YouTurn

பால் தேவையற்ற உணவா? உண்மையும் உருட்டும்!

பால் அருந்துவதால் குழந்தைகளுக்கு Type 1 நீரிழிவு நோய் (Type 1 diabetes) ஏற்படுகிறது, பெண்களுக்கு ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று தவறான கருத்துகளை பரப்பிவருகிறார்கள்.

பால் தேவையற்ற உணவா? உண்மையும் உருட்டும்!

பொதுவாக சமூக வலைதளங்களில் உணவு, மருத்துவம் பற்றிய பல்வேறு தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன. தமிழ் சூழலைப் பொறுத்தவரையில், நாட்டு மாடுகளை ’அழிக்க’ கொண்டுவரப்பட்ட ஜெர்சி மாடுகளின் பால் பெண்களுக்கு பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது, அவர்கள் சிறுவயதிலே பூப்பேய்துகிறார்கள் (Early Puberty) என்பது போன்ற தகவல்கள் அடிக்கடி பகிரப்படுவதை நாம் கண்டிருப்போம். 


அந்தவகையில், ’நமது உணவில் ’பால்’ சேர்த்துக்கொள்ள வேண்டிய தேவையே இல்லை’ என்ற தகவலை தற்போது பரப்பி வருகிறார்கள். ‘Behindwoods’ யூட்யூப் தளத்திற்கு பேட்டியளித்த ஒருவர், ‘பற்கள் வளர்வதற்கு முன்பு வரைதான் பால் குடிக்கவேண்டும். பசு மாடுகளே கூட கன்றுக்குட்டிக்கு பற்கள் முளைத்தவுடன் அதன் பால் குடிக்க அனுமதிக்காமல் தள்ளிவிடும். மாட்டுப்பாலில் கால்சியம், புரதச் சத்து இருக்கிறது என்று கூறுகிறார்கள். மாடு எதை சாப்பிட்டு இந்த பாலை உற்பத்தி செய்தது? மாடு செடிகளை தானே சாப்பிடுகிறது. அதேபோல் மனிதர்கள் கீரை சாப்பிட்டால் இந்த சத்துகள் கிடைக்கும். கீரை, பேரிச்சம் பழம், கேழ்வரகு மாவு, அத்திப்பழம் ஆகியவை சாப்பிட்டால் நமக்கு கால்சியம் கிடைத்துவிடும். பாலில் கேசின் (Casein) என்ற புரதம் இருக்கின்றது. அது கணையத்தில் இருக்கும் இன்சூலின் சுறுக்கும் பீட்டா செல்களை அழிக்கிறது. அதனால் தான் தற்போது நான்கு வயது குழந்தைகளுக்கு கூட Type 1 நீரிழிவு நோய் (Type 1 diabetes) ஏற்படுகிறது. அதனால் பால் நமக்கு அவசியம் இல்லாத உணவு, அதனை உணவில் சேர்க்கக்கூடாது. பாலில் ஹார்மோன்கள் இருக்கும். பெண்களின் உடல் பாலில் உள்ள இந்த ஹார்மோன்களையும் தங்களது சொந்த ஹார்மோன்களையும் குழப்பிக்கொள்ளும். இதனால் பெண்கள் பால் குடிப்பதை தவிர்க்கவேண்டும்’ என்று பேசுகிறார். 


அவரது இந்த பேச்சை ‘மாட்டு பால் இவ்ளோ ஆபத்தா? கேக்கவே அதிர்ச்சியா இருக்கு!' என்று தலைப்பு வைத்து  ‘Behindwoods’ யூட்யூப் தளம் பரப்பிவருகிறது.


image.png


முதலில் பாலின் ஊட்டச்சத்து திறன் பற்றி பார்ப்போம். ஊட்டசத்து விநியோகத்தை கணக்கிடுவதர்காக பயன்படுத்தப்படும் DELTA என்ற ஊட்டச்சத்து மாதிரியின்படி, 29 ஊட்டச்சத்துகளை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதில் 28 ஊட்டச்சத்துகள் பாலில் இருக்கிறது. கால்சியம், புரதம், கொழுப்பு, வைட்டமின் ஏ, பி2, பி5, பி12 போன்ற ஊட்டச்சத்துகளும்; பாஸ்பரஸ், பொட்டாசியம் நுண்ணூட்டச் சத்துகளும் பாலில் இருக்கிறது. இம்மாதிரி ஊட்டச்சத்துகளை வழங்கும் 98 உணவுப் பொருட்களில், முதல் 5 இடங்களில் பால் இடம்பெற்றிருக்கிறது. அத்தகைய ஊட்டச்சத்து மிக்க உணவு பால். 


மற்றொரு பக்கம், பரவலாக பாலை உணவுப் பொருளாக பயன்படுத்தும் நாடுகளில் குழந்தைகள் மத்தியில் குறை வளர்ச்சி (child stunting) ஏற்படுவது குறைந்திருக்கிறது என்று ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. இதனால், அதிகமான குழந்தைகள் குறை வளர்ச்சியால் பாதிக்கப்படும் நாடுகள் இளம் குழந்தைகளுக்கு பால் உணவாக கொடுக்கும் திட்டத்தை பரிந்துரைக்கிறார்கள். 


image.png


இந்தியாவில் பட்டினியும் ஊட்டச்சத்து குறைபாடும் பெருமளவில் நிலவி வருவது குறித்து நமது ‘You Turn’ தளத்தில் ஏற்கனவே கட்டுரை வெளியிட்டுள்ளோம். அதில், “இந்திய அரசாங்கம் செயல்படுத்தும் பொது விநியோக முறை என்று சொல்லப்படக்கூடிய ரேசன் முறையில் கொடுக்கப்படும் உணவுப் பண்டங்கள் ஒரு மனிதன் வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் தேவையான சக்தியை கொடுக்கும் கலோரியை வழங்குவது பற்றிய கண்ணோட்டத்தை மட்டுமே கொண்டுள்ளது. இரும்பு, மெக்னீசியம், விட்டமின்கள் போன்ற நுண்ணூட்டச் சத்துகளை இவற்றால் தரமுடியாது. குழந்தைகளிடம் இருக்கும் குறை வளர்ச்சிக்கும், தடை வளர்ச்சிக்கும் இந்த நுண்ணூட்டச் சத்துகளின் குறைபாடு முக்கிய காரணமாக இருக்கிறது” என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்கியிருப்போம். 


இதனை கணக்கில் கொண்டு பார்க்கும்போது, இந்திய சூழலில் பால் எத்தகைய முக்கியமான ஊட்டச்சத்து மிக்க உணவாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும். 


ஆனால் அந்த வீடியோவில் பேட்டியளிப்பவர், பால் மூலமாக கிடைக்கும் ஊட்டச்சத்துகள் கீரை, பேரிச்சம் பழம், கேழ்வரகு மாவு, அத்திப்பழம் ஆகியவை மூலமாகவும் கிடைக்கும் என்கிறார். இவ்வாறு பல்வேறு வகையான உணவுகளை உண்பதன் மூலம் பல்வேறு ஊட்டச்சத்துகளை பெறும் முறையை பன்முகப்பட்ட உணவுமுறை (Dietary Diversity) என்று சொல்வார்கள். இவ்வாறு கீரை, கேழ்வரகு, பருப்பு, பழங்கள், dry nuts போன்ற பல்வேறு உணவுகளை வழக்கமாக எடுத்துக்கொள்ளும் நிலையில் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் இல்லை. இதனால்தான் அவர்களுக்கு பால் முக்கியமான உணவாக இருக்கிறது. 


அடுத்ததாக, பாலில் இருக்கும் கேசின் (Casein) என்ற புரதம் குழந்தைகளுக்கு Type 1 நீரிழிவு நோய் (Type 1 diabetes) ஏற்பட காரணமாக இருப்பதாக சொல்கிறார். ஆனால், அங்கீரிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இந்த கருத்தை மறுக்கின்றன. பாலில் இருக்கும் கேசின் (Casein) என்ற புரதம், Insulin autoantibodies (IAA) என்பதை தூண்டுக்கூடியதாக இருக்கலாம், ஆனால் அது Type 1 நீரிழிவு நோயை உண்டாக்குகிறது என்று சொல்லமுடியாது என்று ஒரு ஆய்வுக் கட்டுரை கூறுகிறது. 


image.png


அதேபோல், பாலில் இருக்கும் ஹார்மோன்களால் பெண்களுக்கு உடல்நலப் பிரச்சனைகள் வரும் என்று சொல்லப்படுவதும் நிரூபிக்கப்பட்ட உண்மை அல்ல. சீனாவில் பூப்பு ஏய்தாத குழுந்தைகள் மத்தியில் செய்யப்பட்ட ஆய்வில், பால் அருந்தும் குழந்தைகளின் இரத்தில் புரோஜெஸ்ட்டிரோன் (Progesterone) என்ற பெண் பால் ஹார்மோனின் அளவு தற்காலிகமாக மிகச் சிறிய அளவில் உயர்ந்துள்ளது. அதேபோது, இந்த குழந்தைகளின் சிறுநீரில் ‘ப்ரெக்னேனீடியால்’ என்ற மூலக்கூறு அதிகமாக இருந்துள்ளது. அதாவது, மேற்கூறிய இரத்ததில் இருக்கும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்கள் சிதைவதினால் உருவான மூலகூறு இவை. மேற்கூறிய விவரங்களிலிருந்து, மாட்டுப் பாலில் இருக்கும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்கள் பெண்கள் உடலில் தற்காலிகமாக சிறிய அளவிலே வினையாற்றுகிறது. பின்னர் அது சிதைந்து நிறுநீர் வழியாக வெளியேறிவிடுகிறது. இது எந்த வகையிலும் பெண்களின் ஹார்மோன் சமநிலையை பாதிப்பதில்லை என்று இந்த ஆய்வு நிரூபிக்கிறது. 


image.png


அங்கீகரிக்கப்பட்ட எந்த ஆய்வுகளும் மாட்டுப் பாலை ஆபத்தானதாக கருதவில்லை. உலகின் எந்த நாட்டின் சுகாதார நிறுவனமும் பாலை ஆபத்தான உணவு என்று வரையறைக்கவில்லை. பாலை மட்டுமே ஊட்டச்சத்துக்கான ஒரே உணவாக நம்பி அதனை அதிகமாக சார்ந்திருக்கும் போது தான் பிரச்சனை உண்டாகிறது என அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். இதனால், பல்வேறு ஊட்டச்சத்துகளுக்காக பன்முகத்தன்மைப்பட்ட உணவு வகைகளை உட்கொள்வதை வழக்கமாக்க வேண்டும். அதன் மூலமாக தேவையான ஊட்டச்சத்துகளை பெறமுடியும். பிரச்சனைகளையும் தவிர்க்க முடியும்.


ஒரு விஷயத்தை அறிவியல், சமூகம், குறிப்பிட்ட நாடுகளின் சூழல் இவற்றைக் கணக்கில் கொண்டு முழுமையாக பகுத்தறிய வேண்டும். அதனை பல்வேறு கோணங்களில் ஆராய வேண்டும். அவ்வாறு செய்யாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளை அரை உண்மைகளாக மாற்றி ”பால் மிக ஆபத்தான உணவு” என்பது போன்ற தவறான கருத்துகளை பரப்பக்கூடாது.  

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை