YouTurn

தென்கிழக்கு ஆசியாவில் இயங்கிவரும் இணைய குற்றக்கும்பல்கள்!

தென்கிழக்கு ஆசியாவிற்கு வேலைக்கு செல்லும் இளைஞர்களை சட்டவிரோதமாக அடைத்துவைத்து இணைய மோசடிகளை செய்யவைக்கிறது இந்த கும்பல்கள்.

தென்கிழக்கு ஆசியாவில் இயங்கிவரும் இணைய குற்றக்கும்பல்கள்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை ’நீயா நானா’ நிகழ்ச்சியில், இணையத்தின் வழியாக பண மோசடி செய்யப்படுவதை பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது ஹரிஹரசுதன் என்பவர் பேசியபோது, ‘வேலை வாய்ப்பிற்காக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் அங்குள்ள குற்றக் கும்பல்களால் சித்தரவதை செய்யப்படுவதைப் பற்றியும் அவர்களை மீட்பதற்கு  இந்திய அரசு மட்டுமே துல்லியமான நடவடிக்கை எடுத்ததாகவும்’ பேசியிருந்தார். அவர் பேசும் இந்தச் சிறிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ’மோடி அரசு மட்டுமே மக்கள் மீது அக்கறையுடன் செயல்படுகிறது; இந்தியாவின் மாநில அரசுகள் அல்லது பிற நாட்டு அரசுகள் அந்தந்த நாட்டு மக்களை மீட்கவில்லை’ என்ற கருத்தை உருவாக்கும் வகையில் பரப்பப்பட்டது. 



இந்த இணைய குற்றக் கும்பல்களின் பின்னணி என்ன?


வேலைவாய்ப்புகளுக்காக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் இளைஞர்கள் தரகர்களால் ஏமாற்றப்பட்டு, இணைய மோசடிகளை செய்யும் குற்றக்கும்பல்களிடம் சிக்கவைக்கப்படுகிறார்கள். இந்த குற்றக்கும்பல் இந்த இளைஞர்களை அடைத்துவைத்து கட்டாயப்படுத்தி இணைய மோசடி வேலைகளில் ஈடுபடுத்துகிறது என்பது பொதுமக்களுக்கு பெரிதும் தெரியாத விஷயமாகவே இருக்கிறது.


வியட்நாம்,  தாய்லாந்து ஆகிய நாடுகளில் ’Data Entry operator’ போன்ற வேலை வாய்ப்புகள் இருப்பதாக கூறி இந்தியாவில் உள்ள பட்டதாரி இளைஞர்கள் ஏமாற்றப்பட்டு சட்டவிரோத இணைய குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களிடம் சிக்கவைக்கப்படுகிறார்கள். இதைச் செய்வதற்காக உள்நாட்டுத் தரகர்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகிறார்கள்.


வாழ்க்கையை நடத்த சரியான ஊதியம் கிடைக்காமல் விரக்தியில் இருக்கும் பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி இந்த உள்நாட்டுத் தரகர்கள் அவர்களை அணுகுகிறார்கள். அவர்களிடம் விசா பெறுவதற்கான கட்டணம் எனக் கூறி லட்சக்கணக்கான ரூபாயை வாங்குகிறார்கள்.


வியட்நாம்,  தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு வந்திறங்கிய பின்பு,  இந்த இளைஞர்களை தரகர்கள் சாலை மார்க்கமாக லாவோஸ், மியன்மார், கம்போடியா போன்ற நாடுகளுக்கு கொண்டுசென்று சட்டவிரோத இணையக் குற்றங்களில் ஈடுபட்டு வரும் கும்பல்களிடம் சிக்கவைக்கிறார்கள். வியட்நாம் விசாவில் வந்த இளைஞர்களை சாலை மார்க்கமாக வேறு நாட்டிற்குள் அழைத்துச் செல்ல தேவையான ’அதிகாரப்பூர்வ ஆவணங்களை’ இந்த கும்பல்களே வைத்துக்கொள்கிறார்கள். இதனால், இந்த இளைஞர்கள் தங்களது இஷ்டப்படி வெளியேற முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் இந்தக் கும்பலிடம் சிக்கும் வரையில் ‘தாங்கள் இணைய மோசடி வேலைகளை செய்யவே இங்கு அழைத்து வரப்பட்டிருகிறோம்’ என்று இந்த இளைஞர்களுக்கு தெரிவதில்லை.



அந்த கும்பல், இந்த இளைஞர்களை சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளை தொடங்க வைத்து, பிறரிடம் காதல்வயப்படுவது போல் பேசி ஏமாற்றி காசு பறிக்கும் (Extortion) வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதனை Romance scams என்று அழைக்கிறார்கள். அல்லது சமூக வலைதளங்களில் பிறரிடம் நட்பாக பழகி, அவர்களை மோசடியாக வணிகங்களில் முதலீடு செய்ய வைத்து, அந்த பணத்தை ஏமாற்றிய பிறகு அவர்களது கணக்கை முடக்கிவிடுகிறார்கள். 


சீனவைச் சேர்ந்த நிழலுலக குற்றக் கும்பல்களும், தாய்லாந்து நாட்டின் எல்லைப் பகுதிகளில் (லாவோஸ், மியன்மார், கம்போடியா ஆகிய நாடுகள் தாய்லாந்துடன் எல்லையை பகிர்ந்துள்ளது) இயங்கிவரும் ஆயுதக் குழுக்களும் இந்த சட்டவிரோத இணைய மோசடிகளை நிறுவனமயமாக நடத்துவதன் மூலமாக பில்லியன் டாலர்கள் ஈட்டுகிறார்கள். இளைஞர்கள் இந்த மோசடியான வேலையை செய்ய மறுத்தால், இந்த கும்பல், அவர்களை அடித்து சித்தரவதை செய்கிறது.


வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த அப்பாவிகளை இணைய வழியாக ஏமாற்றவதற்காக, அந்தந்த நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த கும்பலுக்கு தேவைப்படுகிறார்கள். இதனால், இந்தியர்கள் மட்டுமல்ல இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களும் இந்த குற்றக் கும்பலிடம் சிக்கியிருக்கிறார்கள்.


ஒடிசாவில் உள்ள ரூர்கேலா மாவட்ட காவல்துறை கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி கம்போடியாவுக்கு இளைஞர்களை அழைத்துச் சென்றதாகக் கூறப்படும் எட்டு பேரைக் கைது செய்த பின்னர் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.


ஐக்கிய நாடுகளின் (UN) மனித உரிமைகள் அமைப்பு, ‘மியான்மரில் குறைந்தது 1,20,000 பேரும் கம்போடியாவில் 1,00,000 பேரும் இந்த கும்பலிடம் சிக்கி இணைய மோசடிகளைச் செய்யவேண்டிய சூழ்நிலைகளுக்கு ஆளாக்கப்பட்டிருகிறார்கள்’ என்று தெரிவித்துள்ளது.


’The Indian Express’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, கம்போடியாவில் 5,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ளனர். 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் மட்டும் 1,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பவதற்கு கம்போடியாவின் புனோம் பென்னில் உள்ள இந்தியத் தூதரகம் உதவியுள்ளது. 


கர்நாடக அரசின் வெளிநாட்டு வாழ் இந்தியர் மன்றத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஆரத்தி கிருஷ்ணா கூறுகையில், ’பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பங்கள் எங்கள் அமைப்பை அணுகினர். அவர்கள் ’Data Entry operator’ வேலைக்குச் சென்றதாகவும், ஆனால் இணைய மோசடிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். அவர்களை திரும்ப இந்தியா கொண்டுவர எங்கள் அமைப்பு வெளியுறவு அமைச்சகம் மற்றும் கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்துடன்  ஒருங்கிணைந்து செயல்பட்டது’ என்று தெரிவித்தார். 


இதேபோல் ஐக்கிய நாடுகளின் சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்புடன் இணைந்து இலங்கை அரசும் 20 இளைஞர்களை மீட்டிருகிறது. சீனாவும் ஆயிரக்கணக்கான தனது நாட்டு இளைஞர்களை விமானம் மூலமாக மீட்டிருக்கிறது. மேலும் கம்போடியாவில் சிக்கயிருந்த இளைஞர்களை தமிழ்நாடு அரசு மீட்டு வந்தது பற்றி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.


இதனைத் தொடர்ந்து, லாவோஸ் கம்போடியா போன்ற நாடுகளில் எந்தவொரு வேலை வாய்ப்பை கிடைத்தாலும், இந்திய குடிமக்கள் ’ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேற்கூறிய விவரங்களில் இருந்து இணைய குற்றக் கும்பலிடம் சிக்கிக்கொண்ட இந்தியர்களை மீட்க பல்வேறு மட்டங்களில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவருகிறது. ஒடிசா மாநில காவல்துறை, கர்நாடக அரசின் வெளிநாட்டு வாழ் இந்தியர் மன்றம் ஆகிய மட்டங்களில் இருந்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும், இந்திய தூதரகங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு முயற்சிகள் மேற்கொள்ளபட்டுள்ளது. 


மேலும் ’நீயா நானா’ நிகழ்ச்சியில் பேசிய ஹரிஹரசுதன் அவர்களிடம் இதுபற்றி தொடர்புகொண்டு பேசினோம். “நான் இந்த விஷயம் பற்றி விரிவாக பேசினேன். ஆனால் குறிப்பிட்ட பகுதி மட்டுமே ஒளிபரப்பாகியிருக்கிறது. குறிப்பாக, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய புகார்களை கொண்டு, இந்த மாநில அரசாங்கங்கள் எடுத்த தீவிர முயற்சி இளைஞர்கள் மீட்கப்படுவதில் முக்கிய பங்காற்றியது. மேலும், ஒரு நாட்டின் வெளியுறவு அமைச்சகம், தூதரகம் ஆகியவற்றின் வேலையே வெளிநாடுகளில் பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் மக்களை காப்பதுதான்” என்று பதிலளித்தார்.


இதிலிருந்து வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இளைஞர்களை மீட்க மாநில அரசுகள் ஏதும் செய்யவில்லை என்பது போன்ற வாதங்கள் ஆதரமற்றவையாகும். ஹரிஹரசுதன் பேசியதின் ஒரு பகுதி மட்டுமே ஒளிபரப்பபட்டுள்ளது. அதனை தங்களை வசதிக்கு திரித்து பரப்புகிறார்கள். 


பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை