சென்னை மெட்ரோ திட்டம் இரண்டு: 65% நிதியை ஒன்றிய அரசு வழங்குகிறதா?
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்குப் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் கடனை CMRL செலுத்த முடியவில்லை என்றால் மாநில அரசுதான் செலுத்த வேண்டும்.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிதொடங்கியதில் இருந்தே இத்திட்டத்திற்கான நிதி பற்றிய விவாத ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே நடந்த வண்ணம் உள்ளது. அதில் புதிதாகச் சேர்ந்ததுதான் மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கான நிதியில் (ரூ.63,246 கோடி) 65 சதவீதத்தை ஒன்றிய அரசே ஏற்கும் என்ற செய்தி.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடு, சமக்ரசிக்ஷா திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான நிரந்தரத் தீர்வு எனப் பல கோரிக்கைகளை முன்வைத்தார்.
பிரதமரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், 2021-22ம் நிதியாண்டில் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கப்படும் என ஒன்றிய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால், ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளிக்காததினால் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதி மாநில அரசுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் திட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே தாமதமின்றி நிதி வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக ஒன்றிய அரசும் மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்குக் கடந்த 3ம் தேதி ஒப்புதல் அளித்தது. ஆனால், இது தொடர்பாகத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, ஒட்டு மொத்த நிதியையும் (100%) ஒன்றிய அரசு வழங்குவதாகக் குறிப்பிட்டார்.
இத்திட்டத்திற்கான ஒட்டு மொத்த மதிப்பீடு ரூ.63,246 கோடி. இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.7,425 கோடி; மாநில அரசின் பங்கு ரூ.22,228 கோடி; பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் கடன் ரூ.33,593 கோடி. இக்கடனுக்கான உத்தரவாதம் தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு வெறும் ஒப்புதல் வழங்கிய செய்தியை முழு நிதியும் அளிப்பதாகப் பொய் செய்தி பரப்பினார் எஸ்.ஜி.சூர்யா.
தற்போது இத்திட்டத்திற்கான மொத்த செலவில் 65 சதவீதத்தை ஒன்றிய அரசு ஏற்பதாக PIB தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என செய்திகள் வரத் தொடங்கியுள்ளது. அதாவது, ஒன்றிய அரசின் பங்கான ரூ.7,425 கோடி மற்றும் கடன் தொகையான ரூ.33,593 கோடி சேர்த்து ரூ.41,018 கோடி ஒன்றிய அரசின் நிதி என அண்ணாமலை, எச்.ஜி.சூர்யா முதற்கொண்டு பல்வேறு பாஜகவினரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். சன் டிவி-யும் தனது பங்கிற்கு இதே செய்தியை நியூஸ் கார்டாக பதிவிட்டுள்ளது.

PIB வெளியிட்ட செய்தியின் கடைசியில், CMRL (Chennai Metro Rail Limited) கடனை திருப்பி செலுத்த இயலாத பட்சத்தில் அதற்கு நிதியுதவி வழங்குவது மாநில அரசின் கடமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட முகமையிடமிருந்து கடன் தொகை மாநில அரசுக்கும் மாநில அரசின் பட்ஜெட்டிலிருந்து CMRL நிறுவனத்திற்கும் செல்லும் தற்போதைய வழிமுறைக்கு மாறாக, சம்பந்தப்பட்ட முகமையிடமிருந்து மத்திய அரசுக்கும் மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து pass-through assistance என்ற முறையில் நேரடியாக CMRL நிறுவனத்திற்குச் செல்லும் வழிமுறையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மெட்ரோ பணிக்காகப் பெறப்படும் கடன் ஒன்றிய அரசு மூலமாக CMRL நிறுவனத்திற்கு வரும் வகையில் வழிமுறை மாற்றப்பட்டுள்ளது. ஆனால், அந்த கடனுக்கான பொறுப்பு மாநில அரசுதான்.
மெட்ரோ நிதி பற்றி முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறுவது பாஜகவினருக்கு ஒன்றும் புதிதில்லை. 2023, ஆகஸ்ட் 30-ம் தேதி பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் PDF வடிவில் ஒரு பட்டியலை வெளியிட்டார். மோடியின் கடந்த 9 ஆண்டுக்கால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு 10.76 லட்சம் கோடிக்கு மேல் நிதி அளிக்கப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்பட்டியலில் மெட்ரோவுக்கு ரூ.72,868.71 கோடி நிதி வழங்கியதாகக் கூறப்பட்டிருந்தது. இது பொய் என அப்போதே யூடர்ன் கட்டுரை வெளியிட்டது.
மேலும் படிக்க: சென்னை மெட்ரோ பணிக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கவில்லை… பாஜக ஒப்புக்கொண்ட பொய்!
மேலும் கடந்த செப்டம்பர் மாதம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிக்கு வெளிநாடுகளில் இருந்து பெற்றுத்தரப்பட்ட சுமார் ரூ.21,560 கோடியில் இதுவரை (செப்) ரூ.5,880 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஆனால், ரூ.18,564 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு நிதியமைச்சர் விளக்கம் அளித்தார். இப்படி ஒன்றிய அரசும் பாஜகவினரும் மெட்ரோ நிதி குறித்து பலமுறை தவறான தகவல்களைப் பேசி வருகின்றனர் என்பதை மேற்கண்ட தகவல்களிலிருந்து புலப்படுகிறது.