YouTurn

அரோக்கியக் கேடு விளைவிக்கும் பால் கலப்படம்!

உற்பத்தி செய்யப்படும் பால் மற்றும் பால் பொருட்களைவிட தேவை மிக அதிகமாக இருப்பதாலே பாலில் கலப்படம் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

அரோக்கியக் கேடு விளைவிக்கும் பால் கலப்படம்!

பால் என்பது இந்தியாவில் அடிப்படை ஊட்டச்சத்துள்ள உணவாக பார்க்கப்படுகிறது. கால்சியம், வைட்டமின்கள், புரதம் போன்ற ஊட்டச் சத்துக்கள் பாலில் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. இதனால், பாலுக்கான தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதேவேளையில், பாலில் கலப்படம் அதிகமாக செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. எல்லா நிறுவனங்களின் பாலும் 20 % மட்டுமே மாட்டுப்பால் இருப்பதாகவும், 50% சோயா பாலும், 30% தண்ணீரும் கலப்படம் செய்யப்பட்ட பாலையும்தான் நாம் குடித்துக்கொண்டிருக்கிறோம் என்றும் வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. பாலுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால், மாடுகளின் எண்ணிக்கை முந்தைய காலத்தைவிட குறைவாகவே இருக்கிறது. இதனை ஈடுகட்டவே பாலில் பெருமளவு கலப்படம் செய்யப்படுவதாகவும் பரப்பப்படுகிறது. இதுகுறித்து நாம் இணையத்தில் தேடினோம்.


image.png


கடந்த 2017ஆம் ஆண்டிலே டெல்லியில் உள்ள ‘மைத்ரேயி கல்லூரி’ டெல்லி, நொய்டா, குர்கான் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய நகரங்களிலிருந்து எடுக்கப்பட்ட பாலின் மாதிரிகளை (Samples) சோதனை செய்தது. யூரியா, அம்மோனியம் சல்பேட், டிடர்ஜெண்ட் (Detergent) போன்ற இரசாயன பொருட்கள் பாலில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது ஆய்வில் தெரியவந்தது. குறிப்பாக பாலின் அமிலத்தன்மையை (acidic) கட்டுப்படுத்த Neutralizer என்ற பெயரில் காஸ்டிக் சோடா, சோடியம் பைகார்பனேட் மற்றும் சோடியம் கார்பனேட் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பால் விரைவில் புளித்துப் போவதை தடுக்கவும், பால் கெட்டுப்போகாமல் தடுக்கவும் சேர்க்கிறார்கள். உணவு கலப்படம் தடுப்பு (PFA) சட்டத்தின் படி, இவ்வாறாக பால் உறைதலையும் புளித்தலையும் தடுக்க Neutralizers என்ற வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளது. 



மேலும், பாலில் இயற்கையாக இருக்கும் யூரியா (0.2 to 0.7 g/l) அளவைவிட 20 மடங்கு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு யூரியா அதிகமாக இருக்கும் பாலை மக்கள் குடிப்பதால் சிறுநீரகம் செயலிழக்கும் அபாயமுள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். 



’பால் கலப்படம் குறித்த தேசிய கணக்கெடுப்பு’ கடந்த 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நடத்தப்பட்ட இந்த ஆய்வு இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் மாதிரிகளை சோதனைக்குட்படுத்தியது. இந்த ஆய்வு முடிவுகளை 2012ஆம் ஆண்டு அறிக்கையாக வெளியிடப்பட்டது. கிட்டதட்ட 70 சதவீத பால் மாதிரிகள் பல்வேறு கலப்படங்களால் மாசுபட்டதாகவும், நிர்ணயிக்கப்பட்ட தரங்களுக்குக் கீழே இருப்பதாகவும் கண்டறியப்பட்டது. கோவா மற்றும் புதுச்சேரியைத் தவிர, அனைத்து மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு கலப்படம் செய்யப்பட்டிருப்பதை இந்த ஆய்வு கண்டறிந்தது. 


பிஹார், சத்தீஸ்கர், ஒடிசா, மேற்கு வங்காளம், மிசோரம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களிலிருந்து எடுக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும் உணவுப் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு இணங்காத வகையில் கலப்படம் செய்யப்பட்டிருந்ததும் இந்த ஆய்வில் தெரியவந்தது. 


உற்பத்தி தளத்தில் பால் கையாளப்படும் போதும், பேக்கேஜிங் செய்யும் போதும், சுகாதாரமற்ற முறையில் கையாளப்படுவதாலும், பால் டாங்குகள் (Tanks) மற்றும் வால்வுகள் (valves) கழுவப்படும் போது டிடர்ஜெண்ட் சரியாக வெளியேற்றப்படாததாலும் பாலில் டிடர்ஜெண்ட் (Detergents) கலந்திருப்பதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. பாலின் தடிமன் (thickness) மற்றும் பாகுத்தன்மையை (viscosity) அதிகரிப்பதற்காக யூரியா, ஸ்டார்ச், குளுக்கோஸ், ஃபார்மலின் போன்றவை சேர்க்கப்படுகிறது. 


பாலில் இத்தகைய வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால் உணவு நஞ்சாதல் மற்றும் குடல் இரைப்பை சார்ந்த நோய்கள் ஏற்படுத்துவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், பாலில் கலக்கப்படும் செயற்கையாக தயாரிக்கப்பட்ட சேர்மங்களால் (synthetic compounds) இதய நோய், புற்று நோய் ஆகியவை ஏற்படுகின்றன. 

உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு கீழானது கண்டறியப்பட்ட மாதிரிகளில் பெரும்பாலும் தண்ணீர் அதிகளவில் கலப்படும் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், பாலின் தரம் குறைவதுடன் அதிலுள்ள ஊட்டச்சத்தும் குறைகிறது.


இந்தியர்களில் பெரும்பாலானோருக்கு Lactose Intolerant என்று சொல்லப்படக்கூடிய பால் ஒவ்வாமை இருந்தாலும், இந்தியாவில் பால் நுகர்வு என்பது அதிகமானதாக இருக்கிறது. 89 மில்லியன் மெட்ரிக் டன்கள் பால் நுகர்வு செய்து இந்தியா தான் பால்  நுகர்வில் உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது. உற்பத்தி செய்யப்படும் பால் மற்றும் பால் பொருட்களைவிட தேவை மிக அதிகமாக இருப்பதாலே பாலில் கலப்படம் செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. 


இந்தியா உலகிலே அதிகமாக பால் உற்பத்தி செய்யக்கூடிய நாடாகும். கடந்த 2004 ஆண்டிலிருந்து இந்தியாவில் பால் உற்பத்தியின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாக இருக்கிறது. இது பால் மற்றும் பால் பொருட்களுக்கான புதிய சந்தைத் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ’ஆவின்’ மட்டுமே ஒருநாளுக்கு 35 லட்சம் லிட்டர்கள் பால் கொள்முதல் செய்கிறது. கர்நாடகவில் கடந்த 2024ஆம் ஆண்டு மே மாத நிலவரத்தின் படி, ஒரு நாளுக்கு 90 லட்சம் லிட்டர்கள் பால் உற்பத்தி செய்யப்பட்டது. இதனால் உற்பத்தி செய்யப்படும் பால் அளவைவிட பொருட்களைவிட தேவை மிக அதிகமாக இருப்பதாகவும் அதனால்தான் பாலில் கலப்படம் செய்யப்படுவதாகவும் சொல்லப்படுவது உண்மையல்ல. மேலும், பால் கொள்முதல் மற்றும் உற்பத்தி நடைமுறையில் கண்டிப்பாக தரச் சோதனைகள் (Quality Control Tests) நடத்தப்படுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் முன்னணி பால் நிறுவனமான ’HATSON’ தனது வலைத்தளத்தில் கொள்முதல் செய்யப்படும் பாலின் தரத்தை பரிசோதிப்பது பற்றி குறிப்பிட்டுள்ளது. அதில் கொள்முதல் செய்யப்படும் பாலில் கொழுப்பு (Fat ), Solids Not Fat (SNF) ஆகிய அம்சங்கள் குறித்து சோதிக்கப்படுவதாக குறிப்பிடுகிறது. 


image.png


அதேபோல், தமிழ்நாட்டின் அரசு நிறுவனமான ’ஆவின்’, கர்நாடகாவின் அரசு பால் நிறுவனமான ‘நந்தினி’ ஆகியவை கொள்முதல் செய்யும் பாலின் தரத்தை உறுதி செய்ய சோதனைகள் நடத்துவது பற்றி தங்களது அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 


பாலில் கலப்படம் செய்யப்படுவது உண்மைதான். ஆனால், நாம் குடிக்கும் அனைத்து வகையான பாலும் வரைமுறையின்றி கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது உண்மையல்ல என்பது மேற்கண்ட விவரங்களிலிருந்து தெரிய வருகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை