பெண்கல்வியை ஊக்கப்படுத்தும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்!
பெண் சிசுக் கொலையை ஒழித்தல், பெண் கல்வியை மேம்படுத்துதல், சிறு குடும்ப முறையை ஊக்கப்படுத்துதல் மற்றும் ஏழைப் பெண்களின் வாழ்வை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களை முதன்மையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது தான் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்.
பெண் சிசுக் கொலையை ஒழித்தல், பெண் கல்வியை மேம்படுத்துதல், சிறு குடும்ப முறையை ஊக்கப்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் ஏழைப் பெண்களின் வாழ்வை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களை முதன்மையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது தான் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்.
1992 ஆம் ஆண்டு அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், தற்போது ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்விக்கான ஊக்கத் தொகையும் அளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதனால், அந்த குழந்தைக்கு கல்வி தடையில்லாமல் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
யார் பயனடையலாம்?
திட்டம் 1: ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூ.50,000 தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத்தொகை ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு உடனே வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு பெண் குழந்தை 01.08.2011 க்கு முன்பு பிறந்த குழந்தை எனில் ரூ.25,000 மட்டுமே முதலீடு செய்யப்படும்.
திட்டம் 2: இதே போன்று ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்திருப்பின், அப்பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான தலா ரூ.25,000 முதலீடு செய்யப்படுகிறது. ஆனால் 01.08.2011 க்கு முன்பு பிறந்த குழந்தைகள் எனில் தலா ரூ. 15,000/- மட்டுமே வரவு வைக்கப்படும்.
அந்த பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்ததும், வைப்புத் தொகை மற்றும் வட்டி இரண்டும் சேர்த்து முதிர்வுத் தொகையாக அந்த பெண் குழந்தையின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும். இந்தப் பலனைப் பெற, பெண் குழந்தை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதியிருக்க வேண்டியதும் கட்டாயம். மேலும் 18 வயதில், முதிர்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பொழுது அந்த பெண் குழந்தைக்கு திருமணமும் நடந்திருக்க கூடாது. இதன் மூலம் முதிர்வுத் தொகையானது பெண் குழந்தைகளின் உயர்கல்வியைத் தொடர உதவும்.
மேலும், பெண் குழந்தையின் 6-வது வயதில் இருந்து ஆண்டுதோறும் கல்விச் செலவுகளை ஈடுசெய்யும் விதமாக, வைப்புத்தொகையில் இருந்து ஆண்டுதோறும் ரூ. 1800 ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
அதேபோல், முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும், இரண்டாவது பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் என மொத்தம் ஒரு குடும்பத்தில் 3 பெண் குழந்தைகள் இருந்தாலும், சிறப்பு அனுமதியின் பேரில் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தனித் தனியாக ரூ. 25,000 இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.
ஒருவேளை இரண்டு பெண் குழந்தைகள் பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு முதல் குழந்தையோ அல்லது இரண்டாவது குழந்தையோ இறந்திருப்பின் அவர்களின் இறப்பு சான்று இணைக்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயனடைய பெற்றோரில் ஒருவர் 40 வயதிற்குள் கருத்தடை செய்ததற்கான சான்று அளிக்க வேண்டும். மேலும் ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. ஆண்டு வருமான வரம்பு ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும். மேலும் இரண்டாவது குழந்தை பிறந்து 3 வயது முடிவதற்குள் இதில் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
- வருமான சான்றிதழ்
- பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்
- சாதிச் சான்றிதழ்
- கருத்தடை சான்றிதழ் (Sterilization Certificate)
- இருப்பிட சான்றிதழ்
- திருமணச் சான்றிதழ்
- ஆண் குழந்தை இல்லை என்ற சான்றிதழ் (No male child certificate)
முதிர்வுத்தொகை விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
18 வயது நிறைவடைந்து முதிா்வுத் தொகை பெற விரும்புவோர் கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன், மாவட்ட சமூகநல அலுவலகத்திலோ, அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்திலோ சமா்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
- பெண் குழந்தைகளின் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ்
- வைப்புத்தொகை ரசீது நகல்
- குழந்தையின் வங்கிக் கணக்கு புத்தகம்
புதுப்பித்தல் கட்டாயம்:
முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் வைப்புத் தொகையை ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையும் புதுப்பிக்க (renewal) வேண்டியது கட்டாயம். அதற்கு அருகில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று நிலையான வைப்புத் தொகைக்கான ரசீதை கொடுத்து திட்டத்தை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு குழந்தைக்கு 18 வயது முடியும் வரை தொடர்ந்து 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.