YouTurn

பாஜகவின் எஸ். ஜி. சூர்யா பரப்பிய பொய் செய்திகளின் தொகுப்பு இதோ!

பாஜகவின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா தனது சமூக ஊடகப்பக்கங்களில் பரப்பிய பொய் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்

பாஜகவின் எஸ். ஜி. சூர்யா பரப்பிய பொய் செய்திகளின் தொகுப்பு இதோ!

இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் கடந்த ஆண்டு ஜூன் 05 அன்று சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, 9 மாதங்கள் விண்வெளியிலேயே தங்கும் நிலை அவருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பல போராட்டங்களுக்கு பின்பு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் மார்ச் 19 அன்று பூமிக்குத் திரும்பினார்கள். 


சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் அவரது வருகையை இந்தியர்கள் கொண்டாடி மகிழ்ந்தாளும், பலரும் அவரை இந்து மதத்துடன் தொடர்புபடுத்தி மதவாதத்தை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர். 


அதன் வரிசையில், பாஜகவின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா தனது ’எக்ஸ்’ தளத்தில், ‘செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மென்பொருளான ‘ChatGPT’யை ஆதாரமாகக் காட்டி, விண்வெளியில் இருந்தபோது கூட சுனிதா வில்லியம்ஸ் சைவ உணவு மட்டுமே உண்டதாக பதிவிட்டிருந்தார். மேலும், ChatGPTயில் தான் கேட்ட அதே கேள்வியைக் கேட்டு பின்னர் பதிவிடுங்கள் என்று YouTurn-னிடம் சவாலும் விட்டிருந்தார்.


அந்த சவாலை ஏற்று, YouTurn அணி ChatGPTயில் ‘sunita williams astronaut a vegetarian by diet?’ என்ற கேள்வியைச் சோதித்துப் பார்த்தோம். ‘சுனிதா வில்லியம்ஸ் சைவம் அல்ல என்றும், அவர் இறைச்சி மற்றும் பிற அசைவ உணவுகளை விருப்பத்துடன் உண்பவர்' என்றும் பதில் கிடைத்தது. மொத்தத்தில் ஒரே கேள்விக்கு இரண்டு விதமான பதில்களை ChatGPT வழங்கியது. 


பொதுவாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் (AI) என்பது மீப்பெருமளவிலான தகவல்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது. பயனர்களால் அழுத்தமாகக் கேள்விகள் கேட்கப்படும் போது, இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மாதிரிகள் இதுவரை இல்லாத புதிய தகவல்களை உருவாக்குகிறது. பயனர் கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்க தன்னிடம் இருக்கும் தகவல்கள் போதாமையாக இருக்கும் போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் இந்த இடைவெளியைப் பூர்த்தி செய்யும் விதமாக புதிய தகவல்களை உருவாக்குகிறது. இதனை ‘AI Hallucination’ என்று அழைக்கிறார்கள்


இதைப் பற்றியெல்லாம் எந்தப் புரிதலும் இல்லாமல் வெறுமனே ’ChatGPT’ என்னும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மாதிரியின் பதிலையே முழுமையான ஆதாரமாக ஏற்றுக்கொள்ளும் படி சொல்கிறார் எஸ்.ஜி. சூர்யா. 


Fact-Check என்பது ’ChatGPT’ அளிக்கும் பதிலை அப்படியே பதிவிடுவது அல்ல. அது நம்பத்தகுந்த அதிகாரப்பூர்வமான ஆவணங்களில் இருந்து உண்மையை கண்டறிவது என்பதை அறியாத எஸ்.ஜி. சூர்யா, இதுவரை பல போலி செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளார். அது குறித்த தொகுப்பை இங்கு காண்போம். 


நேரு மற்றும் இந்திரா காந்தி தனக்கு தானே பாரத ரத்னா விருது வழங்கிக்கொண்டார்களா?


நேரு 1955-ல் மற்றும் இந்திரா காந்தி 1971-ல் பிரதமர்களாக இருந்த போது தனக்கு தானே பாரத ரத்னா விருது வழங்கிக்கொண்டார்கள் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றை கடந்த 2021-ல் தனது எக்ஸ் தளத்தில் எஸ்.ஜி. சூர்யா பதிவிட்டிருந்தார்.


 X Link | Archive Link


பிரதமராக இருந்த காலத்தில், இந்தியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பாரத ரத்னா விருதை நேருவும், இந்திராகாந்தியும் தனக்குத்தானே வழங்கிக் கொண்டார்களா என்பது குறித்து ஆய்வு செய்ததில், ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஜூலை 15, 1955 அன்று ராஷ்டிரபதி பவனில் ஒரு சிறப்பு அரசு விருந்தை நடத்தினார். இந்த நிகழ்வில்தான் ஜவஹர்லால் நேருவுக்கு பாரத ரத்னா விருதை பிரசாத் அறிவித்தார் என்பதை 27 மே, 2020 தேதியில் வெளியான தி வயர் செய்தியின் மூலம் அறிய முடிகிறது.


இதனை, ஜூலை 16, 1955 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், இந்த நிகழ்வு 'மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது' என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது.



மேலும் பிரசாத் நேருவை 'நமது காலத்தில் அமைதியின் சிறந்த சிற்பி' என்று வர்ணித்ததாக, அதே செய்தித்தாள் அவரை மேற்கோள் காட்டியுள்ளது. 



"உண்மையில், எனது பிரதமரிடமிருந்தோ அல்லது அமைச்சரவையிடமிருந்தோ எந்த பரிந்துரையோ அல்லது ஆலோசனையோ இல்லாமல் இந்த கௌரவத்தை வழங்க முடிவு செய்ததால், அரசியலமைப்பிற்கு விரோதமாக நடந்து கொண்டதாக ஜனாதிபதியே ஒப்புக்கொண்டார்” என்றும் அந்த செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து நேரு அவருக்கான விருதை அவரே பரிந்துரைக்கவில்லை என்பதை உறுதிசெய்ய முடிகிறது. 


இதே போன்று, 15 ஜனவரி, 2019 தேதியன்று 'தி க்வின்ட்' தளத்தில் வெளியான செய்தியில், "தற்போதைய வங்கதேசத்தில் 14 நாட்கள் நீடித்த போரில் இந்தியாவை வெற்றிபெறச் செய்ததற்காக இந்திரா காந்திக்கு விருது வழங்கப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் 'ரஷீத் கித்வாய்' ஏபிபி நியூஸ் தளத்துக்கு எழுதிய கட்டுரையில், அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, இந்திரா காந்திக்கு கவுரவத்தை வழங்குவதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் படிக்க: நேரு மற்றும் இந்திரா காந்தி தனக்கு தானே பாரத ரத்னா விருது வழங்கிக்கொண்டார்களா?


ஒடிசா இரயில் விபத்து களத்தில் ஆர்எஸ்எஸ் சேகவர்கள் என பழைய புகைப்படத்தை பகிர்ந்த பாஜக எஸ்.ஜி.சூர்யா !


கடந்த 2023 ஜூன் 02 அன்று ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே இரவு 7.30 மணிக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஒரே பாதையில் வந்ததால் பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


இந்நிலையில் இந்த இரயில் விபத்து நிகழ்ந்த பகுதியில் ஆர்எஸ்எஸ் சேகவர்கள் களத்தில் உதவி வருவதாகவும், உதவி தேவைப்படுவோர் தொடர்புகொள்ளுமாறும் குறிப்பிட்டு, ஒரு மொபைல் எண்ணையும் குறிப்பிட்டிருந்தார் தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா. 


X Link | Archive Link


எனவே இது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், எஸ்.ஜி.சூர்யா பதிவு செய்திருந்த புகைப்படம், கடந்த 2015ம் ஆண்டே ‘Shreeharsha Perla’ எனும் எக்ஸ் பக்கத்தில் “ஆனேக்கல் இரயில் விபத்து” என்று குறிப்பிட்டு பதிவிடப்பட்டு இருந்தது.



Twitter link | Archive link


கடந்த 2015 பிப்ரவரி 14 அன்று கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் பகுதியில் நிகழ்ந்த இரயில் விபத்து தொடர்பாக டவ்ன் எனும் செய்தி தளம் வெளியிட்ட கட்டுரையில் அதே ரயிலின் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. மேலும், 2015 பிப்ரவரி 14ம் தேதி samvada.org எனும் இணையதளத்தில் ஆனேக்கல் இரயில் விபத்தில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டு இப்படத்தை பதிவிட்டு உள்ளனர்.



மேலும் ஒடிசா விபத்து நிகழ்ந்த பகுதிக்கு மருத்துவக் குழுவுடன் 20/25 ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் செல்வதாக மேற்கு வங்கம் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளதாக ஜூன் 2ம் தேதி ‘Uniindia’ எனும் இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.


இதன் மூலம் களத்தில் ஆர்எஸ்எஸ் சேகவர்கள் என எஸ்.ஜி.சூர்யா பதிவிட்ட புகைப்படம் ஒடிசா அல்ல, அது கடந்த 2015-ல் கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் இரயில் விபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை அறிய முடிகிறது.


மேலும் படிக்க: ஒடிசா இரயில் விபத்து களத்தில் ஆர்எஸ்எஸ் சேகவர்கள் என பழைய புகைப்படத்தை பகிர்ந்த பாஜக எஸ்.ஜி.சூர்யா !


தமிழன் பிரசன்னா பொய் சொன்னதாகத் தவறான தகவலைப் பகிர்ந்த பாஜக எஸ்.ஜி.சூர்யா !


நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2022-ல், "நீட் விலக்கு மசோதா 2.0 ஆளுநர் ஏற்பாரா, எதிர்ப்பாரா?" எனும் தலைப்பில் நிகழ்ந்த விவாத நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த தமிழன் பிரசன்னா பேசுகையில், "2014-ல் மோடி அரசு அமைத்த ரஞ்சித் ராய் செளத்ரி கமிட்டியின் அறிக்கையை 96வது நாடாளுமன்ற நிலைக்குழுவில் வைக்கிறார்கள். அந்த நாடாளுமன்ற நிலைக்குழு விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறது. ரஞ்சித் ராய் செளத்ரி அறிக்கையில் நீட் வேண்டாம் என்கிற மாநிலத்திற்கு விலக்கு அளிக்கலாம் எனக் கூறி இருந்தார்கள். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்" எனப் பேசி இருந்தார்.



இதையடுத்து, எஸ்.ஜி.சூர்யா தனது எக்ஸ் தளத்தில், " 2015-ல் ரஞ்சித் ராய் செளத்ரி காலமானார், பிரதமர் மோடி 2016-ல் எப்படி கமிட்டி அமைத்தார். நீட் தொடர்பாக ரஞ்சித் ராய் செளத்ரி தலைமையில் குழுவே அமைக்கப்படவில்லை. தமிழன் பிரசன்னா பொய் கூறுகிறார்" எனக் குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார். 


X Link | Archive Link


இது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், ரஞ்சித் ராய் செளத்ரி இறப்பதற்கு முன்பாக 2014 ஜூலை மாதம் நேஷனல் கமிட்டி அமைக்கப்பட்டு 2015-ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக, ‘நிதி ஆயோக் 2016’ அறிக்கையில் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இதன் மூலம் நீட் தொடர்பாக ரஞ்சித் ராய் செளத்ரி தலைமையில் குழுவே அமைக்கப்படவில்லை என எஸ்.ஜி.சூர்யா பதிவிட்ட தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது. 



அதே சமயம், நியூஸ் 18 சேனல் விவாதத்தில் தமிழன் பிரசன்னா, 2014-ல் மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக ரஞ்சித் ராய் செளத்ரி தலைமையில் தேசியக் குழு அமைக்கப்பட்டது எனத் தெரிவித்து இருப்பார். 3 முறை 2014 எனக் கூறிவிட்டு இறுதியாக வேகத்தில் பேசும் போது 2016 என (வீடியோவில் 20வது நிமிடத்தில்) எனக் கூறி விட்டார். ரஞ்சித் ராய் செளத்ரி 2015-ல் உயிரிழந்துள்ளார். தமிழன் பிரசன்னா ரஞ்சித் ராய் செளத்ரி குழு 2014 என்பதற்கு பதிலாக 2016-ல் அமைக்கப்பட்டது என தவறுதலாகக் கூறியிருப்பதையும் காண முடிகிறது. 


 2014 என்பதற்கு பதிலாக 2016-ல் அமைக்கப்பட்டது என தவறுதலாகக் கூறியதால், பாஜக அரசு ரஞ்சித் ராய் செளத்ரி தலைமையில் கமிட்டி அமைக்கவே இல்லை எனக் கூறி விட முடியாது. ரஞ்சித் ராய் செளத்ரி இறப்பதற்கு முன்பாக 2014 ஜூலை மாதம் நேஷனல் கமிட்டி அமைக்கப்பட்டு 2015-ல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது உண்மையே.



மேலும் 2016-ல் தாக்கல் செய்யப்பட்ட 92வது நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில், " சிஎம்இடி(பொது மருத்துவ நுழைவுத் தேர்வு) வரம்பிற்கு வெளியே இருக்க விரும்பும் மாநிலங்களைத் தவிர்த்து நாடு முழுவதும் சிஎம்இடி அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைக்கிறது. இருப்பினும், அத்தகைய மாநிலங்கள் பின்னர் சிஎம்இடி-ல் சேர விரும்பினால் அதற்கு ஒரு ஏற்பாடு இருக்க வேண்டும் " எனத் தெளிவாய் இடம்பெற்று உள்ளது.


இதன் மூலம் 2014-ல் பாஜக தலைமையிலான அரசு ரஞ்சித் ராய் செளத்ரி தலைமையில் அமைத்த நேஷனல் கமிட்டியின் அறிக்கையில், மருத்துவப் படிப்பிற்கான பொது நுழைவுத் தேர்வு வேண்டாம் எனக் கூறும் மாநிலங்களுக்கு விலக்கு கொடுக்கலாம் என இடம்பெற்றதாக தமிழன் பிரசன்னா கூறியது உண்மையே என அறிய முடிகிறது.


மேலும் படிக்க: தமிழன் பிரசன்னா பொய் சொன்னதாகத் தவறான தகவலைப் பகிர்ந்த பாஜக எஸ்.ஜி.சூர்யா !


எம்.பி கனிமொழி கூறிய உண்மையான தகவலை பொய் என்ற பாஜகவின் சூர்யா !


மக்களவையில் ரயில்வேதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்.பி 2022-2023-ல் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ.59 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், வடக்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ.13,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரே தேசம் எனப் பேசும் நீங்கள் ரயில்வே நிதி ஒதுக்கீட்டில் வடக்கு, தெற்கு பாகுபாடு பார்க்கக்கூடாது " எனப் பேசியது வைரலாகியது.


இந்நிலையில், "நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி கனிமொழி கூறியது அப்பட்டமான பொய். உண்மையான ஒதுக்கீடுகள் : ஆந்திரா ₹7,032 கோடி, தமிழ்நாடு ₹3,865 கோடி, கர்நாடகா ₹6,091 கோடி, கேரளா ₹1,085 கோடி" என எஸ்.ஜி. சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.


X Link | Archive Link


இது குறித்து ஆய்வு செய்ததில், பிப்ரவரி 03-ம் தேதி தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஏ.கே.அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, " தெற்கு ரயில்வே 2022-23 நிதியாண்டிற்கு ரூ.7,134.56 கோடி ஒதுக்கீடு, கூடுதல் பட்ஜெட் ஆதாரமாக ரூ.1,064.34 கோடி கிடைத்துள்ளது. மொத்த ஒதுக்கீட்டில் இரட்டிப்பு திட்டங்களுக்கு ரூ.1,445.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, கேஜ் மாற்றும் திட்டங்களுக்கு ரூ.346.80 கோடியும், புதிய வழித்தடங்களுக்கு ரூ.59 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது " எனத் தெரிவித்து இருக்கிறார்.



2022-23 நிதியாண்டில் வடக்கு ரயில்வேயில் புதிய ரயில் வழித்தடங்களுக்கு ரூ.13,282 கோடியும், தெற்கு ரயில்வேயில் புதிய வழித்தடங்களுக்கு ரூ.59 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை கீழே காணலாம். இதையே, எம்.பி கனிமொழியும் மக்களவையில் பேசி இருக்கிறார்.



இதன் மூலம், 2022-2023-ல் தெற்கு ரயில்வேவின் புதிய வழித்தடங்களுக்கு ரூ.59 கோடியும், வடக்கு ரயில்வேவின் புதிய வழித்தடங்களுக்கு ரூ.13,200 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என எம்.பி கனிமொழி கூறியது சரியான தகவலே என்பது உறுதியாகிறது.


ஆனால், கனிமொழி கூறியது பொய் எனக் கூறி எஸ்.ஜி. சூர்யா குறிப்பிட்ட ரூ.3,865 கோடியானது 2022-2023-ல் தமிழ்நாட்டில் ரயில்வேவிற்கு ஒதுக்கப்பட்ட மொத்த நிதியாகும் என அறிய முடிகிறது. 


மேலும் படிக்க: எம்.பி கனிமொழி கூறிய உண்மையான தகவலை பொய் என்ற பாஜகவின் சூர்யா !


ChatGPT கொடுத்த பதிலை உண்மை என பரப்பும் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி. சூர்யா!


சமீபத்தில் எஸ்.ஜி. சூர்யா தனது ’எக்ஸ்’ தளத்தில், ‘செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மென்பொருளான ‘ChatGPT’யை ஆதாரமாகக் காட்டி, விண்வெளியில் இருந்தபோது கூட சுனிதா வில்லியம்ஸ் சைவ உணவு மட்டுமே உண்டதாக’ பதிவிட்டிருந்தார்.


X Link | Archive Link


எனவே சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி மையத்தில் இருந்த நாட்களில் என்ன மாதிரியான உணவுகள் உட்கொண்டார் என்பது குறித்து இணையத்தில் தேடினோம்.


NDTV’ கடந்த ஆண்டு ஜூன் 07 அன்று வெளியிட்டுள்ள செய்தியில், ‘59 வயதான திருமதி வில்லியம்ஸ் தனது விண்வெளி பயணத்தில், தற்போது இரண்டாவது முறையாக சர்வதேச விண்வெளி நிலையம் வந்துள்ளார் என்பதையும், அங்கு சென்றதும் "மீன் கறி" என்ற இந்திய உணவை சாப்பிடுவார், சர்வதேச விண்வெளி நிலையம் அவரது வீடு போல உணர வைப்பதாகவும் நாசா NDTV-க்கு உறுதிப்படுத்தியது” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதே போன்று, அவர் விண்வெளி மையத்தில் இருந்தபோது பீட்சா, வறுத்த கோழி, இறால் ஆகியவை உண்டதாகவும் பல செய்தி ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. 



மேலும்,  சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 288 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்தபோது, விலங்கு இறைச்சியும், முட்டையும் உணவாக இருந்ததாகவும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன் மூலம், விண்வெளியில் இருந்தபோது கூட சுனிதா வில்லியம்ஸ் சைவ உணவு மட்டுமே உண்டதாக எஸ்.ஜி. சூர்யா சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பரப்பிவருவதை உறுதி செய்ய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை