YouTurn

2024 Factcheck ஓர் பார்வை: அரசியல் கட்சியினர் மற்றும் ஊடகங்கள் சொன்ன பொய்களின் தொகுப்பு!

2024ம் ஆண்டு அரசியல் கட்சிகள், தனி நபர்கள், ஊடகங்கள் என அனைவரும் பரப்பிய பொய்களின் தொகுப்பு!

2024 Factcheck ஓர் பார்வை: அரசியல் கட்சியினர் மற்றும் ஊடகங்கள் சொன்ன பொய்களின் தொகுப்பு!

மதம், அரசியல், வரலாறு, உடல் நலம் என அனைத்து வகையிலும் 2024ம் ஆண்டு பல்வேறு போலி செய்திகள் பரப்பப்பட்டது. அரசியல் கட்சியினர் கடந்து ஊடகங்களுக்கும் இப்பொய்களில் கணிசமான பங்கு உள்ளது. அதன்படி இவ்வாண்டு யூடர்ன் கண்டறிந்த முக்கிய போலி செய்திகளை இங்கு பட்டியலிட்டுள்ளோம். 


அரசியல்:  


  1. அண்ணாவிற்கு மூக்கையா தேவர் பதவிப் பிரமாணம்! 

திமுக முதன் முதலில் ஆட்சி அமைத்தபோது முதல்வராக பதவி ஏற்ற பேரறிஞர் அண்ணாவிற்கு மூக்கையா தேவர் தான் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த காளியம்மாள் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருந்தார்.



இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு அதன் ஆளுநர் தான் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அதன்படி, அண்ணா பதவி ஏற்றபோது தமிழ்நாட்டின் (மெட்ராஸ் ஸ்டேட்) ஆளுநராகயிருந்த சர்தார் உஜ்ஜல் சிங் தான் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார் (1967 மார்ச் 6).


முழுமையாக படிக்க: அண்ணாவிற்கு மூக்கையா தேவர் பதவிப் பிரமாணம் செய்ததாக சீமான், காளியம்மாள் சொல்லும் பொய்!


  1. மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்கு யார் காரணம்?


மதுரையில் எய்ம்ஸ் மாருத்துவமனை கட்டப்படுமென 2015-ல் அறிவிக்கப்பட்டு, 2019ம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இந்நாள்வரை மருத்துவமனை கட்டி முடிக்கப்படவில்லை என எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. தமிழ்நாடு அரசுதான் இத்தாமதத்திற்கு காரணம், மாநில அரசு  சுற்றுச்சூழல் அனுமதியை தற்போதுதான் வழங்கப்பட்டுள்ளது என பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் பரப்பினர்.



இவ்வாண்டு மே மாதம்  2ம் தேதி மருத்துவமனை கட்டுமான திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை எய்ம்ஸ் நிர்வாகம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்தது. மே, 10ம் தேதி சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாமென திப்பீட்டுக் குழு தமிழ்நாடு அரசிடம் பரிந்துரைத்தது. மே, 20ம் தேதி தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதியளித்துள்ளது. ஆய்வறிக்கை வழங்கப்பட்டு 20 நாட்களுக்குள்ளாகவே தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், தாமதத்திற்கு தமிழ்நாடு அரசு மீது பொய் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்.


முழுமையாக படிக்க: மதுரை எய்ம்ஸ் தாமதத்திற்குத் தமிழ்நாடு அரசு காரணமென பாஜகவினர் பரப்பும் பொய்! 


  1. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:


அதிமுக ஆட்சிக் காலத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணி தொடங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் வடிவம் உதய சூரியன் வடிவில் மாற்றப்பட்டுவிட்டது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசி இருந்தார். 



அதிமுக ஆட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்ட போது வெளியிடப்பட்ட கட்ட மாதிரியில் உள்ள வடிவத்தில் தான் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. Google earth உதவியுடன் 2019, 2020 மற்றும் 2021 காலகட்டத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக் கோள் புகைப்படங்களை ஆய்வு செய்ததிலும் இதனை உறுதி செய்ய முடிகிறது.  


முழுமையாக படிக்க: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் வ.உ.சி. சிலை குறித்து சீமான் சொன்ன பொய்கள்!


  1. ’ஆவாஸ் யோஜனா’ திட்டம் ’கலைஞரின் கனவு இல்லம்’ என மாற்றப்பட்டதா?


பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி வானதி சீனிவாசன் 2024-25 நிதியறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பெயரை ‘கலைஞர் கனவு இல்லம்’ என மற்றி பட்ஜெட்டில் அறிவித்துள்ளதாக கூறினார். 

ஒன்றிய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் (60:40) ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தரப்படும் ’இந்திரா ஆவாஸ் யோஜனா’ என்ற திட்டத்தை 1985-ல் ராஜீவ் காந்தி தொடங்கினார். இத்திட்டத்தை 2015-ல் ’பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா(PMAY)’ என மோடி அரசு பெயர் மாற்றியது. 


இத்திட்டத்தில் ஒரு வீட்டிற்கு ஒன்றிய அரசு நிர்ணயித்த தொகை ரூ.1.20 இலட்சம். இதில், ஒன்றிய அரசு ரூ.72,000; மாநில அரசு ரூ.48,000 வழங்குகிறது. கூடுதலாக கான்கிரீட் மேற்கூரை அமைக்க 50,000 ரூபாயும்; 2,57,925 வீடுகளின் கட்டுமான பணிக்காக தலா 70,000 ரூபாயும் மாநில அரசு வழங்கியுள்ளது. இத்திட்டமின்றி ’கலைஞர் கனவு இல்லை’ புதிய திட்டம் மூலம் 2030ம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதிகளில் எட்டு இலட்சம் கான்கிரீட் வீடுகள் என்ற இலக்கின் முதற்கட்டமாக நடப்பு நிதியாண்டில் ஒரு இலட்சம் வீடுகள் தலா 3.50 இலட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதை வானதி சீனிவாசன் திரித்து பேசியுள்ளார்.


முழுமையாக படிக்க: ஒன்றிய அரசின் திட்டத்தை தமிழ்நாடு அரசு பெயரை மாற்றி பட்ஜெட்டில் அறிவித்ததாக வானதி ஸ்ரீனிவாசன் சொன்ன பொய்! 


  1. தமிழ்நாட்டில் தமிழ் படிக்க பள்ளிக்கூடங்கள் இல்லை - சீமான்.


சீமான் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், ”என் மகன்கள் இருவரும் ஆங்கில வழியில் தான் படிக்கின்றனர். நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ் படிக்க இங்கே பள்ளிக்கூடங்கள் இல்லை” எனக் கூறியிருந்தார்.



அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை 2022-ம் ஆண்டு தரவுகளின் படி, 24,310 தொடக்கப் பள்ளிகள், 7,024 நடுநிலைப்பள்ளிகள், 3,135 உயா்நிலைப் பள்ளிகள், 3,110 மேல்நிலைப் பள்ளிகள் என தமிழ்நாட்டில் மொத்தம் 37,579 அரசு பள்ளிகள் இருக்கின்றன. மேலும், 8,328 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் உள்ளன. இவற்றில் தமிழ் ஒரு கட்டாயப்பாடமாக கற்பிக்கப்படுகிறது. 


முழுமையாக படிக்க: 37,554 அரசு பள்ளிகள் உள்ள தமிழ்நாட்டில் தமிழ் படிக்க பள்ளிக்கூடங்கள் இல்லை எனப் பொய் சொல்லும் சீமான்!


  1. விஞ்ஞான ஊழல் உருட்டு!


சர்க்காரியா கமிஷனிடம் கலைஞர் கூறியதாக ஒரு கூற்று நீண்ட காலமாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதுண்டு. ”சர்க்கரையை எறும்பு தின்றுவிட்டது; அந்த சாக்கு பையை கறையான் தின்றுவிட்டது” என்பதுதான் அது.



ஆனால், சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் கலைஞர் அப்படி சொன்னதாக எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை. மேலும் விஞ்ஞான ஊழல் என்ற வார்த்தையும் எங்கும் இல்லை. ஆணையம் (கமிஷன்) என்பது பல தரப்பினரிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கையை மட்டுமே தாக்கல் செய்யும் அமைப்பாகும். அது நீதி வழங்கும் அமைப்பு கிடையாது. குறிப்பாக சர்க்காரியா கமிஷன் அறிக்கையை கொண்டு எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.


முழுமையாக படிக்க: சர்க்கரையை எறும்பு தின்றுவிட்டதாக சர்க்காரியா கமிஷனிடம் கலைஞர் சொன்னதாகப் பரவும் பொய்!


  1. காங்கிரஸ் அடமானம் வைத்த தங்கத்தை மோடி மீட்டாரா?


காங்கிரஸ் கட்சி 1991ம் ஆண்டு ஆட்சியில் இருக்கும் போது இந்திய நாட்டின் 100 டன் தங்கத்தை இங்கிலாந்து அரசிடம் அடகு வைத்ததாகவும் அதனை பிரதமர் மோடி தற்போது மீட்டுள்ளதாகவும் ஒரு தகவல் பரப்பப்பட்டது. 


1990-91 கால கட்டத்தில் அந்நிய செலாவணி நெருக்கடியின்போது இந்தியா தன்னிடம் இருந்த தங்கத்தை பேங்க ஆஃப் இங்கிலாந்திடம் அடமானம் வைத்து 405 மில்லியன் டாலரை கடனாகப் பெற்றது. பிறகு அவ்வாண்டு நவம்பர் மாதமே அடமானத்தை இந்திய அரசு மீட்டுவிட்டது. அடமானம் மீட்கப்பட்டாலும் போக்குவரத்து, வணிக லாபம் போன்ற காரணங்களுக்காக இவ்வளவு நாள்கள் அங்கேயே தங்கத்தை வைத்திருந்தது. தற்போது சர்வதேச நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சனைகளால் இந்தியா தனக்குச் சொந்தமான தங்கத்தை மீண்டும் இந்தியாவிற்கே கொண்டு வந்துள்ளது. 


முழுமையாக படிக்க: காங்கிரஸ் கட்சி இங்கிலாந்திடம் அடமானம் வைத்த 100 டன் தங்கத்தை மோடி அரசு மீட்டதாகப் பரவும் தவறான தகவல்!


  1. கூவம் ஆற்றை தனியார் ஆக்கிரமிக்க தமிழ்நாடு அரசு துணைபோனதா?


சென்னை, எழும்பூர் அருகே உள்ள கிரீம்ஸ் ரோடு கூவம் ஆற்றை CASAGRAND என்ற கட்டுமான நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து, கட்டுமான கழிவுகளை நிரப்பி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டப்போவதாக சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பரப்பப்பட்டது. 

#பார்த்ததில்_பிடித்து_பகிர்ந்தது pic.twitter.com/wMHlGMxKYZ

— சுரேஷ் காங்கேயன் (@SureshKangayan) July 19, 2024

கடந்த திமுக ஆட்சியில் (2010) ரூ.1,815 கோடி செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பாலம் கட்ட திட்டமிடப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டன. ஆனால், 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தையடுத்து, கூவம் ஆற்றின் வழித்தடத்தை மாற்றும் வகையில் இத்திட்டம் இருப்பதாகக் கூறி கைவிடப்பட்டது. தற்போது இதன் வழித்தடத்தை மாற்றி ஈரடுக்கு பாலமாக சுமார் ரூ.5,800 கோடி செலவில் கட்ட திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. எனவே முன்னதாக கட்டப்பட்ட 17 தூண்களை அகற்றும் பணிகள் நடைபெறுவதை தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு என பொய் செய்தி பரப்புகின்றனர்.


முழுமையாக படிக்க: கூவம் ஆற்றை தனியார் நிறுவனம் ஆக்கிரமிக்க துணைபோகிறதா தமிழ்நாடு அரசு? உண்மை என்ன?


  1. இரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்னை வந்தாரா கலைஞர்? 


தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் முதன்முதலில் சென்னைக்கு வரும்போது ரயிலில் டிக்கெட் எடுக்காமல் without-ல் வந்ததாக நீண்டகாலமாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுவதுண்டு. இதே விஷயத்தை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வெற்றியாளர் பாலாஜி முருகதாசும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு ஆதாரமாக கண்ணதாசன் எழுதிய வனவாசம் புத்தகத்தை பதிவிட்டுருந்தார். 



கண்ணதாசன் தனது சுயசரிதையையே ‘வனவாசம்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதி இருந்தார். அப்புத்தகத்தின் என்னுரையில், “ ’நான்’ என்று எழுதுவதற்குத் தகுதி போதாது என்ற தன்னடக்கத்துடனேயே ’அவன்’ என்று என்னைக் குறிப்பிட்டேன்” என்று கூறியுள்ளார். அதாவது தன்னைத்தானே மூன்றாம் நபரை குறிப்பிடுவதுபோல் ‘அவன்’ என எழுதியுள்ளார். எனவே, ரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்னை வந்தது கண்ணதாசன் தான் என்பதை அறிய முடிகிறது. 


முழுமையாக படிக்க: இரயிலில் டிக்கெட் எடுக்காமல் சென்னை வந்தாரா கலைஞர்? உண்மை என்ன?


  1. இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுமென ராகுல் கூறினாரா?


சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி அங்கு ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ’நாங்கள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது பற்றி ஆலோசிப்போம்’ எனக் கூறியதாக வீடியோ ஒன்று  ‘தமிழ்நாடு பாஜக-வின்’ எக்ஸ் பக்கத்தில் பரப்பப்பட்டது. 


rahul gandhi reservation news


இந்தியாவில் அனைத்து ஜாதியினருக்கும் சரியான பிரதிநிதித்துவம் இல்லை. அப்படி வரும் காலத்தில் இட ஒதுக்கீடு ரத்து செய்வது பற்றி காங்கிரஸ் பரிசீலிக்கும் என்று ராகுல் பேசியதை எடிட் செய்து தவறான தகவலை பரப்பியுள்ளனர்.


முழுமையாக படிக்க: இட ஒதுக்கீடு ரத்து செய்ய ஆலோசிக்கப்படும் என ராகுல் காந்தி அமெரிக்காவில் பேசியதாக பாஜக பரப்பும் பொய்!


  1. சீமான் - ரஜினி சந்திப்பு: 


சீமான் -  ரஜினி சந்தித்தது தொடர்பாக சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டன. அப்படத்தில் சீமானுடன் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியும் உள்ளார். அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் அவருடன் சீமான் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த புகைப்படம் போலியானது என நாம் தமிழர் கட்சியினர் பதில் அளித்து வந்தனர்.



இப்புகைப்படம் குறித்து ரவீந்திரன் துரைசாமியைத் தொடர்பு கொண்டு பேசியபோது, ”சீமான் - ரஜினி மற்றும் நான் இருக்கக்கூடிய புகைப்படம் உண்மையானதுதான். இந்த படத்தைப் போலி எனச் சொல்லிப் பொய் செய்தியைப் பரப்புகின்றனர்” என விளக்கம் அளித்தார். மேலும் அப்போது எடுக்கப்பட்ட வேறுசில படங்களையும் யூடர்னுடன் பகிர்ந்தார்.


முழுமையாக படிக்க: சீமான் - ரஜினி சந்திப்பு புகைப்படத்தில் ரவீந்திரன் துரைசாமி இருப்பது எடிட் செய்யப்பட்டதா? உண்மை என்ன?


  1. டாக்டர்.அம்பேத்கர், வ.உ.சி சிலைகள்:


சீமான் இரண்டு வெவ்வேறு செய்தியாளர் சந்திப்பில், அம்பேத்கருக்கு முதன் முதலில் தமிழ்நாட்டில் தான் சிலை வைக்கப்பட்டது என்றும் வ.உ.சி-க்கு தலைநகரில் (சென்னை) சிலை உள்ளதா?” என்றும் பேசியிருந்தார். 



டாக்டர்.அம்பேத்கருக்கு முதன் முதலில் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பிந்து சௌக் என்னும் இடத்தில் 1950, டிசம்பர் 9-ம் தேதி சிலை நிறுவப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, ராஜாஜி சாலையில் அமைந்துள்ள சுங்க வரி அலுவலகத்திற்கு எதிரில் வ.உ.சி. சிலை உள்ளது. இச்சிலை திமுக-வின் முதல் ஆட்சிக் காலமான 1968-ம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது.  


முழுமையாக படிக்க: டாக்டர்.அம்பேத்கர், முத்துராமலிங்கம் சிலைகள் குறித்து தவறான தகவல் சொன்ன சீமான்!


  1. காந்தி கணக்கு: 


வ.உ.சிதம்பரத்திற்கு உதவி செய்ய தென் ஆப்பிரிக்க தமிழர்கள்  ரூபாய் 5,000 வரை நிதி திரட்டி, அதனை காந்தியிடம் கொடுத்தனுப்பியதாகவும் அதனை காந்தி கடைசிவரை வ.உ.சி.-யிடம் ஒப்படைக்காததினால் தான் ‘காந்தி கணக்கு’ என்ற பதம் தோன்றியது என சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது. 


image.png


உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் போது சில வியாபாரிகளால் இதில் நேரடியாக கலந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. அவர்கள் ஏதேனும் ஒரு வகையில் ஆதரவு அளிக்க எண்ணி, ’போராட்டத்தில் கலந்துகொள்பவர்கள் தங்களது கடைகளில் உணவு சாப்பிடலாம், ஆனால், பணம் தரத்தேவையில்லை’ என்று வியாபாரிகள் தெரிவித்தனர். போராட்டக்காரர்களை அடையாளம் தெரியாமல் வியாபாரிகள் பணம் கேட்கும் பட்சத்தில், அவர்கள் ‘காந்தி கணக்கு’ என்று சொல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இப்படியே அந்த வார்தை பதம் தோன்றியுள்ளது. வ.உ.சி.-யின் பணம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.


முழுமையாக படிக்க: ‘காந்தி கணக்கு’ என்ற சொல்லாடலின் உண்மையான பொருள் என்ன?


  1. குகேஷிற்கு கோடியில் பரிசு, மாரியப்பனுக்கு வெறும் வாழ்த்தா?


செஸ் போட்டியில் உலக சாம்பியன் பட்டம் வென்ற குகேஷிற்கு தமிழ்நாடு அரசு ரூ.5 கோடி பரிசாக அறிவித்துள்ளது. ஆனால், தடகள் வீரர் மாரியப்பனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து மட்டும் தெரிவித்ததாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது. 



மாரியப்பன் தங்கவேலு, 2016ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற போது, ரூ.2 கோடி பரிசு அறிவித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. 2020ல் டோக்கியோ பாரா ஒலிம்பிக் வென்றதையடுத்து 2021 அக்டோபரில் ரூ.2 கோடி பரிசை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் குரூப்-1 பிரிவில் அரசு வேலையும் வழங்கப்பட்டுள்ளது. 


முழுமையாக படிக்க: தடகள வீரர் மாரியப்பனுக்கு வெறும் வாழ்த்து மட்டுமே சொன்னதா தமிழ்நாடு அரசு?


  1. தெலுங்கு பேசுபவர்களுக்கு ஆதித்தமிழர் ஜாதி சான்றிதழா? 


நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உமாயூன் கபீர், “மாணவர்களின் ஜாதி சான்றிதழில் ’ஆதி தமிழர்’ என்று வரவேண்டிய இடத்தில் ’ஆதி திராவிடர்’ என்று வரும். ஆனால், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் ஜாதிச் சான்றிதழில் ’ஆதி தமிழர்’ என்று வரும்” எனக் கூறினார். 


#கருமாந்திரத்தை ஒழிக்கவாது நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் pic.twitter.com/xG0TD21n38

— மு. சிவக்குமார் நாதக (@SivaKum56664767) July 9, 2024


பட்டியல் ஜாதிகள் என 76 ஜாதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. ’ஆதி ஆந்திரர்’, ‘ஆதி திராவிடர்’, ’ஆதி கர்நாடகா’ என்று தான் உள்ளன. ஆதி தமிழர் என்கிற பெயரே இல்லை. 


முழுமையாக படிக்க: தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுக்கு ’ஆதித்தமிழர்’ ஜாதி சான்றிதழ் வழங்கப்படுவதாக உமாயூன் பேசிய தவறான தகவல்!


ஊடகம்


  1. MPLADS:


மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினரான தயாநிதி மாறன், தனது தொகுதிக்கான MPLADS நிதியை பயன்படுத்தவில்லையென ’தி இந்து’ வெளியிட்ட செய்தி பகிரப்பட்டது. 


Image


MPLADS நிதி குறித்து அரசின் தளங்களில் ஆய்வு செய்ததில், வெவ்வேறு தளத்தி மாறுபட்ட தகவல்கள் இருப்பதை அறிய முடிந்தது. ஒன்றில் செலவு செய்ததாகவும், மற்றொன்றில் செலவு செய்யவில்லை என்றும் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் இருந்தன. இதுபற்றி யூடர்ன் சுட்டிகாட்டிய பிறகு ’தி இந்து’ இச்செய்தியை நீக்கியது. 


முழுமையாக படிக்க: எம்பி தயாநிதி மாறன் MPLADS நிதியை பயன்படுத்தவில்லை எனத் தவறான செய்தி.‌. தவறை ஒப்புக் கொண்ட இந்து நாளிதழ் !


  1. ராமர் கோவில் - கனிமொழி:


திமுக எம்பி கனிமொழி மற்றும் அவரது குடும்பத்தினர் அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ எடையுள்ள மணியை வழங்கியுள்ளனர் என்று கூறி ஜீ நியூஸ் ஹிந்தி செய்தி வெளியிட்டுள்ளது.


இது தமிழ்நாட்டைச் சேர்ந்த SPE Realty Private Limited குழுமத்தின் இயக்குநர்கள் சரவணன் புகழேந்தி மற்றும் லோகேஷ் புகழேந்தி பெயரில் ராமர் கோவிலுக்கு அனுப்பப்பட்டதாகும். இதில் கனிமொழி என இருப்பது திமுக எம்.பி. கனிமொழி கிடையாது. 


முழுமையாக படிக்க: எம்பி கனிமொழி அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ மணியை அனுப்பியதாக ஜீ நியூஸ் வெளியிட்ட பொய் செய்தி! 


  1. சால்வையை தூக்கி வீசிய சிவக்குமார்: 


நிகழ்ச்சி ஒன்றில் சிவகுமாருக்கு வயதான ரசிகர் ஒருவர் சால்வை கொண்டு வந்து கொடுத்ததாகவும், ஆனால், சிவகுமார் சால்வையை பார்த்து கடுப்பாகி அதனை தூக்கி எறிந்துவிட்டார் என்றும் கூறி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



சிவகுமாருக்கு சால்வை அணிவிக்க வந்தவர் அவருடைய நெருங்கிய நண்பர் கரீம். நண்பர்களுக்கு மத்தியில் இப்படி மரியாதை எல்லாம் எதற்கு என உரிமையுடன் பேசியுள்ளார். பிறகு இருவரும் அங்கிருந்து சிரித்து பேசியபடி சென்றுள்ளனர். கரீம் - சிவக்குமார் இடையிலான நட்பு பற்றி இதற்கு முன்னரே ஊடகங்களில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், நண்பர்களுக்குள் நடந்த ஒரு நிகழ்வை ஊடகங்கள் தவறாக செய்தியாக்கியுள்ளன.


முழுமையாக படிக்க: நடிகர் சிவக்குமார் ரசிகர் அணிவித்த சால்வையை வீசியதாக தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள் ! 


  1. ஒரு வேப்பங்கன்று ரூ.2000-மா?


தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் 10 ஆயிரம் வேப்பங்கன்றுகளை வளர்க்க ரூ.2 கோடி அறிவித்துள்ளதாக ‘பிபிசி தமிழ்’ கட்டுரை மற்றும் நியூஸ் கார்டில் குறிப்பிட்டிருந்தது. 



ஆனால், அது தவறான தகவலாகும். வேளாண் பட்ஜெட்டில், வேளாண்காடுகள் திட்டத்தில் 10 இலட்சம் வேப்ப மரக்கன்றுகளுக்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்க்கையில் ஒரு மரக்கன்று ரூ.20 மட்டுமே. பிபிசி தவறான தகவலை செய்தியாக வெளியிட்டுள்ளது.


முழுமையாக படிக்க: '10 ஆயிரம் வேப்பங்கன்றுகளை வளர்க்க ரூ.2 கோடி' எனத் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் பற்றி தவறானச் செய்தி வெளியிட்ட பிபிசி!


  1. முதல் முறையாக 13 மொழிகளில் தேர்வு:


ஒன்றிய அரசு நடத்துகின்ற மத்திய ஆயுதப்படை காவலர் பணிக்கான தேர்வு முதல் முதலில் இந்தி - ஆங்கிலம் மட்டுமின்றி 13 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படவுள்ளதாக அமித்ஷா எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இதனை ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டது. 


மத்திய ஆயுதப்படை காவலர் பணிக்கான தேர்வு 2013-ல் 13 பிராந்திய மொழிகளில், OMR sheet மூலம் எழுத்து முறையில் நடத்தப்பட்டுள்ளது. 2016-ல் கணினி அடிப்படையிலான தேர்வாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, 2016 மற்றும் 2017ல் இந்தி மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் மட்டுமே தேர்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து 2023 வரையிலான தேர்வுகளும் அவ்வாறே நடந்தன. பிறகு 2024ல் 13 பிரந்திய மொழிகளில் கணினி அடிப்படையில் நடத்தப்பட்டது. அதாவது பாஜக ஆட்சிக்கு முன்பிருந்தே பிராந்திய மொழிகளில் இத்தேர்வு நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அமித்ஷா பதிவிட்ட தவறான தகவலை ஊடகங்களும் செய்தியாக்கியுள்ளன.


முழுமையாக படிக்க: 13 மொழிகளில் மத்திய ஆயுதப்படை காவலர் தேர்வு.. முதல் முறையாக கொண்டு வந்ததாக ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி ! 


  1. நாயாக மாறிய மனிதன்:


ஜப்பானைச் சேர்ந்த டோகோ என்பவர் ரூ.12 லட்சம் செலவு செய்து தன்னை நாயாக மாற்றிக்கொண்டார் எனத் தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டுள்ளது. 



டோகோ என்பவர் ‘Rough Collie’ என்ற நாய் இனம் மாதிரியான உடை அணிந்து, வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.  தன்னை நாயாகக் காண்பித்துக் கொள்ள விரும்பிய ஒருவர், நாய் போன்ற ஆடை அணிந்து தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். ஆனால், உண்மையில் நாயாக மாறிவிட்டதாக தந்தி டிவி தவறான செய்தியை வெளியிட்டுள்ளது.


முழுமையாக படிக்க: ஜப்பானைச் சேர்ந்த டோகோ என்பவர் நாயாக மாறினார் எனத் தவறாகச் செய்தி வெளியிட்ட தந்தி டிவி!


  1. ஜி.யு.போப் புத்தகத்தில் காவி உடையில் வள்ளுவர்: 


திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப்பின் புத்தகத்தில் வள்ளுவர் காவி நிறத்தில் இருக்கும் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ’தினமலர்’ செய்தி வெளியிட்டது.



இது ஜி.யு.போப் மொழிப்பெயர்த்த திருக்குறள் புத்தகம் கிடையாது. சத்குரு சிவாய சுப்ரமுனியசுவாமி என்பவர் மொழிப்பெயர்த்தது. அதில் உள்ள பெயரை ஜி.யு.போப் என எடிட் செய்துள்ளனர். அந்த எடிட் செய்த படத்தை கொண்டு தினமலர் தவறான செய்தி வெளியிட்டுள்ளது.


முழுமையாக படிக்க: ஜி.யு.போப் புத்தகத்தில் காவி உடையில் திருவள்ளுவர் இருப்பதாகத் தவறான செய்தி வெளியிட்ட தினமலர்! 


  1. கச்சத்தீவு: 


கச்சத்தீவு தொடர்பாக வைகோ பேசுகையில், ”காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டிற்கு எல்லா விதத்திலும் துரோகம் செய்தது” எனக் கூறியதாக ANI 10 வினாடி கொண்ட வீடியோவை பதிவிட்டது. 



காங்கிரஸ் அந்த நேரத்தில் தமிழ்நாட்டுக்கு எல்லா விதத்திலும் துரோகம் செய்தது. அதற்குப் பிறகு மோடி ஆட்சிக்கு வந்து பத்து வருடங்கள் ஆகின்றன. அவர் ஒரு துரோகி. தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தார். இந்தியாவுக்கு துரோகம் செய்தார். இலங்கைக்கு துரோகம் செய்தார் எனக் கூறியதின் சிறு பகுதியை மட்டும் திரித்து செய்தி வெளியிட்டுள்ளது ANI.


முழுமையாக படிக்க: கச்சத்தீவு தொடர்பாக வைகோ பேசிய வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்ட ஏஎன்ஐ.


  1. இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டாரா நடராஜன்: 


இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதன் முதலில் ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் போது இந்தி தெரியாமல் கஷ்ட்டப்பட்டதாக கூறியதாக சாணக்கியா, தினமலர், மாலைமுரசு மற்றும் ABP Nadu போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 



ஆனால், நடராஜன் தனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும் என்பதால் பேசுவதற்கு தயக்கமாக இருக்கும் என்றும், பிறகு தயக்கமின்றி பேசியதாகவும் கூறினார். பேச்சுத்திறன் மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையே மாணவர்கள் மத்தியில் அவர் பேசியுள்ளார். இந்த ஒரு இடத்திலும் இந்தி கற்று கொள்ளுங்கள் என்றோ, இந்தி தெரியாததால் கஷ்டப்பட்டதாகவோ அவர் கூறவில்லை. 


முழுமையாக படிக்க: மொழி தெரியாமல் கஷ்டப்படுவதைத் தடுக்க ஹிந்தி போன்ற பல மொழிகளைக் கற்க வேண்டும் என நடராஜன் கூறியதாக தவறாக செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!


  1. அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது:


பராகுவே நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சாவின் அழகு பிறரின் கவனத்தை சிதறடிப்பதால் ஒலிம்பிக் போட்டியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாகக் கூறி தந்தி டிவி, தினமலர், புதியதலைமுறை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.


லுவானா அலோன்சா பெண்களுக்கான 100 மீட்டர் நீச்சல் போட்டியில் அரையிறுதிக்கான தகுதியை தவறவிட்ட நிலையில், ஒலிம்பிக் நடைபெறும் இடத்தில் இருந்து தனது நாட்டு அணி வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பதிலாக, அவர் டிஸ்னிலேண்டிற்குச் சென்றதால், சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். ஆனால், ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டுள்ளது.


முழுமையாக படிக்க: நீச்சல் வீராங்கனை அழகாக இருந்ததால் ஒலிம்பிக்கிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டதாக தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்கள்!


மதம்


  1. திருப்பதி லட்டு நெய் விவகாரம்:


திருப்பதி லட்டு தயாரிக்க ’ஏ.ஆர்.டெய்ரி’ என்ற நிறுவனத்திடமிருந்து வாங்கப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு அல்லது மீன் எண்ணெய் போன்ற பொருள் கலந்திருப்பதாக அறிக்கை வெளியானது. இந்நிறுவனத்தில் முஸ்லிம்கள் உயர் பதவிகளில் இருப்பதாக ‘A.R.Foods (Pvt) Limited’ என்ற நிறுவன பணியாளர்களின் பெயர் பட்டியல் வலதுசாரிகளால் பரப்பப்பட்டது. 


திருப்பதி தேவஸ்தானம் சொன்ன ’ஏ.ஆர்.டெய்ரி’ தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆனால், பரவக் கூடிய ‘A.R.Foods (Pvt) Limited’ நிறுவனம் பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் இயங்கிவரும் அரிசி மற்றும் மசாலா பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனமாகும். இதற்கும் திருப்பதி லட்டு விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.


முழுமையாக படிக்க: திருப்பதி லட்டு நெய் விவகாரம்.. முஸ்லிம்கள் மீது வதந்தி பரப்பும் வலதுசாரிகள்!


  1. விபூதியை அழித்த பங்காளி கட்சி:


அதிமுக குறித்து பேசிய அண்ணாமலை, “பங்காளி கட்சியை சேர்ந்த சில அரசியல் தலைவர்கள் சமீப நாட்களாக திருநீரை அழித்துவிட்டு வருகின்றனர். இப்படி போலி மதசார்பின்மையுடன் இருக்கும் தலைவர்கள் அந்த மதத்திற்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள் சிறுபான்மையினருக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள்” எனப் பேசி இருந்தார்.



அண்ணாமலை பேசுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் கூட எடப்பாடி பழனிசாமி SDPI கட்சி நடத்திய மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அதில் அவரது நெற்றியில் திருநீரு உள்ளது. அதேபோல் அக்கட்சியின் மற்ற தலைவர்களும் நெற்றியில் எப்போதும் போல பொட்டுடன் தான் உள்ளனர். மதப்பிரிவினை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை தவறான தகவல் பேசியுள்ளார்.


முழுமையாக படிக்க: ‘விபூதியை அழித்த பங்காளி கட்சி’ என அதிமுக குறித்துப் பொய் சொன்ன அண்ணாமலை!


  1. பாபர் மசூதி - ராமர் கோவில்: 


ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த கோவிலை கி.பி. 1556-ல் பாபர் இடித்து மசூதியை கட்டியதாக பாஜக தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்ஹ்டில் வீடியோ ஒன்றை பதிவிட்டது. 


கி.பி. 1529-ல் நடைபெற்ற காக்ரா போரில் வெற்றி பெற்று திரும்பி வரும் வழியில் 1530-ல் பாபர் இறந்துவிட்டார். 1530-ல் இறந்த ஒருவர் 1556ல் எப்படி கோவிலை இடித்திருக்க முடியும்? இதில் இருந்தே பாஜக பரப்பிய மத வெறுப்பு வெளிப்படுகிறது. 


முழுமையாக படிக்க: 1530ம் ஆண்டே இறந்த பாபர், 1556ல் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக வீடியோவைப் பதிவிட்ட பாஜக!


  1. பத்ம ஸ்ரீ விருது:


மக்கள் சேவை செய்த முஸ்லிம்களுக்கு பாஜக ஆட்சியில் பத்ம ஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்ததாகவும் இப்படி காங்கிரஸ் ஆட்சியில் செய்தது கிடையாது என்றும் பாஜகவினர் சமூக வலைத்தளத்தில் பரப்பினர். 


காங்கிரஸ் ஆட்சியின் போது 2,170 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எனப் பார்க்கையில் 159 விருதுகள் (7.32 சதவீதம்) வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர். இதுவே பாஜக ஆட்சி செய்த காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதுகளின் எண்ணிக்கை 1,260. இதில் முஸ்லிம்கள் 82 (6.5 சதவீதம்) பேர். இதன்படி காங்கிரஸ் ஆட்சியில் தான் அதிகப்படியாக முஸ்லிம்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


முழுமையாக படிக்க: காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டதில்லை எனப் பரவும் பொய்!


  1. பாடப் புத்தகத்தில் மதச்சாயமா?


தமிழ்நாடு பள்ளி பாடப் புத்தகத்தில் உள்ள குழந்தைகளின் படங்களுக்கு மத அடையாளம் போடப்பட்டு, பள்ளி கல்வித்துறை விஷத்தை விதைப்பதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் புகைப்படம் ஒன்றை பரப்பினார். அப்படத்தில் இஸ்லாமிய குல்லா மற்றும் சிலுவை அணிந்துள்ள சிறுவர்களை மட்டும் வட்டமிட்டு காண்பித்துள்ளார்.

அப்படம் மத நல்லிணக்கம் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், மத ஒற்றுமையை உணர்த்தும் வகையில் இந்து, கிறித்தவ, இஸ்லாமிய அடையாளங்களுடன் மாணவர்கள் கை கோர்த்து நிற்கின்றனர். அப்படத்தில் கிறித்தவ, இஸ்லாமிய அடையாளங்களை மட்டும் குறிப்பிட்டு பிரிவினைவாத பிரச்சாரத்தை அர்ஜுன் சம்பத் முன்னெடுத்துள்ளார். 


முழுமையாக படிக்க: தமிழ்நாடு பாடப்புத்தகத்தில் குழந்தைகள் படத்தில் மதச்சாயமா? அவதூறுகளை அடுக்கும் அர்ஜுன் சம்பத்..!


உடல் நலம்:


  1. "விட்டல விட்டல" எனக் கூறினால் மாரடைப்பு வராதா?


’விட்டலன்’ நாம மகிமையால் மாரடைப்பு சரியாகும் என்று வீடியோ ஒன்று பரப்பப்பட்டது. "விட்டல, விட்டல" என்றும் "விட்டல் விட்டல்" என்றும் சொல்வதால் உயர் இரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தமாக மாறுகிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்படுகிறது. 


புனேவைச் சேர்ந்த பல்வேறு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களால் இவ்வாய்வு 10 நாட்களுக்குள் 30 ஆரோக்கியமான நபர்களிடம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதய நோயாளிகளிடம் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இதனால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.


முழுமையாக படிக்க: "விட்டல விட்டல" என்று கூறுவதால் 'மாரடைப்பு' வராமல் தடுக்கலாமா? மருத்துவ ஆய்வுகள் கூறுவதென்ன?


  1. குளிர்பானங்கள்:


Heavy meal சாப்பிட்டதற்கு பின்பு கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவதால் செரிமானக் கோளாறுகள் குறையும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளதாக கூறி வீடியோ ஒன்று பரப்பப்பட்டது. 


2002-ல் 21 பேரை மட்டும் மாதிரியாக (மிகவும் குறைவு) கொண்டு செய்யப்பட்ட ஒரு சிறிய ஆய்வை கொண்டு, இது அனைத்து மக்களுக்கும் பொருந்தும் எனக் கூற முடியாது. இவ்வாய்வு, CoGeDi International SpA என்ற ஒரு கார்பனேட்டட் தண்ணீர் நிறுவனத்தாலேயே நிதியுதவி வழக்கப்பட்டு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வு கார்பனேற்றப்பட்ட தண்ணீர் பற்றியது மட்டுமானதுதான். ஆனால், வீடியோவில் கூல் டிரிங்க்ஸ் பற்றி பேசுகின்றனர். இதன் அடிப்படையே தவறாக உள்ளது. 


முழுமையாக படிக்க: கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவதால் செரிமானக் கோளாறுகள் குறையுமா? 


  1. திராட்சை மீது இரசாயனம்:


பால் போன்ற திரவம் நிரப்பப்பட்ட தொட்டியின் உள்ளே ஒருவர் நின்று கொண்டு திராட்சைப் பழங்களை அந்த திரவத்தில் முக்கி எடுக்கக்கூடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.


இது உலர் திராட்சை தயாரிக்கும் முறையாகும். எத்தில் ஓலியேட்  (Ethyl Oleate) மற்றும் பொட்டாசியம் கார்பனேட் (Potassium Carbonate) கலந்த நீரில் திராட்சைகளை கழுவி பிறகு உலர வைப்பர். மீண்டும் அவற்றை கழுவி உலர்த்தி விற்பனைக்கு அனுப்ப வேண்டும். ஆனால், இந்த நடைமுறைகள் எல்லாம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது கேள்விதான். எப்படி இருப்பினும் கழுவிய பிறகே பழங்களை உண்ணும் பழக்கத்தை பின்பற்றுவோம். 


முழுமையாக படிக்க: சந்தைக்கு வரும் திராட்சை மீது இரசாயனம் பூசப்படுவதாகப் பரவும் வீடியோ! உண்மை என்ன?


  1. செல்போன் பயன்பாட்டால் ஹார்ட் அட்டாக்!


நீங்கள் ஒரே மொபைலை நான்கு வருடத்திற்கு மேல் பயன்படுத்தினால்  ஹார்ட் அட்டாக் வரும் என பரப்பப்பட்டது. உங்கள் மொபைலில் ‘*#07#’ எண்ணை டயல் செய்வதன் மூலம் வரும் SAR மதிப்பு 1.6 W/Kg க்கு குறைவாக இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. 


SAR (Specific Absorption Rate) என்பது மனித உடலால் உறிஞ்சப்படகூடிய (absorbed), Radio Frequency இன் விகிதத்தை கணக்கிடும் ஒரு அளவீடாகும். உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட, ICNIRP ஆணையத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களையே இந்தியா தற்போது பின்பற்றி வருகிறது. அதன்படி இந்தியாவில் SAR லிமிட் 1.6 Watts/Kilogram எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது ICNIRP ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 2 Watts/Kilogram என்ற அளவை விட குறைவானதேயாகும். 


முழுமையாக படிக்க: 'ஒரே செல்போனை நான்கு வருடத்திற்கு மேல் பயன்படுத்தினால் ஹார்ட் அட்டாக் வரும்' எனப் பரவும் வதந்தி!


  1. மேகி நூடுல்ஸ் பற்றி வதந்தி: 


நூடுல்ஸில் பன்றிக் கொழுப்பு கலக்கிறோம் என்று உயர் நீதிமன்றத்தில் மேகி (Maggie) கம்பெனி கூறியதாக வீடியோ ஒன்று பரவியது. அதேபோல் நூடுல்ஸில் ’மெழுகு' (Wax) சேர்க்கப்படுவதாக சமையல் நிபுணர் வெங்கடேஷ் பட் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். 


"இந்தியாவில் தயாரிக்கப்படும் மேகி நூடுல்ஸில் பன்றிக் கொழுப்பு/பன்றி இறைச்சி இல்லை. 2 நிமிட நூடுல்ஸ் வரிசையின் கீழ் கிடைக்கும் மேகியின் அனைத்து நூடுல் வகைகளும் முற்றிலும் சைவ உணவு வகைகளாகும்” என அவர்களின் அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்சிங்கப்பூர் அரசின் உணவு துறையின் அதிகாரப்பூர்வ தளத்தில் நூடுல்ஸில் மெழுகு சேர்க்கப்படுகிறது என்ற கூற்று பொய்யென விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


முழுமையாக படிக்க: மேகி நூடுல்ஸில் பன்றி கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாகப் பரவும் வதந்திகள்!

முழுமையாக படிக்க: நூடுல்ஸில் மெழுகு சேர்க்கப்படுவதாக பரவும் ’வெங்கடேஷ் பட்’ வீடியோ!  


  1. குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி:


சமீபத்தில் குளிர்பானங்களில் (Drinks) உள்ள பூச்சிக்கொல்லி சதவீதம் குறித்து இந்திய மருத்துவ சங்கம் (IMA) வெளியிட்ட தரவுகள் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


பரவி வரும் புகைப்படத்தில் உள்ளவாறு இந்திய மருத்துவ சங்கம் (IMA) குளிர்பானங்களில் உள்ள பூச்சிகொல்லிகளின் சதவீதம் குறித்து எந்த ஆய்வறிக்கையையும் வெளியிடவில்லை. Center for Science and Environment (CSE) நடத்திய ஒரு ஆய்வில் குறைந்தபட்சமாக Sprite-ல் 0.0055 mg/L என்ற அளவிலும், அதிகபட்சமாக Mirinda Lemon Flavour-ல் 0.0352mg/L என்ற அளவிலும் பூச்சிக்கொல்லி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரப்பப்படும் படத்தில் மிகைப்படுத்தப்பட்ட சதவீதத்தில் வதந்தி பரப்பப்படுகிறது.


முழுமையாக படிக்க: 'குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லிகள் உள்ளதாக தரவுகள் வெளியிட்ட IMA' எனப் பரவும் தவறான செய்திகள்!


  1. மீனுக்கு ஊசி: 


மீன்கள் நீண்ட நாட்களுக்குக் கெட்டுப்போகாமல் இருக்க கடலில் இருந்து பிடித்தவுடனே அதன் உடலில் ஊசி மூலம் ரசாயனம் செலுத்தப்படுவதாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டது. 


இந்த வீடியோவில் இருப்பது கடல்மீன் இல்லை. அவை பண்ணையில் வளர்க்கக்கூடிய மீன்கள். ’அவற்றுக்கு போடக்கூடியதும் மீன்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கான ஊசி கிடையாது. அது சினை ஊசி’ என மீன் பண்ணை’ உரிமையாளர் ஒருவர் விளக்கம் அளித்தார்.  மேலும் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஃபார்மலின் (Formalin) எனப்படும் வேதிப்பொருள் பயன்படுத்துவது தவறு என்றும், அதனை இப்படி ஊசி மூலம் மீனின் உடலில் நேரடியாக் செலுத்துவதன் மூலம் எந்த பலனும் இல்லை என்றும் கூறினார். 


முழுமையாக படிக்க: மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க ஊசி செலுத்தப்படுவதாகப் பரவும் வதந்தி! 


  1. நச்சுக்களை வெளியேற்றும் எள் உருண்டை!


மது குடித்தல் புகை பிடித்தல் போன்ற தீய செயல்கள் உள்ளவர்கள் நாள்தோறும் ஒரு எள் உருண்டை சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் என்ற தகவல் பரப்பப்பட்டது. 


ஆல்கஹால் தொடர்பான நச்சுத்தன்மையைப் போக்க எந்த உணவும் உதவாது. மதுவைத் தவிர்ப்பது மட்டும் தான் அதற்கான ஒரே வழி என மருத்துவர் பிரவீன் விளக்கம் அளித்தார். எள் உருண்டை சாப்பிட்டால் உடலில் உள்ள நச்சு வெளியேறும் என எந்த ஆய்வும் இணையத்தில் இல்லை. 


முழுமையாக படிக்க: எள் உருண்டை சாப்பிட்டால் மது, புகையினால் உடலில் ஏற்பட்ட நச்சுக்களை வெளியேற்ற முடியுமா?


  1. தலைமுடியில் உணவா?


கொட்டிய தலை முடியை கொண்டு உணவு சமைக்கப்படுவதாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டது. 


ஃபேட் சோய் (Fat Choy) அல்லது கருப்பு பாசி என்பது சீனாவிலும் சிங்கப்பூரிலும் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான உணவாகும். பெரும்பாலும் சீன புத்தாண்டின்போது அங்கு முக்கிய உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது பார்ப்பதற்கு தலைமுடி போன்று இருப்பதால் முடியை சமைத்து உண்பதாக தவறாக பரப்புகின்றனர். 


முழுமையாக படிக்க: 'கொட்டிய தலைமுடியை வீணாக்க வேண்டாம்.. உணவு சமைக்கலாம்..' எனப் பரவும் சீன கடற்பாசி உணவு வீடியோ!


  1. பண்ணை கோழிகள் குளிப்பாட்டப்படுகின்றனவா?


பண்ணையில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகள் அழுக்காக இருப்பதால் அவற்றை ‘Detergent’ மூலம் சுத்தப்படுத்தி கடைகளுக்கு அனுப்ப குளிப்பாட்டப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 


இப்படி பண்ணை முழுவதும் நுரையை பரப்பும் செயலுக்கு "Foam Depopulation" என்று பெயர். இறைச்சிக்காக வளர்க்கப்படும் பறவைகள் 'Avian Flu' வைரஸால் பாதிக்கப்படும் போது, இப்படி செய்வதால்  பறவைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிடும். இச்செயல்முறையை கோழிகள் குளிப்பாட்டப்படுவதாக தவறாக பரப்பியுள்ளனர்.


முழுமையாக படிக்க: Detergent Powder-ன் நுரையை பயன்படுத்தி கோழிகள் வெள்ளையாக்கப்படுகிறதா? உண்மை என்ன?


அரசின் திட்டம் பற்றிய பொய் செய்திகள்: 


  1. பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டம் 2024:


'பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டம் 2024' விண்ணப்பங்களை ஏற்கத்தொடங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப்-யில் லிங்க் ஒன்று பரப்பப்பட்டது. 


மேற்கண்ட பெயரில் எந்த திட்டமும் இல்லை என்பதை  PIB இணையதளத்தில் ஆய்வு செய்ததின் மூலம் அறிய முடிந்தது. மேலும் அந்த லிங்க் போலியானது. இதனை கிளிக் செய்வதன் மூலம் தனிநபரின் தரவுகள் திருடப்பட வாய்ப்புள்ளது. 


முழுமையாக படிக்க: 'பிரதம மந்திரி வறுமை ஒழிப்புத் திட்டம் 2024' ! விண்ணப்பிக்கக் கூறி போலி செய்தியை பரப்பும் பாஜகவினர்!


  1. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்:


சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி, கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று அத்துமீறியதாகவும், மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். அவர் அர்ச்சகர் "அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்" திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டவர் எனப் பரப்பப்பட்டது.


இது பற்றி அறநிலையத்துறை தரப்பில் கேட்டபோது, ”இந்த திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின்கீழ் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது” என விளக்கம் அளிக்கப்பட்டது. இதிலிருந்து அரசின் திட்டம் குறித்து பரப்பப்பட்ட பொய் செய்தி என்பதை அறிய முடிந்தது. 


முழுமையாக படிக்க: பாலியல் புகாரில் சிக்கிய அர்ச்சகர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டவர் எனப் பரவும் பொய்!


  1. மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை: 


பிரதமர் நரேந்திர மோடி இந்தியா டுடே ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மகளிருக்கு இலவச பேருந்து சேவையை வழங்குகிறார்கள். இதனால் மெட்ரோவில் பயணிக்க கூடியவர்களில் 50 சதவீதத்தினரை நீக்கிவிட்டார்கள் எனக் கூறியிருந்தார்.


டெல்லியில் 2019ம் ஆண்டு முதல் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 2019ம் ஆண்டு முதல் மெட்ரோவில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 2023ல் இரண்டு கோடியாக உள்ளது. அதேபோல், சென்னை மெட்ரோவில் பயணித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. 


முழுமையாக படிக்க: மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவையால் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மோடி சொன்ன பொய்!


  1. ஆந்திராவில் வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்டதா?


ஆந்திராவில் சந்திரபாபு தலைமையிலான மாநில அரசு வக்ஃப் வாரியத்தைக் கலைத்து அரசாணை வெளியிட்டுள்ளதாக ஒரு செய்தி பாஜக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது.


ஜெகன் மோகன் தலைமையிலான கடந்த ஆட்சியின் போது, வக்ஃப் வாரிய உறுப்​பினர்கள் நியமனம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டது (G.O.Ms.No.47). இதனை எதிர்த்து 13 ரிட் மனுக்கள் ஆந்திரா உயர் நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்​தில், வக்பு வாரிய தலைவர் தேர்​தலுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதி​மன்றம் உத்தர​விட்​டது. இதனால், வக்ஃப் வாரியம் செயல்படாமல் இருந்த நிலையில், முந்தைய அரசாணையைத் திரும்பப் பெற்று புதிய அரசாணை ஒன்றை சந்திரபாபு தலைமையிலான அரசு வெளி​யிட்​டுள்​ளது. இச்செய்தியை வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்டதாக தவறாக பரப்பினர்.


முழுமையாக படிக்க: ஆந்திர அரசு வக்ஃப் வாரியத்தைக் கலைத்து விட்டதாகப் பரவும் தவறான தகவல்!


மோசடி:


  1. சச்சின் , சாய் பல்லவி, ஆன்யா மானசா: 


கிரிக்கெட் வீரர் சச்சின், நடிகைகள் சாய் பல்லவி மற்றும் ஆன்யா மானசா ஆகியோர் தனித்தனியே அளித்த வெவ்வேறு நேர்காணலில், ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற ரகசியத்தை கூறியதாக சில தகவல் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டது. 


இவர்கள் அளித்த நேர்காணல் எதிலும் இத்தகைய தகவல் எதுவும் கூறவில்லை. இப்படி பிரபலங்கள் மற்றும் முக்கிய ஊடகங்களின் பெயர்களைப் பயன்படுத்தி மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி, அவர்களிடம் பணம் பறிப்பதற்காக மோசடி கும்பல் உருவாக்கிய போலி செய்திதான் இது. யாரும் இத்தகைய செய்திகளை நம்பவோ முதலீடு செய்யவோ வேண்டாம். 


முழுமையாக படிக்க: சாய் பல்லவி, ஆல்யா மானசா மீது ரிசர்வ் வங்கி வழக்குத் தொடுத்ததாகப் பொய் பரப்பும் பண மோசடி கும்பல்!


முழுமையாக படிக்க: ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி என சச்சின் கூறியதாகப் பரவும் மோசடி!


  1. கொரியர் மோசடி:


மோசடியாளர்கள் முதலில் தொலைபேசி அழைப்பின் மூலமாக குறிப்பிட்ட நபரிடம் தாங்கள் ஒரு கொரியர் கம்பெனியின் அதிகாரிகள் என்றோ அல்லது சுங்க அதிகாரி என்றோ அறிமுகம் செய்துகொள்கின்றனர். பின்னர், அவரிடம் ‘உங்களுக்கு வந்திருக்கும் பார்சல் அல்லது நீங்கள் அனுப்பிய பார்சலில், போதைப் பொருட்கள், போலி பாஸ்போர்ட் போன்ற சட்டவிரோத பொருட்கள் இருப்பதாகக் கூறி, அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்ப சொல்லியோ அல்லது வங்கி கணக்கு விவரங்களை பெற்றோ மோசடி செய்கின்றனர். 


முழுமையாக படிக்க: அதிகரித்துவரும் கொரியர் மோசடி! எச்சரிக்கை!


  1. செல்போன் ஹேக்: 


கொரோனா தடுப்பூசி செலுத்திவிட்டீர்களா என்று கேட்டு ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது என்றும், அதில் சொல்லும் எண்ணை அழுத்தியதும் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டு வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படுகிறது என்றும் சைபர் கிரைம் காவல் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக ஒரு தகவல் பரப்பப்பட்டது.


இது போலியான தகவல் என்றும், இப்படி மோசடி நடந்ததாக எந்த புகாரும் இது வரையில் பதிவாகவில்லை என்றும் ஹைதராபாத் சைபர் கிரைம் காவல் உதவி ஆணையர் தெரிவித்திருந்தார். ‘PIB fact check’ எக்ஸ் பக்கத்திலும் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


முழுமையாக படிக்க: ’கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளீர்களா' என வரும் அழைப்பு உங்கள் செல்போனை ஹேக் செய்யுமா?


வங்கதேசம் மற்றும் பாலஸ்தீன்: 


1.வங்கதேச அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடந்த நிலையில், அங்கு இந்துப் பெண்களை மதம் மாற்றுவதாகக் கூறி வீடியோ ஒன்று பரப்பப்பட்டது. 



இந்த வீடியோவிற்கும் மத மாற்றத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் சத்ரா லீக் என்ற அமைப்பின் தலைவராவார். அவரது பெயர் அஃப்சானா இபாத். வங்க தேசத்தில் ஆட்சியில் இருந்த அவாமி லீக்-யின் ஒரு கிளை அமைப்புதான் சத்ரா லீக். போராட்டத்தின் ஒரு பகுதியினர் செய்த இச்செயலை மத மாற்றம் என வதந்தி பரப்பியுள்ளனர்.


முழுமையாக படிக்க: வங்கதேசத்தில் இந்துக்களை மதம் மாற்றி கொடுமை செய்வதாகப் பரவும் தவறான செய்தி!


2.இதேபோல் வங்கதேசத்தில் அரசு அதிகாரிகளாக உள்ள இந்துக்களை ராஜினாமா செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் ஒரு வீடியோ பரப்பப்பட்டது. 


அந்த வீடியோவில் இருப்பவரின் பெயர் தௌபீக் இஸ்லாம். அவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். Anti-discrimination மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் திடீரென அரசு அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கு  நிர்வாக பொறியாளராக பணிபுரி தௌபீக் சிகரேட் வைத்திருந்ததற்காக வேலையை ராஜினாமா செய்ய வேண்டுமென ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை இந்து - முஸ்லிம் என வதந்தி பரப்புகின்றனர்.


முழுமையாக படிக்க: வங்கதேசத்தில் இந்துக்களை ராஜினாமா செய்ய முஸ்லிம்கள் கட்டாயப்படுத்துவதாகப் பரவும் பொய்!


3.வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருடைய வீட்டுக்கு இஸ்லாமியர்கள் தீ வைத்ததாகக் கூறி புகைப்படம் ஒன்று பரப்பப்பட்டது.


இப்படத்தில் இருப்பது, வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், போராட்டக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினருமான மஷ்ரஃபே பின் மோர்டாசாவின் (Mashrafe Bin Mortaza) வீடு. அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவரது வீட்டிற்கு போராட்டகாரர்கள் தீ வைத்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட படத்தை இந்து கிரிக்கெட் வீரர் வீட்டிற்கு தீ வைத்ததாக வதந்தி பரப்பியுள்ளனர். 


முழுமையாக படிக்க: இந்து மதத்தைச் சேர்ந்த வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டுக்கு தீ வைப்பு எனப் பரவும் தவறான செய்தி!


4.பாலஸ்தீன் மற்றும் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், பாலஸ்தீனியர்கள் மற்றும் காசா மக்கள் காயம் ஏற்பட்டு இறப்பது போன்று நடிக்கின்றனர் எனக் கூறி இறந்தது போன்று நடிக்கும் குழந்தையென புகைப்படம் ஒன்று பரப்பப்பட்டது. 



இது தாய்லாந்து நாட்டில் அமைந்துள்ள சென்ட்ரல் கோரட் என்ற மாலில் நடைபெற்ற ஹாலோவீன் (Halloween) விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளின் புகைப்படங்கள். இதனை காசா மீதான போருடன் தொடர்புப்படுத்தி அவர்கள் நடிக்கின்றனர் என தவறான தகவலைப் பரப்புகின்றனர்.


முழுமையாக படிக்க: காசாவில் இறந்த குழந்தை செல்போனில் செய்தியனுப்பும் காட்சி எனப் பரவும் பழையப் புகைப்படம்!


5.இதேபோன்று ‘பாலஸ்தீனர்கள் மீது அனுதாபம் வர எப்படி நடிக்கிறார்கள்’ எனக் கூறி மற்றொரு வீடியோவையும் பரப்பினர். அந்த இளைஞர் தலையில் அடிபட்டு அதிகளவில் இரத்தம் வழிந்துள்ளது. அவர் வலியில் துடிக்குபோது எடுக்கப்பட்டதுதான் எந்த வீடியோ. அந்த இளைஞருகு அருகில் ஒரு சிறுவன் இறந்திருப்பதையும் காண முடிகிறது. அடிபட்டு இறந்து கிடப்பவர்களை சிரிக்கின்றனர் என பொய் செய்தியை வலதுசாரிகள் பரப்பினர்.


முழுமையாக படிக்க: பாலஸ்தீனத்தின் மீது அனுதாபம் ஏற்பட போரில் பாலஸ்தீனியர்கள் நடிக்கிறார்களா?


மற்றவை : 


  1. பாடப் புத்தகத்தில் சோழர், பாண்டியர் பாடம் இல்லையா?


தமிழ்நாடு அரசு பள்ளி பாடப் புத்தகங்களில் சோழர் மற்றும் பாண்டிய மன்னர்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெறவில்லை. ஆனால்,  இஸ்லாமிய மன்னர்களான பாபர், அக்பர் பற்றிய பாடங்கள் இடம் பெற்றிருப்பதாக வலதுசாரிகளால் பரப்பப்பட்டது. 


தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் கீழ் வழங்கப்படும் 7, 9, 11ம் வகுப்பு சமூக அறிவியல் மற்றும் வரலாறு புத்தகங்களில் சோழர் மற்றும் பாண்டியர்கள் பற்றிய பாடங்கள் உள்ளன. 


முழுமையாக படிக்க: தமிழ்நாடு பள்ளி பாடப் புத்தகத்தில் சோழர், பாண்டியர் பற்றிய பாடம் இடம்பெறவில்லை எனப் பரவும் பொய்!


  1. அணுவைக் கண்டுபிடித்தவர் யார்?


சீமான் பேசுகையில், ”அணுவைக் கண்டுபிடித்தவர் ஆல்ஃபிரட் நோபல். இது உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று தெரிந்து, தன் பெயரிலேயே ஒரு பரிசையும் அறிவித்து சென்றுள்ளார், அது தான் உலகிலேயே உயரிய பரிசான நோபல் பரிசு” எனக் கூறினார். 


ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆல்ஃபிரட் நோபல் என்பவர் 1866 இல் டைனமைட் (dynamite) எனும் வெடிபொருளை கண்டுபிடித்தார்.  அவர் தனது கடைசி உயிலை எழுதியபோது, தனது சொத்தின் பெரும்பான்மையான பகுதியை நோபல் பரிசு வழங்குவதற்காக ஐந்து பகுதிகளாகப் பிரித்து எழுதி வைத்தார். ஆனால், அணுவை கண்டு பிடித்தது இவர் கிடையாது. ஜான் டால்ட்டன் என்பவர்தான் அணுவை கண்டு பிடித்தார். 


முழுமையாக படிக்க: அணுவைக் கண்டுபிடித்தவர் ஆல்ஃபிரட் நோபல் என சீமான் கூறிய பொய் !


  1. தேசிய கீதத்திற்கு யுனெஸ்கோ விருதா?


இந்தியாவின் தேசிய கீதத்தை உலகின் சிறந்த தேசிய கீதமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளதாக வாட்சப்பில் பரப்பப்பட்டது. 


இப்படிப் பரவக் கூடிய தகவல் தவறானது என்றும் யுனெஸ்கோ இந்தியாவிற்கு மட்டுமின்றி வேறு எந்த நாட்டின் தேசிய கீதத்திற்கும் இப்படியான அங்கிகாரம் எதுவும் வழங்கவில்லை என்றும் யுனெஸ்கோவின் அப்போதைய செய்தி தொடர்பாளர் Sue Williams என்பவர் 2008ம் ஆண்டு ‘India Today’ ஊடகத்திடம் விளக்கம் அளித்துள்ளார்.

முழுமையாக படிக்க: இந்தியத் தேசிய கீதம்தான் உலகில் சிறந்தது என யுனெஸ்கோ சொன்னதாகப் பரவும் பல ஆண்டுக்கால பொய்!


  1. சென்னை உயர்நீதிமன்றம் இருப்பது கன்னிகா பரமேஸ்வரி கோவில் சொத்தா?


சென்னை உயர் நீதிமன்றம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளதால், இதனால், ஆண்டில் ஒரு நாள் உயர்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு, 24 மணி நேரத்திற்கு நீதிமன்ற வளாகத்துக்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஒரு தகவல் பரப்பப்பட்டது. 


உயர்நீதிமன்ற இடத்தின் மீது ‘Easementary Right’ கோரப்படுவதை தவிர்ப்பதற்காகவே இப்படி அனைத்து வாயில்களும் ஒரு நாள் அடைத்து வைக்கும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. ‘Easementary Right’ என்றால், குறிப்பிட்ட இடத்தின் சொந்தக்காரர் தனது இடத்தின் பயனை முழுமையாக அனுபவிக்கும் பொருட்டு அதன் அருகில் உள்ள ’தனக்குச் சொந்தமில்லாத’ இடத்தின் மீதும் உரிமை கோர முடியும் என்பதாகும்.


முழுமையாக படிக்க: கோவிலில் சாவியை ஒப்படைப்பதற்காக உயர்நீதிமன்றத்தின் வாயில்கள் மூடப்படுகிறதா? உண்மை என்ன?


  1. காப்புரிமை:


நிகோலா டெஸ்லா தனது கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறவில்லை. அவற்றை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எடிசன் தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார் என்ற தகவல் பரப்பப்பட்டது. 


எடிசனை போலவே நிகோலா டெஸ்லா தனது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். அமெரிக்காவில் மட்டும் 112 காப்புரிமைகளை டெஸ்லா பதிவு செய்துள்ளார். அது மட்டுமின்றி ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி என இன்னபிற நாடுகளில் 199 காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளது. 


முழுமையாக படிக்க: நிகோலா டெஸ்லா தனது கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறவில்லையா? உண்மை என்ன?


வரவிருக்கும் 2025ம் ஆண்டும் பொய் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு எதிராக யூடர்ன் தொடர்ந்து தனது பணியினை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பகிருங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்தும் பார்க்க

மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றும் ’VB-G RAM G’ திட்டம்!

இந்த அதிகரித்த செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கிராமப்புற வேலை வாய்ப்புகளை பலவீனப்படுத்தவேண்டும் என்ற நிலையில் மாநிலங்கள் உள்ளன.

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்று சொன்னது யார்? தவெக அரசா அல்லது திமுக அரசா?

’அரசு பள்ளி பெருமையின் அடையாளம்’ என்ற முழக்கம் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலே முன்வைக்கப்பட்டு பரவலாக கொண்டு செல்லப்பட்டது.

தவெக ஆட்சியில் L&T நிறுவனம் செய்துள்ள முதலீடு புதியதா? பிரசாந்த் ரங்கசாமி பரப்பும் பொய்!

தற்போது மூன்று திட்டங்களில் மூதலீடு செய்வதாக L&T நிறுவனம் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை தான்.

சமீபத்தியவை