காவிரி நீர், நாட்டு மாடு மற்றும் பல! Typical நாம் தமிழர் உருட்டுகள்!
நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்வில் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் ’கோவை கார்த்திகா’ சில தவறான கருத்துகளை பேசியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி நெய்வேலி அருகில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்வில் பேசிய அக்கட்சியின் பேச்சாளர் ’கோவை கார்த்திகா’ சில தவறான கருத்துகளை பேசியுள்ளார்.
அவர் பேசும்போது, ’1925 இல் தமிழ்நாட்டிற்கு வந்த ஒட்டு மொத்த காவிரி நீரின் அளவு 740 டிஎம்சி. வெள்ளம் வந்தால் கடை மடை வரை காவிரி வந்து பாயும். ஆனால் இப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு தமிழ்நாட்டிற்கு வரும் காவிரி நீரின் அளவு வெறும் 177.25 டிஎம்சி தான். அதற்கு காரணம், காவிரியில் ஒரு அணை கட்ட வேண்டுமென்றால் கர்நாடக அரசு தமிழ்நாட்டு அரசை கேட்டு தான் கட்ட வேண்டும் என்கிற 1974 ஒப்பந்தம் காலாவதியாகப் போகிறது. ஆனால் அதனை கருணாநிதி புதுப்பிக்கவில்லை’ என்று பேசியிருக்கிறார்.
காவிரியில் வரலாற்று ரீதியாக தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது என்பது குறித்து தேடியதில், பல்வேறு தரவுகள் கிடைத்தது. முதலில், ’INDIA TODAY’ 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ‘அறிக்கைகளின்படி, மொத்த நீரில் சுமார் 602 டி.எம்.சி நீரை தமிழ்நாடு முன்பு பெற்று வந்தது. கர்நாடகாவுக்கு சுமார் 138 டி.எம்.சி மட்டுமே கிடைத்தது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தெளிவான ஆதாரங்கள் கொடுக்கப்படவில்லை.
மேலும் தேடுகையில், ’காவிரி நீர் தகராறு தீர்ப்பாயம்’ 2007ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின் படி, 50 விழுக்காடு சார்பு தன்மையில் கணக்கிடப்பட்டால் காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு செல்லும் நீர், தவிர்க்க முடியாமல் கடலில் கலக்கும் நீர் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்தே காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி தான் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டிற்கு 419 டி.எம்.சி, கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி என்று ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், நாம் தமிழர் கார்த்திகா தமிழ்நாட்டிற்கு மட்டுமே 740 டி.எம்.சி நீர் வந்துகொண்டிருந்ததாக தவறான தகவலை பேசுகிறார்.
தமிழ்நாட்டிற்கு காவிரியில் வெள்ளம் ஏற்படும் சில ஆண்டுகளில் மட்டுமே 500 டி.எம்.சிக்கும் அதிகமாக நீர் வந்திருக்கிறது. அதிலும், 1961-62 ஆண்டில் மட்டுமே காவிரியில் தமிழ்நாட்டிற்கு 750 டி.எம்.சி நீர் வந்திருக்கிறது. ஆனால், வழக்கமான ஆண்டுகளில் இவ்வளவு தண்ணீரை தமிழ்நாடு எதிர்பார்க்க முடியாது.
அதேவேளையில் உச்ச நீதிமன்றம் காவிரி விவகாரத்தில் 2018ஆம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கிய போது தமிழ்நாட்டிற்கு 177.25 டி.எம்.சி நீர் மட்டுமே ஒதுக்கியது. இது இதற்கு முன்னர் ஒதுக்கப்பட்ட 192 டி.எம்.சி நீரை விட குறைவுதான்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து முன்னொரு காலத்தில் எல்லா ஆண்டுகளிலும் தமிழ்நாட்டிற்கு 740 டி.எம்.சி காவிரி நீர் வந்துகொண்டிருந்ததாக சொல்லப்படுவது தவறாக தகவல் என்பது தெரிய வருகிறது. அதேவேளையில், காவிரி நீரில் தமிழ்நாட்டின் பங்கு படிப்படியாக குறைந்துள்ளதும் தெளிவாக தெரிகிறது. 2007ஆம் ஆண்டில் 419 டி.எம்.சி.யாக இருந்த பங்கு, 2018ல் 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால், 1925ஆம் ஆண்டில் காவிரியில் தமிழ்நாட்டிற்கு 740 டி.எம்.சி நீர் ஒதுக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுவது முற்றிலும் தவறான தகவல்.
அதேபோல், நாட்டு மாடு ஜெர்சி மாடு பற்றி கார்த்திகா பேசும்போது, “கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லி பசு என்கிற ஜெர்சி பசுவைக் கொண்டுவந்தார்கள். அதற்கு Bovine growth hormone (BGH) என்கிற ஊசியை போட்டார்கள், அதனால் அந்த மாடு பெருத்துப் போகும். பெருத்த மாடு தன் தசையை பாலாக மாற்றும். அதனால் பாதிப்பு அதிகம். பெண் பிள்ளைகள் சீக்கிரம் வயசுக்கு வந்தார்கள். பெரிய பெண்களுக்கு கர்பப்பையை எடுக்கிற நிலை வந்து விட்டது” என்று பேசியிருக்கிறார்.
ஜெர்சி பசுவில் பால் அதிகம் சுரப்பது பற்றி கால்நடை மருத்துவரிடம் ’You Turn’ சார்பில் பேசினோம். அவர் இது குறித்து தெளிவுபடுத்தினார்.
பால் உருவாக்கம் என்பது நாட்டுப்பசு மற்றும் கலப்பின பசுக்களில் ஒரே விதமாகத்தான் நடைபெறுகிறது. பால் சுரக்கும் அளவில் மட்டுமே இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. அதற்கு பரம்பரையாக மாடுகள் பயன்படுத்தப்பட்ட நோக்கமும், மேலாண்மையும், இனவிருத்திக் கொள்கைகளுமே காரணமாகும். வணிக நோக்கத்திற்காக பண்ணையில் கலப்பின பசுக்களும், மரபான கிராமப்புற விவசாயப் பணிகளில் நாட்டு பசுக்களும் வளர்க்கப்படுகின்றன.
வணிக நோக்கத்தில் வளர்க்கப்படும் மாடுகளை பொறுத்தவரை அவை எவ்வளவு அதிகம் பால் சுரக்கிறது என்பதுதான் முக்கியம். பால் சுரப்பது (Milk synthesis) என்பது ஒரு நிகழ்முறை (Process). பால் கறப்பது அல்லது கறக்கப்படுவது (Milk letdown) என்பது மற்றறொரு நிகழ்முறை.
பால் சுரப்பதில் மாட்டிலுள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பிலிருந்தும், தசையிலிருந்தும் இரத்தவோட்டம் மூலமாக மடிக்கு பாய்ந்து அங்குள்ள பஞ்சத்திசுக்கள் (Parenchymal tissue) மூலம் அவை மீளுருவாக்கம் செய்யப்பட்டு சொட்டு சொட்டாக பஞ்சத்திசுக்களின் வெற்றிடத்தில் தற்காலிகமாக தேக்கப்படுகின்றன.
அப்படித் தேக்கப்படும் பால் மடிக் காம்பின் வழியாக காலையும் மாலையும் கறந்து கொள்ளப்படுகிறது. இப்படி கறக்கும் போது மனிதன் அதிக அளவில் ஆற்றலை செலுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக கலப்பின பசுக்களில் 15 முதல் 35 லிட்டர் வரை பால் தேங்கி இருக்கும். இவ்வளவு பாலை காலையும் மாலையும் கறப்பது என்பது மிகப்பெரிய சவாலாகும். மேற்கத்திய மற்றும் ஐரரோப்பிய நாடுகளில் இதை எளிமையாக்க ஒரு வகை ஹார்மோன் செலுத்தப்படுகின்றது. அந்த ஹார்மோன் மடியில் உள்ள பஞ்சத்திசுக்களை பிழிய உதவுகின்றது. இதனால் பால் எளிதாக மடிக்காம்பின் வழியே பாய்கின்றது. மாறாக நாட்டுப் பசுக்களில் பால் மிக குறைவாகவே சுரப்பதால் இதை எளிதாக கைகளால் கறக்க முடியும். இந்த ஹார்மோன் ஊசியை பயன்படுத்த தேவையில்லை.
இந்த ஹார்மோன் ஊசியைப் போட்டு கறக்கும் பாலால் நுகர்வவோருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்று ’You Turn’ தரப்பில் கேட்டோம். இந்த ’Bovine growth hormone (BGH)’ என்ற ஹார்மோன் ஒரு புரதம் (Protein) ஆகும். இதன் செயல்பாடு அதிகபட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே இருக்கும். அதற்கு மேல் இந்த ஹார்மோன் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உட்பட்டு சிதைந்து சிறுநீர் மற்றும் பால் மூலமாக வெளியேற்றப்படும். இந்தப் பாலை அருந்துவதால் மனிதருக்கு ஏதேனும் பக்கவிளைவு ஏற்படுமா என்றால் இல்லை என்பது தான் பதில்.
காரணம் இந்த பாலில் உள்ளது ஹார்மோனின் முதல்நிலை வளர்ச்சிதை மாற்றக் கழிவே தவிர மூல ஹார்மோன் அல்ல. மனிதர்களால் பால் அருந்தப்படும் போது இந்த முதல்நிலை வளர்ச்சிதை மாற்றத்தின் கழிவு மனிதனின் வயிற்றில் செரிக்கப்பட்டு உறிஞ்சப்பட்டு திசுக்களில் இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்றக் கழிவாக வெளியேற்றம் செய்யப்படும். ஆகவே மூல ஹார்மோனால் ஏற்படும் விளைவுகள் மனிதரில் நிகழ வாய்ப்பே இல்லை. குறிப்பாக பள்ளிப்பருவ பெண் குழந்தைகள் சிறுவயதில் பருவம் எய்துகிறார்கள் மற்றும் வயதில் மூத்த பெண்களுக்கு கர்ப்பப்பை எடுக்கிற நிலைமை வந்துவிட்டது என்பதெல்லாம் கற்பனை கதையே தவிர உண்மையில்லை என்று கால்நடை மருத்துவர் பதிலளித்தார்.
நாட்டுப்பசு பாலா, கலப்பினப்பசு பாலா எது சிறப்பானது என்றால், அது இனத்தை பொறுத்தது அல்ல. மாடுகள் வளர்க்கப்படும் முறையைப் பொறுத்ததே என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதிலிருந்து கலப்பின மாட்டுப் பாலை அருந்துவதால் பெண்களுக்கு ஆரோக்கிய கேடு ஏற்படுவதாக நாம் தமிழர் கார்த்திகா பேசியது முற்றிலும் அறிவியலுக்கு புறம்பானது என்பது தெளிவாகிறது.
அடுத்ததாக, ஜம்புலிங்கனாரின் பெயரில் நெய்வேலியில் ஒரு தெரு கூட கிடையாது. குவாட்டர்ஸ் ஓரத்தில் சிலை மட்டுமே உள்ளது என்று பேசிகிறார் கார்த்திகா.
ஆனால் நெய்வேலியில் ஜம்புலிங்க முதலியார் பெயரில் சாலை இருக்கிறது. இதனை மறைத்து, ஜம்புலிங்க முதலியாரை தமிழ்நாடு அரசு இதுவரை சரியான வகையில் கௌரவிக்கவில்லை என்ற தவறான தகவலை மேடையில் பேசுகிறார் நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா.