ஆர்.என்.ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு... தமிழ்நாட்டுக்காக செய்தது என்ன?
தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து மக்கள் விரோத கருத்துக்களையும் பொய் செய்திகளையும் பேசி வரும் நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் அவர் என்ன செய்தார் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக பல கருத்துகளை அவர் பேசியது மட்டுமின்றி பொய்ச் செய்திகளையும் பல நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார். அத்தகைய சர்ச்சை கருத்துகளையும் பொய்களையும் இக்கட்டுரையில் காண்போம்.
இந்தியக் காவல் பணியில் (IPS) இருந்த ஆர்.என்.ரவி 2012ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற பிறகு ஒன்றிய அரசின் பல நியமன பதவிகள் அவருக்கு வழங்கப்பட்டு வந்தது. இதன்தொடர்ச்சியாக 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். பிறகு 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டார். ஆளுநராக நியமிக்கப்பட்ட நாள் முதல் தான் போகும் இடமெல்லாம் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் பேசி வருகிறார்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதா:
ஆன்லைன் ரம்மியால் பலர் கடன் தொல்லைகளுக்குள்ளாகி தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வந்தன. எனவே அந்த விளையாட்டுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களாலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆனால், அதற்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டார் ஆளுநர்.
மேலும் ஆளுநர் கிடப்பில் வைத்திருக்கும் மசோதா நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுவிட்டால் மட்டும் சட்டமாகாது என்றும் வேறு சில நிகழ்ச்சியில் பேசியிருந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நிறைவேற்றிய ஒரு மசோதாவுக்கு நியமன பொறுப்பில் உள்ள ஆளுநர் கையெழுத்திடமுடியாது என ஜனநாயகத்துக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறார்.
நீட் தேர்வு விலக்கு:
ஒன்றிய அரசால் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. இத்தேர்வினால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என இதனை ரத்து செய்யும் நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில், ’நீட் விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள்?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதலளிக்க நான் கையெழுத்திட மாட்டேன்’ என ஆணவமாக பதிலளித்தார்.
மேலும் நீட் தேர்வினால்தான் அரசு பள்ளி மாணவர்கள் அதிகமானோர் மருத்துவம் படிப்பதாக வேறுறொரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார். ஆளுநர் சொன்ன இதே பொய்யை பாஜகவினரும் சமூக வலைத்தளத்தில் பேசுவதுண்டு. அரசு பள்ளியில் பயின்று மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க 7.5 சதவீத இட ஒதுக்கீடே காரணம்.
தமிழ்நாடு VS தமிழகம்:
திமுக முதன்முதலில் 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் முதலமைச்சராக இருந்தபோது செய்யப்பட்ட பல முக்கிய மாற்றங்களில் ஒன்று மெட்ராஸ் மாகாணம் என்றிருந்த பெயரை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்தது.
ஆனால், தமிழ்நாடு என்ற பெயருக்கு பதில் தமிழகம் என்பதே சரியாக இருக்கும் என்றும் ஆங்கிலேயர் காலத்தில்தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன என்பதால் பாரதத்தின் பகுதி தமிழகம் என்பதுதான் சரி என ஆளுநர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு:
தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் கம்பெனி மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது என மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியில் நடந்த இப்போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த போராட்டம் பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு காரணமான அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற்றதாக கூறினார். எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி மக்கள் போராட்டத்தை போகிற போக்கில் இப்படி கொச்சையாக பேசியவர்தான் ஆர்.என்.ரவி.
திருக்குறளும் திருவள்ளுவரும்:
திருக்குறள் தமிழர்களால் மட்டுமின்றி உலகிலுள்ள பல்வேறு நாட்டு மக்களாலும் அற நூலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்பக்காலத்தில் திருவள்ளுவருக்கு குறிப்பிட்ட மத, ஜாதிய அடையாளங்கள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், அவர் அனைவருக்குமானவர் என்பதை உணர்த்தும் வகையில் அவர் தோற்றத்தில் சில மாறுதல்கள் செய்யப்பட்டது. அப்படி பொதுப்படையான வள்ளுவர் படத்தினைத்தான் இன்றுவரை தமிழ்நாடு அரசும் மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், வலதுசாரிகள் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து நெற்றியில் பட்டையிட்டு அவரை இந்து மதத்திற்கு உரியவர் என பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்கு எதிரான கருத்துகளும் தமிழ் சூழலில் முன்வைக்கப்படுகிறது. வலதுசாரிகளின் இந்த பிரிவினை எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆளுநரும் காவி உடையுடன் இருக்கக்கூடிய வள்ளுவர் படங்களை வெளியிட்டு தொடர்ந்து சர்ச்சைகளை உண்டாக்குகிறார்.
அதுமட்டுமின்றி ஜி.யு.போப் திருக்குறளை மொழிபெயர்த்தபோது பக்தி தொடர்பான விஷயங்களை நீக்கிவிட்டார் என்றும் ‘திருக்குறளும் ரிக் வேதமும் ஒன்று என்றும் தொடர்ந்து திருவள்ளுவருக்கு மத சாயம் பூசும் வலதுசாரிகளுக்கு ஆதரவாக ஆளுநரும் செயல்பட்டு வருகிறார்.
புதிய கல்விக் கொள்கை:
ஒன்றிய அரசு இந்தியா முழுவதும் புதிய (தேசிய) கல்விக் கொள்கையை கொண்டு வர முயற்சிக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை, 5, 8, 10, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என பல முரண்பட்ட விஷயங்கள் புதிய கல்வி கொள்கையில் இடம் பெற்றுள்ளது. அத்தகைய பாடத்திட்டத்துக்கு ஆளுநர் தொடர்ந்து ஆதரவான கருத்துக்களை கூறி வருகிறார்.
சட்டமன்றத்தில் ஆளுநர் உரை:
ஆண்டுதோறும் சட்டமன்ற முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவதுதான் மரபு. அப்படி 2023, ஜனவரி மாதம் ஆளுநரின் உரை தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்டு, ஆளுநரிடமும் ஒப்புதலும் பெறப்பட்டது. பின்னர் சட்டமன்றத்தில் இந்த உரையை வாசிக்க வேண்டிய ஆளுநர் உரையை வாசிக்காமலேயே வெளிநடப்பு செய்தார்.
இவையெல்லாம் தமிழ்நாடு மக்களுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் முடிவுகளுக்கும் எதிராக ஆளுநர் நடந்துகொண்ட சம்பவங்கள். இவற்றை தவிர்த்து தமிழ்நாடு குறித்து ஊடகங்களுக்கு நேர்காணல் அளிக்கும்போது பொய்யான தகவல்களை தொடர்ந்து பேசியுள்ளார். அப்படி அவர் பேசிய பொய் செய்திகளின் தொகுப்பினை நமது யூடர்ன் தளத்தில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம்.
மேலும் படிக்க: "ஆளுநர் ஆர்.என்.ரவியின் பொய்கள்" வீடியோவின் ஆதாரத் தொகுப்பு!
பாஜக தங்கள் கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு மாநில அரசுகளுக்கு இடையூறு அளித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது. தமிழ்நாடு ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவியும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் பேசி வருகிறார். இப்படி பொய்யையும் அவதூறையும் தொடர்ந்து பேசி வரும் ஆளுநரை பார்க்கும்போதெல்லாம் அண்ணா சொன்ன ‘ஆட்டுக்குத் தாடியைப் போல, நாட்டுக்குக் கவர்னர்’ என்கிற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.