மறைக்கப்பட்ட கொரோனா மரணங்கள்!
‘Civil Registration System’ அறிக்கையின் படி கொரோனா மரணங்கள் இந்தியாவில் குறைமதிப்பீடு செய்யப்பட்டிருப்பதும், மறைக்கப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது.
கடந்த 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட இழப்புகளை நாம் மறந்திருக்கமாட்டோம். ஊரடங்கு, நிரம்பி வலிந்த மருத்துவமனைகள், வைரஸ் தொற்று காரணமாக அதிகமான மரணங்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் வெறுங்காலுடன் ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து சென்றது இவையெல்லாம் ஒரு கொடுங்கனவைப் போல் இன்னும் நம் நினைவில் இருக்கின்றன.

கொரானா தொற்றால் மிக அதிகமான மரணங்கள் ஏற்பட்டது பற்றி அப்போது பல செய்திகள் வெளியாகின. கங்கை ஆற்றில் பிணங்கள் மிதப்பது பற்றியும், கங்கை ஆற்றங்கரையில் பல பிணங்கள் புதைக்கப்பட்டிருந்தது பற்றியும் வெளியான செய்திகள் நாட்டையே உளுக்கின. மேலும், சுடுகாடுகளில் வரிசையாக பிணங்கள் எரிக்கப்பட்டது, பிணங்களை எரிக்க 20 மணிநேரம் வரை காத்திருக்க நேர்ந்தது ஆகியவை பற்றியும் செய்திகள் வெளிவந்தன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுவது குறித்தும், மறைக்கப்படுவது குறித்தும் பல்வேறு செய்திகள் வெளிவந்தன. உலக சுகாதார நிறுவனமே (WHO) இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைவிட 10 மடங்கு அதிகமாக இருக்க வாய்ப்பிருப்பதாக அறிக்கை வெளியிட்டது. இதனை இந்திய அரசு அப்போது மறுத்தது. ஆனால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ’Civil Registration System’ அறிக்கையின் படி கொரோனா மரணங்கள் இந்தியாவில் குறைமதிப்பீடு செய்யப்பட்டிருப்பதும், மறைக்கப்பட்டிருப்பதும் தெரிய வருகிறது.

அதன்படி, கொரோனா தொற்றுக்கு முன்னர் உள்ள இரண்டாண்டுகளில் (2018, 2019) ஏற்பட்ட இறப்புகளையும், கொரோனா தொற்றின் போது (2020, 2021) ஏற்பட்ட இறப்புகளையும் ஒப்பிட்டு, வழக்கத்தைவிட அதிக இறப்புகள் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதான் ‘Excess Deaths’ என்று சொல்லப்படுகிறது. 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் 145 லட்சமாக இருந்த இறப்புகள் 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் 183 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த விதத்தில் வழக்கத்தைவிட 37.4 லட்சம் மரணங்கள் (Excess Deaths) அதிகமாக நிகழ்ந்திருக்கிறது. இதனை நாம் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் என்று கணக்கிடுகிறோம்.

ஆனால் அரசு தரப்பில் கொரோனா இறப்புகள் வெறும் 5.33 லட்சம் மட்டுமே என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசின் இந்த அதிகாரப்பூர்வ கணக்கீடு தற்போது ’Civil Registration System’ அறிக்கையின் தரவுகளைக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ள எண்ணிக்கையைவிட இது 7 மடங்கு குறைவானதாக இருப்பதைக் காண்கிறோம்.
2017 முதல் 2020 வரையிலான ஆண்டுகளில் இந்தியாவில் வருடாந்திர இறப்புகள் 4.3 லட்சம் என்ற அளவிலே அதிகரித்து வந்துள்ளது. ஆனால், 2021ஆம் ஆண்டு 2020ஆம் ஆண்டைவிட 21.6 லட்சம் இறப்புகள் அதிகம் நிகழ்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 27% அதிகமானதாகும்.
2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பிறப்பு விகிதம் வெறும் 0.1% மட்டுமே குறைந்துள்ள போது, இறப்பு விகிதம் 25.9% அதிகரித்துள்ளது. இதிலிருந்து கொரோனா பாதிப்பின் போது அரசு அளித்த இறப்பு எண்ணிக்கையைவிட அதிகமான எண்ணிக்கையில் இறப்புகள் ஏற்பட்டுள்ளதை கணிக்க முடிகிறது. கிராமப்புறங்களில் இறப்பு விகிதம் 7.9ஆகவும், நகர்ப்புறங்களில் இறப்பு விகிதம் 6.6ஆகவும் இருக்கிறது. நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது கிராமப்புறங்களில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பதை பிரதிபலிக்கிறது.

2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் பீகாரில் மட்டும் வழக்கத்தைவிட 3.78 அதிக மரணங்கள் (Excess Deaths) நிகழ்ந்துள்ளது. ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் வெறும் 12,315 நபர்கள் மட்டுமே கொரோனா தொற்றால் இறந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் கொடுத்துள்ளது பீகார் மாநிலம். இது 30 மடங்கு குறை மதிப்பீடாகும்.
இதேபோல், குஜராத் மாநிலம் 31 மடங்கும், மத்திய பிரதேசம் 28 மடங்கும், உத்தர பிரதேச மாநிலம் 15 மடங்கும் குறைவான இறப்பு எண்ணிக்கைகள் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டிலும் 9 மடங்கு குறைவான எண்ணிக்கையை மாநில அரசு கொடுத்துள்ளது. இதற்கு மத்தியில் கேரளா, டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் முடிந்தளவு சரியான இறப்பு எண்ணிக்கைகளை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உண்மையான இறப்பு எண்ணிக்கையை மறைத்து குறை மதிப்பீடுகளை ஏன் மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் வெளியிட்டது? என்ற கேள்விதான் முக்கியமானது.

கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது, இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பு பற்றி காட்டமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்தியாவிலுள்ள தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்றை எதிர்கொள்ள எவ்வித உதவியும் செய்யவில்லை. அவை நோயாளிகளை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது. அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகளிலும் மோதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாதது பற்றியும் பேசப்பட்டது. குறிப்பாக, அனைத்து நிலைகளிலும் போதுமான மருத்துவ பணியாளர்கள் இல்லாதது பற்றி பேசப்பட்டது. ஆக்ஸிசன் இல்லாமல் மக்கள் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. நிதிநிலை அறிக்கையில் கூட மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த மோதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என்ற விமர்சனமும் வைக்கப்பட்டது. இந்த கட்டமைப்பு குறைபாடுகள் எல்லாம் சேர்ந்து, கொரோனா இறப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்தியது என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இத்தகைய விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் நீர்த்துப்போகச் செய்யவும், தங்கள் அரசு கொரோனா பேரிடரை நல்ல வகையில் கையாண்டது என்ற பிம்பத்தை உருவாக்கவும் இவ்வாறு குறை மதிப்பீடு செய்யப்பட்டதா? என்ற கேள்வி எழுகிறது.
குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஒரு நாட்டில் எத்தனை நபர்கள் இறக்கிறார்கள், என்ன காரணங்களுக்காக இறக்கிறார்கள், இந்த நோயின் தன்மை என்ன என்பது பற்றிய விவரங்கள் நோய்களையும் அதன் விளைவுகளையும் புரிந்துகொள்வது இன்றியமையாத தேவையாகும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே இந்த கணக்கீடுகளை சரியாக செய்யவில்லை என்றால் நமது கட்டமைப்புகளில் உள்ள குறைபாடுகளை புரிந்துகொள்ள முடியாது, அதனை களைய முடியாது. நமது மருத்துவ கட்டமைப்புகளில் உள்ள போதாமைகளை சுட்டிக்காட்டி, அதனை களைய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், மீண்டும் மீண்டும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.