய்துவிடுவேன்’ என்று மிரட்டுவதையும் கண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம், ‘ரௌடிகளுக்கு புரியும் மொழியில் பேசுவேன்’ என்ற ஆணையரின் வார்த்தகள்தான் இதற்கெல்லாம் துண்டுதலாக இருக்கிறதா என்பதை  விசாரிக்க ’தானாக முன்வந்து வழக்கை(Suo Motu)’ ஏற்றுக்கொண்டது. இந்த விவகாரத்திற்கு பதிலளிக்க காவல் ஆணையரை அக்டோபர் 14ஆம் தேதி ஆஜராகும் படி மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார் சம்மன் பிறப்பித்தார்.



இதனையடுத்து, மேற்குறிப்பிட்ட நாளில், சென்னையில் இரண்டு பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடக்கயிருப்பதாகவும், ஆயுத பூஜை விடுமுறைகள் முடிந்து மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி திறக்கப்படுவதால் (இதில் ஒரு கல்லூரியின் மாணவர் மற்றொரு கல்லூரி மாணவர்களால் சில தினங்களுக்கு முன்னர் தாக்கப்பட்டார்), தன்னால் நேரில் ஆஜராக முடியாது என்றும், அரசு தரப்பு வழக்கறிஞர் மூலமாக சமர்ப்பிக்கும் வாக்குமூலத்தை (Affidavit) தனது வாதமாக ஏற்றுக்கொள்ளும் படியும் ஆணையர் அருண் கேட்டிருந்தார். 


அவர் சமர்பித்த வாக்குமூலத்தின் படி, “நான் சொன்னதாக சொல்லப்படும் வாக்கியம் ”குற்றங்களால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றியும், அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் ரௌடிகளுக்கு கற்பிக்கப்படும் என்ற நோக்கத்தைக் கொண்டுதான் சொல்லப்பட்டது” என்று கூறியிருக்கிறார். மேலும் “இந்த நாட்டின் சட்டம் மற்றும் நீதி அமைப்புகளில் நான் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக தொழில்முறை போலீஸ் கண்காணிப்பு (Professional Policing) ஒரு வழக்கமான முறையாக செயல்படுத்தப்படும் என்று அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் கூறியதாகவும்” குறிப்பிட்டிருக்கிறார் காவல் ஆணையர் அருண். இதில் அவர் மன்னிப்பு கோருவதாக எங்கும் சொல்லப்படவில்லை.


மேலும் அவர் சமர்பித்த 6 பக்கங்கள் கொண்ட வாக்குமூலத்தில் ‘மன்னிப்பு (Sorry அல்லது Apologize)’ என்ற வார்த்தை எங்கும் இல்லை. 


காவல் ஆணையர் அருண் சமர்பித்த வாக்குமூலத்தையும், அரசு தரப்பு வழக்கறிஞர் வில்சன் எடுத்தாண்ட வாதங்களையும் ஏற்றுக்கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம் காவல் ஆணையர் அருணை இந்த வழக்கில் இருந்து விடுவித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் அக்டோபர் 21ஆம் தேதி வாக்குமூலம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.


இதிலிருந்து, சென்னை காவல் ஆணையர் அருண் மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் மன்னிப்பு கேட்டதாக வெளியிடப்பட்ட செய்திகள் பொய்யானது. அவர் தனது வார்த்தைகள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடந்த உரையாடல்களின் முழுமையுடன் பொருத்தி புரிந்துகொள்ளப்பட வேண்டும், வேறொரு கண்ணோட்டத்தில் புரிந்துக்கொள்ளக்கூடாது என்றுதான் கேட்டுக்கொண்டுள்ளார். 


Links


Affidavit of Commissioner of Police.pdf

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை