அதிகரிக்கிறதா குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்? தமிழ்நாட்டில் என்ன நிலை ?
போக்சோ (Pocso) வழக்குகள் அதிகரித்திருப்பது பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வும், புகார் கொடுக்கும் வழிமுறையும் மேம்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
கடந்த 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே செல்வதாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அதிகாரப்பூர்வ தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது. அதற்கு ஆதாரமாக 2021 முதல் 2024ஆம் ஆண்டு வரையில் குழந்தைகள் மீது நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்த புள்ளிவரத்தை கொடுத்துள்ளார்கள்.
திமுக ஆட்சியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே செல்வது வேதனையின் உச்சம். இதை கட்டுப்படுத்தத் தவறிய உங்கள் ஆட்சி எதற்கு?
நீங்கள் வகிக்கும் காவல்துறையின் பொறுப்பு அமைச்சர் பதவி எதற்கு? ஸ்டாலின் சார் ? pic.twitter.com/FIAVmeazFX
இது குறித்து இணையத்தில் தேடியதில், ’THE NEW INDIAN EXPRESS’ செய்தித்தளம் கடந்த மார்ச் மாதம் வெளியிட்டிருந்த கட்டுரை ஒன்றில் இந்த புள்ளிவிவரங்கள் இடம்பெற்றிருப்பதைக் காண முடிகிறது. ஆனால் இந்த கட்டுரை குழந்தைகள் மீது நிகழ்த்தப்பட்டும் பாலியல் வன்கொடுமைகள் எண்ணிக்கையில் அதிகரித்து வருவதை மட்டும் சொல்லாமல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதைப் பற்றியும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு நிகழ்ந்த வன்கொடுமைகள் பற்றி புகார் அளிக்க முன்வருவது அதிகரித்துள்ளது பற்றியும் பேசுகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரையில் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பாக தமிழ்நாட்டில் பதிவான போக்சோ (Pocso) வழக்குகளின் எண்ணிக்கை பொதுவாக ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்திருக்கிறது. 2015ஆம் ஆண்டு 1544 வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2024ஆம் ஆண்டில் 6975 வழக்குகள் பதிவாகியிருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பாக கிட்டதட்ட 5 மடங்கு அதிகமாக போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது.

ஆனால் இவ்வாறு அதிகமான அளவில் போக்சோ வழங்குகள் பதிவு செய்யப்படுவது, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆபத்தான அளவில் அதிகரிப்பாகக் கருதப்படக்கூடாது என்று குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர்களும், அரசாங்க அதிகாரிகாளும் வலியுறுத்திக் கூறுகிறார்கள்.
குழந்தைகள் உரிமை ஆர்வலர் ஏ.தேவநேயன் இதுபற்றிக் கூறுகையில், ’குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாலும், புகார் கொடுக்கும் வழிமுறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாலும் பாலியல் குற்றங்கள் நடக்கும் போது கடந்த காலத்தை ஒப்பிடுகையில் தற்போது மக்கள் அதிகளவில் புகார் கொடுக்க முன்வருகிறார்கள்’ என்கிறார்.
குழந்தைகள் உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் ஸ்டீகனா ஜென்சி என்பவரும் இதையே சொல்கிறார். கல்வி நிறுவனங்களில் பாலியல் குற்றங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சேரவேண்டிய இழப்பீட்டு தொகையை நெறிபடுத்தியதும் அதிகமான மக்கள் புகார் கொடுக்க முன்வந்ததற்கு காரணமாக இருக்கிறது என அவர் கூறுகிறார். தங்களது பள்ளிகளில் நடக்கும் பாலியல் குற்றங்களை புகார் அளிக்காமல் தவிர்க்கும் பள்ளி நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. இதனால் பள்ளி நிர்வாகங்கள் குற்றங்களை மறைக்காமல் புகார்களை பதிவு செய்கிறார்கள். இதுவும் போக்சோ வழங்குகள் எண்ணிக்கையில் அதிகரித்தற்கான காரணமாக இருக்கிறது என்கிறார் ஸ்டீகனா ஜென்சி.
இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். பெரும்பாலும் குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்களில் குற்றவாளிகாக இருப்பவர்கள் குழந்தைகளுக்கு ஏற்கனவே பழக்கமான நபர்கள்தான். இவ்வாறு இருக்கையில், சொந்த உறவினர், நண்பர் என்பதையெல்லாம் தாண்டி பாதிக்கப்பட்ட குழந்தைக்கான நீதியை வேண்டி புகார் கொடுக்கப்படுவது நேர்மறையான அம்சம் என்றே பார்க்க வேண்டியிருக்கிறது.
தமிழ்நாடு காவல்துறையும் கூட தங்களது அதிகாரப்பூர்வ வெளியீட்டில், ’பாலியல் குற்றங்களில் பதிவுசெய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதில் ஒரு மைக்கல்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
2023ஆம் ஆண்டில் பாலியல் குற்றங்கள் பற்றி 64,588 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்திருந்த காவல்துறை 2024ஆம் ஆண்டில் 92,797 கூட்டங்கள் நடத்தியுள்ளது. இதனால் பாலியல் குற்றங்களை புகார் செய்யும் வகையில் காவல்துறையால் கொண்டுவரப்பட்ட ’காவலன் உதவி’ என்ற செயலி தரவிறக்கம் செய்யப்படுவதும் அதிகரித்துள்ளது. இவையெல்லாம் பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
2025 மார்ச் மாதம் காவல் துறை இயக்குநராக இருந்த சங்கர் ஜிவால் கூறுகையில், ’பாலியல் குற்றங்கள் புகார் அளிக்கப்படும் முறையில் மாற்றம் ஏற்பட்டுவருவதை’ குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான போக்சோ வழங்குகள் காவல் நிலையத்தில் நேரடியாக தெரிவிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டதாக இருந்த நிலை மாறி, தற்போது குழந்தைகள் உதவி மையம், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மூலமாக கொடுக்கப்படும் புகார்கள் மூலமாக பதிவு செய்யப்படும் போக்சோ வழங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டில் காவல் நிலையத்தில் நேரடியாக புகார் செய்யப்பட்டதன் வழியாக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகள் 88 சதவீதமாக இருந்தது 2024ஆம் ஆண்டில் 77 சதவீதமாக குறைந்துள்ளது.
குறிப்பாக சமூக நலத்துறை (SWD) மற்றும் மருத்துவமனைகள் மூலமாக புகார் அளிக்கப்படுவதன் வழியாக பதிவு செய்யப்படும் பாலியல் குற்ற வழக்குகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அல்லது பெண்கள் சிகிச்சைக்காகவும், கருவுற்றதன் காரணமாகவும் மருத்துவமனைகளுக்கு வரும் போது, அந்த மருத்துவமனைகள் மூலமாக பாலியல் குற்றங்கள் குறித்த புகார்கள் வழக்குகளாக பதியப்படுகிறது. இது பாதிக்கப்பட்ட குழந்தையோ அல்லது அவரது குடும்பமோ புகார் அளிக்க முன்வரவில்லை என்றாலும் மேற்கூறிய வகையில் அரசாங்க நிறுவனங்கள் மூலமாக முயற்சி எடுக்கப்பட்டு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
பாலியல் வன்கொடுமைகள் பரவலாக புகார் அளிக்கப்படுவதும், வழக்குகள் பதிவு செய்யப்படுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு நீதி வழங்குவதில் நேர்மறையான பங்கு வகிக்கிறது என்பது இதிலிருந்து தெரியவருகிறது. அதேநேரத்தில், வழக்கு விசாரணைகளை துரிதமாக நடத்தப்படுவதும் விரைவில் நீதி பெற்றுத் தருவதும், பாலியல் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதும் இதற்கு இணையான முக்கியத்துவம் உடைய பணிகளாகும். இதற்கான நீதி நிர்வாக கட்டமைப்புகளை வலுப்படுத்தாமல், பாலியல் குற்ற வழக்குகளை பதிவு செய்வதில் மட்டும் அக்கறை காட்டுவது பயனளிக்காது.