YouTurn

ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரம் இல்லை; கூட்டாட்சியை பாதுகாக்கும் முக்கியமான தீர்ப்பு!

ஆளுநர் ஆர். என்.ரவி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த மசோதாக்கள் அனைத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரம் இல்லை; கூட்டாட்சியை பாதுகாக்கும் முக்கியமான தீர்ப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு  ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல்  அதன் மீது எவ்வித கருத்தும் கூறாமல் நிறுத்தி வைத்திருந்தார். இவற்றில் 8 மசோதாக்கள் 2021 ஆம் ஆண்டு திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றப்பட்டவை ஆகும். இவற்றில் பெரும்பாலானவை, மாநில பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சர் வேந்தராகப் பொறுப்பேற்க ஏதுவாக பல்கலைக்கழகங்களின் சட்டங்களைத் திருத்துவதற்கான மசோதாக்கள் ஆகும்.

 

இதனால் ஆளுநர் ஆர்.என். ரவி அரசியலமைப்புச் சட்டத்தின் 200ஆவது சரத்தை சாதகமாக பயன்படுத்தி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாக்களை நிறுத்தி வைத்திருந்தார்.

 

சரியான காரணம் ஏதும் சொல்லாமலே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநரால் இவ்வாறு நிறுத்தி வைக்க முடியுமா என்றும் ஆளுநரின் அதிகார வரம்பு என்னவென்றும் தேசிய அளவில் கடந்த இரண்டாண்டுகளாக  விவாதிக்கப்பட்டு வந்தது. மூன்றாண்டுகளுக்கு மேலாக மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதை எதிர்த்து கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்தது.

 

நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் 08/04/25 என்று தீர்ப்பு வழங்கியது.

 

இந்த தீர்ப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை மதிக்காமல் ஆளுநர் தன்னிச்சையாக நடந்து கொள்வதை கண்டித்துள்ளது. மேலும் அரசியலமைப்பின் 200ஆவது சரத்து எவ்வாறு அணுகப்படவேண்டும் என்றும் வழிகாட்டியுள்ளது. இந்தியா முழுவதும் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் சட்டமன்றத்திற்கும் மோதல் போக்குகள் தொடர்ந்து வரும் இன்றைய சூழலில் இந்த தீர்ப்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கும் மாநில சுயாட்சி கோட்பாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 

இதேபோன்று பஞ்சாப் மாநில ஆளுநர் நடவடிக்கை தொடர்பான ஒரு வழக்கில் 2023ஆம் ஆண்டு நவம்பர் 10 தேதி உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சந்தரசூட் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. 'ஆளுநர் ஒரு மசோதாவிற்கான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக இருந்தால் அதற்கான உரிய காரணங்களை எடுத்துரைத்து சட்டமன்றத்தின் மறுபரிசீலனைக்கு திரும்ப அனுப்பவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆளுநர் தனக்கு ‘வீட்டோ(Veto)’ அதிகாரம் இருப்பது போல் செயல்படுவது அரசியலமைப்பின் அடிப்படைகளுக்கு எதிரானது' என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்படிருக்கிறது. இதனை மீண்டும் உறுதி செய்யும் வகையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 200ன் படி, மாநில சட்டமன்றம் ஒரு மசோதாவை நிறைவேற்றினால், அதனைத் தொடர்ந்து ஒரு ஆளுநர் மூன்று வகைகளில் மட்டுமே செயல்பட முடியும். 1.) மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பது. 2.) மசோதாவிற்கு  அனுமதி அளிப்பதை நிறுத்தி வைப்பது (withholding assent)  3.) குடியரசு தலைவரின் பார்வைக்கு மசோதாவை அனுப்பி வைப்பது.

 

இந்த இரண்டாவது வழியை பயன்படுத்தி தான் ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாக்களை நீண்டகாலமாக நிறுத்தி வைத்திருந்தார். ஆனால் உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்தின் 200ஆவது சரத்தின் அடுத்த வரியை சுட்டிக்காட்டி தீர்ப்பு வழங்கியுள்ளது. மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டதும் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக  (As soon as possible) அதன் மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று 200ஆவது சரத்தின் இரண்டாவது பாராவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


//Provided that the Governor may, as soon as possible after the presentation to him of the Bill for assent, return the Bill if it is not a Money Bill together with a message requesting that the House or Houses will reconsider the Bill or any specified provisions thereof and, in particular, will consider the desirability of introducing any such amendments as he may recommend in his message and, when a Bill is so returned, the . House or Houses shall reconsider the Bill accordingly, and if the Bill is passed again by the House or Houses with or without amendment and presented to the Governor for assent, the Governor shall not withhold assent therefrom://

 

அதாவது மசோதா  கிடைத்ததும், மசோதாவிற்கு அனுமதி அளிப்பதா, அல்லது திருத்தங்கள் செய்ய பரிந்துரை செய்து  சட்டமன்றத்திற்கு திரும்பி அனுப்புவதா என்பதை ஆளுநர் முடிந்தளவு விரைவில் தீர்மானிக்க வேண்டும்.

 

ஆளுநர் பரிந்துரைத்த திருத்தங்கள் சட்டமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் சட்டமன்றம் அந்த மசோதாவை திரும்ப நிறைவேற்றி அனுப்பினால் ஆளுநர் இப்போது கண்டிப்பாக ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும் என்பது தான் அரசியலமைப்பு சொல்கிறது. இப்படி சட்டமன்றத்தால் இரண்டாம் முறை நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை. இரண்டாம் முறை நிறைவேற்றப்பட்ட மசோதா முதல் மசோதாவிலிருந்து மாறுபட்டதாக இருந்தால் மட்டுமே ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்க முடியும்.

 

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் மேற்கூறிய வழிமுறைகளில் அல்லாமல் ஆளுநர் தனக்கு 'வீட்டோ' அதிகாரம் இருப்பது போல் தன்னிச்சையாக செயல்படக்கூடாது என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

 

மேலும் 200ஆவது சரத்து கூட்டாச்சியில் மிக முக்கியமான பாத்திரம் வகிப்பதால், அதன்படி ஆளுநர் செயல்படுவதற்கு காலக்கெடு விதிப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உச்ச நீதிமன்றம் அதற்கான வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது.

 

1.) ஒரு மசோதவின் அனுமதியை நிறுத்தி வைத்து, மாநில அமைச்சரவையின் ஆலோசனையுடன் குடியரசு தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் அது குறித்து ஒரு மாதத்திற்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்.

 

2.) மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு மாறாக மசோதாவிற்கான அனுமதியை நிறுத்தி வைப்பதாக இருந்தால், அந்த மசோதாக்களின் மீதான திருத்தங்களை பரிந்துரைத்து மூன்று மாதங்களுக்குள் சட்டமன்றத்திற்கு மசோதாவை திருப்பி அனுப்பவேண்டும்.

 

3.) மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு மாறாக மசோதாவை குடியரசு தலைவரின் பார்வைக்கு அனுப்புவதாக ஆளுநர் முடிவெடுத்தால், அதனை மூன்று மாதங்களுக்குள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

 

4.) சட்டமன்றம் இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பும் மசோதாவிற்கு ஆளுநர் ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

 

இந்த வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டாம் முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது அடிப்படையிலே தவறானது. அதனால் இந்த மசோதாக்கள் மீது குடியரசு தலைவர் என்ன நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். மேலும் அரசியலமைப்பு சட்டத்தின் 142ஆவது சரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக அறிவித்தது.

 

மேலும், 'அரசியல் நோக்கங்களுக்காக மாநில சட்டமன்றத்தை நெரிக்கவோ அல்லது சட்டமன்றத்திற்கு தடையாகவோ இருக்கக்கூடாது  என்பதில் ஆளுநர் விழிப்புடன் இருக்க வேண்டும்.  மக்களின் வெளிப்படையான விருப்பத்திற்கு அதாவது மாநில சட்டமன்றத்திற்கு முரணான எந்தவொரு செயல்பாடும் அரசியலமைப்பை மீறுவதாகும். ஏனெனில் ஜனநாயகத்தில்

மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சட்டமன்றத்திற்கு முரணான செயல்பாடுகள் மக்களின் விருப்பிற்கு முரணான செயல்பாடுகளாகும்' என்று உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

இறுதியாக 'அரசியலமைப்பு எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துபவர்கள் நல்லவர்களாக இல்லையென்றால் இது கெட்டதாகவே இருக்கும்’ என்ற டாக்டர். பி. ஆர்.அம்பேத்கரின் வாசகத்தை நீதிபதி பர்திவாலா மேற்கோள் காட்டி தீர்ப்பை முடித்தார்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை