YouTurn

Stage 4 metastatic cancer சிகிச்சை முறை - இந்திய கிரிக்கெட்டர் சித்து கூறுவது அறிவியல் பூர்வமான முறையான சிகிச்சை முறையா?

கிட்டத்தட்ட கடந்த ஒரு ஆண்டாக சித்துவின் மனைவி முறையான மருத்துவமனையில் நான்காம் நிலை புற்றுநோய்க்கான தகுந்த சிகிச்சையை எடுத்து வந்துள்ளார். ஆனால் சித்து அவர்கள் அவற்றினை குறிப்பிடாமல் போலி அறிவியல் கருத்துக்களை பதிவிட்டிருப்பது மிகவும் ஆபத்தானது.

Stage 4 metastatic cancer சிகிச்சை முறை - இந்திய கிரிக்கெட்டர் சித்து கூறுவது அறிவியல் பூர்வமான முறையான சிகிச்சை முறையா?

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து தனது மனைவி புற்று நோயில் இருந்து எப்படி மீண்டார் என சமீபத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பது மிகவும் அதிர்ச்சிகரமானது மற்றும் வேதனைக்குரியது!

 

https://x.com/i/web/status/1859982600708018658


சித்துவின் மனைவி புற்றுநோயின் 4வது நிலையில் இருந்ததாகவும். புற்றுநோய் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களே அவரைக் காப்பாற்றுவதற்கு 5% தான் வாய்ப்புள்ளது என தெரிவித்து விட்டனர் என்றும்; மஞ்சள், வேப்பிலை, எலுமிச்சை சாறு மற்றும் இடைப்பட்ட உண்ணாவிரதத்தால் நாற்பதே நாட்களில் புற்றுநோயை தன் மனைவி வென்றதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.


மேலும் படிக்க: எலுமிச்சை புற்றுநோயைக் குணப்படுத்துமா ?

 

https://x.com/i/web/status/1859827426068660522


இதில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தும் விஷயம் என்னவென்றால்: கிட்டத்தட்ட கடந்த ஒரு ஆண்டாக சித்துவின் மனைவி முறையான மருத்துவமனையில் நான்காம் நிலை புற்றுநோய்க்கான தகுந்த சிகிச்சையை எடுத்து வந்துள்ளார். நான்காம் நிலை புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளான chemotherapy, radiation therapy மற்றும் அறுவைசிகிச்சை என அனைத்து முறைகளும் பின்பற்றப்பட்டு நோயை வென்றிருக்கிறார். ஆனால் சித்து அவர்கள் அவற்றினை குறிப்பிடாமல் போலி அறிவியல் கருத்துக்களை பதிவிட்டிருப்பது மிகவும் ஆபத்தானது. இதனால் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டப் பலர் முறையான சிகிச்சையினை கைவிட்டு அறிவியல் ஆதாரமற்ற முறைகளை பின்பற்றி உயிருக்கே ஊறுவிளைவிக்கும் நிலைக்கு தள்ளப்படலாம்.

 

https://x.com/i/web/status/1860257935898869770


சித்து அவர்களின் பேச்சில் பொதுமக்கள் தெளிவுபெற வேண்டியது என்னவெனில்?

1. நான்காம் நிலை metastasis ஆன புற்றுநோய் என்றால் என்ன?

2. புற்றுநோய்க்கான முறையான சிகிச்சை முறை என்ன? மஞ்சள், எலுமிச்சை சாறு, வேப்பிலை புற்றுநோயை குணப்படுத்துமா?

3. விரதம் இருந்தால், மாவுச்சத்து (carbohydrate) இல்லாமல் கேன்சர் செல்கள் இறந்துவிடுமா?

 

1. நான்காம் நிலை metastasis ஆன புற்றுநோய் என்றால் என்ன?

புற்றுநோயின் தீவிரத்தை புற்றின் அளவு, புற்றுநோய் செல்கள் நிணநீர் முனைகளில் (lymph node) காணப்படுகின்றதா, உருவான உறுப்பில் இருந்து வேறு உறுப்புகளுக்கு பயணித்துள்ளதா போன்ற அளவீடுகளைக் கொண்டு (TNM staging) ஒன்று முதல் நான்கு நிலைகளாக அளக்கப்படும். இதில் நான்காம் நிலை என்பது அதிதீவிர புற்றுநோய். இந்த நிலையில் புற்றுநோயானது உருவான உறுப்பில் இருந்து பக்கத்தில் மற்றும் தொலைவில் உள்ள உறுப்புகளுக்கும் பரவியிருக்கும். இதனை metastatic cancer என்போம். என்ன வகையான புற்றுநோய் எனக்கூறாவிட்டாலும் தன் மனைவிக்கு நான்காம் நிலை metastatic cancer இருந்ததாக சித்து அவர்கள் தெரிவித்துள்ளார். பலஉறுப்புகளிலும் நான்காம் நிலையில் புற்றுநோயின் தாக்கம் இருப்பதாலும் புற்றுநோயின் தீவிரமும் மிக அதிகம் என்பதாலும் நான்காம் நிலை புற்றுநோயானது கொடுக்கப்படும் சிகிச்சைகளையும் தாண்டி நோயுற்றவரை மீட்பது மிகச்சவலான நிலை. எனினும் மருத்துவர்களின் இடையறாத முயற்சி, மருத்துவ அறிவியல் முன்னேற்றம் காரணமாக இன்று சித்துவின் மனைவி புற்றுநோயை வென்றுள்ளார்.

 

2. புற்றுநோய்க்கான முறையான சிகிச்சை முறை என்ன? மஞ்சள், எலுமிச்சை சாறு, வேப்பிலை புற்றுநோயை குணப்படுத்துமா?

முதலில் ஒரு உறுப்பில் உள்ள செல்கள் கட்டுப்பாடை இழந்து அசாதாரணமானபெருக்கத்திற்கு உட்படும் போது அந்த உறுப்பில் புற்றுநோய் மிக ஆரம்பநிலையில் உருவாகின்றது. இந்த நிலையில் ஒரு புற்றுநோய் உயிர்கொல்லியாக மாறுவதில்லை. இந்த நிலை (stage 0 of cancer) பெரும்பாலும் குணப்படுத்தக்கூடியது. ஆனால் இந்த நிலையைக் கடந்து அடுத்தடுத்த நிலைக்கு புற்றுநோய் வளர்ச்சியடையும் போது நோயின் தீவிரம் மிக அதிகமாகிக்கொண்டே போகும். இதனைக் கட்டுப்படுத்த மூன்றுவிதமான சிகிச்சை முறைகள் மருத்துவர்களால் கையாளப்படுகின்றன.

 

1. Surgery - புற்றுநோய்கட்டி குறிப்பிட்ட உறுப்பில் மட்டுமே இருக்கும் பட்சத்தில் அந்த கட்டியை அறுவைசிகிச்சையின் மூலம் நீக்குவது.

2. Chemotherapy - புற்றுநோய் stage 0விலிருந்து stage 4 வரைக்கும் எந்த நிலையில் இருந்தாலும் மருந்துகளின் மூலம் வேகமாய் வளர்ச்சியடையும் cancer செல்களை கொன்று அகற்றுவது.

3. Radiation therapy - புற்றுநோய் கட்டிகள் இருக்கும் உறுப்புகளில் கதிர்வீச்சினை பாய்ச்சி cancer செல்களை கொன்று அகற்றும் முறை.

 

சித்துவின் மனைவி எந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அவர் குறிப்பிடாவிட்டாலும் மேலே கூறிய மூன்று சிகிச்சை முறைகளும் பின்பற்றப்பட்டிருப்பதாக பல முறை சித்து X தளத்தில் பதிவு செய்துள்ளார்.

 


எனவே சித்து அணுகிய மருத்துவர்கள் அவர் மனைவியின் நான்காம் நிலை metastatic cancerற்கு தேவையான முறையான சிகிச்சையை அளித்துள்ளனர் என்பது தெரியவருகின்றது. இன்று அவர் புற்றுநோயில் இருந்து மீண்டிருப்பது பெருமகிழ்ச்சியையும் தருகின்றது.

 

இதில் சிக்கல் எங்கே வருகின்றது என்றால் சித்து அவர்கள் தன் மனைவியை புற்றுநோயில் இருந்து காப்பாற்றிய  சிகிச்சை முறைகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமல் தானே ஆராய்ந்து பின்பற்றியதாக மஞ்சள், வேப்பிலை, ஆப்பிள் வினிகர் ஆகியவற்றை உட்கொண்டு தான் தன் மனைவி புற்றுநோயில் இருந்து மீண்டார் எனகூறியிருக்கிறார். மஞ்சள், வேப்பிலை எலுமிச்சை சாறு முதலான சித்து கூறிய எந்தப் பொருளுக்கும் புற்றுநோயை குணப்படுத்தும் திறன் அறிவியல்பூர்வமாக இல்லை. இதில் vitamin C இருக்கின்றதே, antioxidants இருக்கின்றதே எனக்கூறலாம். ஆனால் புற்றுநோய்க்கான மருந்துகள் புற்றுநோய் செல்களின் மரபணுக்கள், செல் சுவரின் புரதங்கள் போன்றவற்றை இலக்காக்கி தாக்கி புற்றுநோய் செல்களை கொல்லும். அது போன்ற மரபணுக்கள் மற்றும் செல் சுவர் புரதங்களை வலிமையாக தாக்கும் வேதிப்பொருட்கள்

மஞ்சள், வேப்பிலை போன்ற பொருட்களில் இல்லை. எனவே சித்து குறிப்பிட்ட எலுமிச்சை சாறு, பீட்ரூட் சாறு முதலானவற்றை உடல் ஆரோக்கியத்திற்கான உணவுகளாக எடுத்துக்கொள்ளலாம் தவிர அவையெல்லாம் புற்றுநோய்க்கான மருந்துகள் அல்ல. மேலும் ஒரு கொடிய நோயை எதிர்கொள்ளும்போது உணவு வேறு மருந்து வேறு எனப்பகுத்தறிவது சிறப்பான சிகிச்சை க்கும் மற்றும் நோயில் இருந்து மீள்வதற்கும் மிக அத்தியாவசியமானது.

 

3. விரதம் இருந்தால், மாவுச்சத்து (carbohydrate) இல்லாமல் கேன்சர் செல்கள் இறந்துவிடுமா?

சித்துவின் இந்தக்கூற்றினை அறிவியல் முக்கியத்துவம் அற்ற கருத்து என்று மட்டும் கூறி புறந்தள்ளுவதா? இல்லை இதற்கு பின்னால் இருக்கும் அறிவியலை எடுத்துரைப்பதா என்பது பெருங்குழப்பம். ஏனெனில் புற்றுநோய் செல்கள் என்பது நம் உடலுக்குலேயே பரிணமிக்கும் புது உயிருக்கு இணையானது. புற்றுநோய்க்காட்டியின் செல்கள் அனைத்தும் தங்களுடைய பிறப்பு, வளர்ச்சி, பெருக்கம், மரணம் போன்ற நிகழ்வுகளுக்கான நம் உடல் ஏற்படுத்தியிருக்கும் கட்டுப்பாடுகள் அனைத்தையும் மெல்ல மெல்ல உடைக்கும். மெதுவாக மரணமற்ற, ஓயாது பெருகிக்கொண்டிருக்கும் நிலையை அடையும். பின் தனக்கான ரத்தநாளங்களை தானே உருவாக்கி தனக்கு தேவையான உணவைப் பெற்று மேலும் வளரும். எந்திரன் பட இறுதிக்காட்சியில் சிட்டி ரோபோக்கள் அணிவகுப்பது போல வீரியத்துடன் செயல்படும். இவ்வளவு வீரியமான புற்றுநோய் செல்களை நீக்குவதற்கு  அச்செல்களின் மரபணுக்களை மீட்கமுடியாத அளவிற்கு சேதமாக்கி அதன் மூலம் இந்த செல்களை மரணத்திற்கு எடுத்துச் செல்வதே மிக திறனான வழி. இதனையே பெரும்பாலான chemotherapy மருந்துகளும் radiation therapy முறையும் பின்பற்றுகின்றன.

ஆனால் ஏதோ மிகச்சுலபமாக விரதம் இருந்தால் carbohydrate கிடைக்காமல் புற்றுநோய் செல்கள் மரணித்துவிடும் என்பது எரியும் வீட்டின் நெருப்பினை வாயால் ஊதி அனைத்துவிடலாம் என்பது போன்றது.


எனவே  நாமோ நம்மைச் சார்ந்தோர்களோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பின் இவ்வகையான அறிவியல் அடிப்படை மற்றும் தார்மிக பொறுப்பற்ற சித்து போன்றோர் கூறும் பொய்ச்செய்திகளை பின்பற்றாமல் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றுவதே நல்லது.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை