தேங்காய் சுற்றுவது அறிவியலா அதிசயமா?
ஈர்ப்பு மையம் என்ற அடிப்படை அறிவியல் காரணமாக இயல்பாக தேங்காய் சுற்றுவதை பக்தியின் பெயரில் அதிசயம் என்று தவறாக பரப்புகிறார்கள்.
சமூக வலைத்தளத்தில் போலி அறிவியலையும் மூட நம்பிக்கைகளையும் பரப்பும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், தற்போது குறிப்பிட்ட ஒரு கோவிலில் தேங்காயும் உரல் கல்லும் தானாகவே சுற்றும் அதிசயம் நடப்பதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வருகிறது. திருப்பூரில் வஞ்சிப்பாளையம் என்ற இடத்தில் ஶ்ரீ சுயம்பு வாலை வாராஹி சித்தர் பீடம் என்ற கோவில் உள்ளதாகவும், அங்கு சென்று வழிபடும் பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேங்காய் அல்லது உரல் மீது ஏறி நின்றால் இது தானாகவே சுற்றுகிறது என்றும் பரப்பப்படுகிறது. நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருப்பவர்கள் இதனை பரப்புவதுடன் இந்த கோவில் கட்டுமானத்திற்கு நன்கொடை அளிக்கச் சொல்லி விளம்பரமும் செய்கிறார்கள்.
தேங்காய் அல்லது உரல் ஏன் சுற்றுகிறது?
ஈர்ப்பு மையம் (Center of Gravity) என்ற அறிவியல் கோட்பாட்டைக் கொண்டு இதனை விளக்க முடியும். சமநிலையில் ஓய்வில் இருக்கும் ஒரு பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் எடை அப்பொருளின் அனைத்து புள்ளிகளிலும் பரவியிருந்தாலும், அதன் எடை முழுவதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் செயல்படுவது போல் தோன்றும். அது தான் அப்பொருளின் ஈர்ப்பு மையம். இது பொருளின் அடிப்படையான வடிவவியல் பண்பு (geometric property) ஆகும். சமச்சீரான வடிவமுள்ள (symmetrically shaped) பொருட்களின் ஈர்ப்பு மையம் பொதுவாக அதன் மையத்தில் தான் இருக்கும். சதுரம், செவ்வகம், கோளம் (spherical) ஆகிய பொருட்களின் ஈர்ப்பு மையம் அப்பொருளின் மையத்தில் தான் இருக்கும்.
ஆனால் இங்கே சதுரம், செவ்வகம் ஆகியவற்றின் (உதாரணமாக ஒரு செங்கல்) தளம் தட்டையாக இருப்பதால் அதில் நீங்கள் ஏறி நிற்கும் போது அதன் நிலை (position) மாறுவதில்லை. ஆனால், கோள வடிவிலான பொருளுக்கு (உதாரணமாக தேங்காய்) தளம் நேராக இருக்காது. அது வளைந்து (curved) இருக்கும். அதனால் ஒருவர் அதில் ஏறி நிற்கும் போது அதன் எடைப் பரவலில் மாறுபாடு ஏற்படும். இதனால் அப்பொருளின் ஈர்ப்பு மையம் மாறுவதில்லை என்றாலும் பொருளின் நிலை (position) மாறும். இதனால் அந்தப் பொருள் அசைகிறது.
இப்போது ஒரு கேள்வி வரும் ஏன் செங்கலில் ஒருவர் ஏறி நிற்கும் போது அதன் நிலை மாறவில்லை. தேங்காய்-ன் நிலை மட்டும் மாறுகிறது?
ஒரு செங்கல் தரையில் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். அதன் மொத்த எடையும் அதன் ஈர்ப்பு மையத்தில் குவிந்திருக்கும். இந்த செங்கல் எடை அது இருக்கும் பூமியின் மீது ஒரு விசையை செலுத்துகிறது. ‘ஒரு பொருளின் மீது செயல்படும் ஒவ்வொரு விசைக்கும் அதற்குச் சமமான மற்றும் எதிர் வினையான விசை உண்டு’ என்ற நியூட்டனின் மூன்றாம் விதிப்படி பூமியும் செங்கல் மீது எதிர் விசை செலுத்துகிறது. பூமி செலுத்தும் இந்த எதிர்விசை, செங்கலின் ஈர்ப்பு மையத்திற்கு நேர்கோட்டு விதத்தில் இருக்கும். இப்போது செங்கல் மீது ஒருவர் ஏறி நிற்கும் போது, அந்த மனிதர் எடை காரணமாக பூமி மீது கூடுதல் விசை செலுத்தப்படுகிறது. பூமியும் பதிலுக்கு எதிர் விசை செலுத்துகிறது. செங்கலின் அடித்தளம் தட்டையாக (Flat) இருக்கும் காரணத்தால் பூமி செலுத்தும் இந்த எதிர் விசை செங்கல் மற்றும் மனிதனின் எடைக்கு நேர்கோட்டில் தான் இருக்கும். இதனால் செங்கல் அமைவதில்லை (சுற்றுவதில்லை).
ஆனால் தேங்காய்-ன் அடித்தளம் வளைவானது (Curved). பூமி மீது தேங்காய் குறிப்பிட்ட ஒரு புள்ளியில் மட்டும் தொட்டிருக்கிறது (pivot like). இப்போது தேங்காய் மீது மனிதன் ஏறி நிற்கும் போது, அதன் மீது பூமி செலுத்தும் எதிர் விசை ஈர்ப்பு மையத்திற்கு நேர் கோட்டில் இருப்பதில்லை. இதனால் Torque விசை உண்டாகிறது. இதுதான் தேங்காய் சுற்றுவதற்கு காரணமாக இருக்கிறது.
இப்போது தேங்காய் கடினமான தளத்தில் (rough surface) வைக்கப்படும் போது, பூமிக்கும் தேங்காய்-ன் மேற்பரப்பிற்கும் இடையில் ஏற்படும் உராய்வு காரணமாக தேங்காய் சுற்றுவது தடை படலாம். ஆனால் தேங்காய் சுற்றவில்லை என்றாலும் அது நிச்சயம் அசையும்.
இதுவொரு அடிப்படையான அறிவியல் கோட்பாடு. நீங்கள் ஒரு தேங்காய் அல்லது கோள வடிவில் உள்ள கல்லை வைத்து அதன் மீது ஏறி நின்றால் அது அசையதான் செய்யும். புவியின் எந்த இடத்தில் இதனை செய்து பார்த்தாலும், இந்த தரை வழுவழுப்பாக இருக்கும் பட்சத்தில் தேங்காய் சுற்றத்தான் செய்யும்.
இவ்வாறு அடிப்படை அறிவியல் காரணமாக இயல்பாக நடக்கும் விஷயத்தை பக்தியின் பெயரில் அதிசயம் என்று தவறாக பரப்புகிறார் இந்திரஜா. இந்திரஜா மட்டுமல்ல நக்கலைட்ஸ் சிந்து, உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட சமூக வலைத்தளப் பிரபலங்கள் இதனை பரப்பி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் இந்த கோவில் பற்றி ஒரே பாணியில் எழுதிக் கொடுத்தது போல் பேசுகிறார்கள். அனைவரும் வீடியோவின் இறுதியில் கோவிலுக்கு நன்கொடை வழங்குமாறு வங்கி கணக்கு விவரங்களை பகிர்ந்திருக்கிறார்கள். இவையெல்லாம் இந்த மூடநம்பிக்கைகளை மக்கள் மத்தியில் பரப்ப செய்யப்படும் paid promotions தான் என்று நாம் நம்புவதற்கான அத்தனை முகாந்திரங்களும் இருக்கின்றன.
சமூக வலைத்தளத்தில் பணம் வாங்கிக்கொண்டு பரப்பப்படும் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.