பாலியல் வன்புணர்வு செய்து வீசப்பட்ட மத்தியப்பிரதேச சிறுமி .!
மத்தியப்பிரதேசம் மாநிலம் மந்தாசூர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு 2-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி பள்ளி வாசலில் பெற்றோருக்காக காத்திருந்த நேரத்தில் இருவர் சிறுமியைக் கடத்தி சென்றுள்ளனர். சிறுமியைக் கடத்தி சென்று கொடூரமாக கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, சித்திரவதைகள் செய்து இறுதியாக கொலை...

மத்தியப்பிரதேசம் மாநிலம் மந்தாசூர் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு 2-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி பள்ளி வாசலில் பெற்றோருக்காக காத்திருந்த நேரத்தில் இருவர் சிறுமியைக் கடத்தி சென்றுள்ளனர். சிறுமியைக் கடத்தி சென்று கொடூரமாக கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, சித்திரவதைகள் செய்து இறுதியாக கொலை செய்வதற்காக சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளனர்.
பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமி பள்ளியில் இருந்து 700 மீட்டர் தொலைவில் இருந்த பகுதியில் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமி கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 7 வயது சிறுமி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு இறக்கும் நிலைக்கு உள்ளாகியது பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பின்மையை வெளிப்படுத்தி கோபத்தை உருவாக்கியுள்ளது.
இச்சம்பவம் நடந்த அடுத்த நாள் இரவே சிறுமியை குற்றவாளி அழைத்து செல்லும் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளி இர்பான் என்பவனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து போலீசாரின் தேடுதல் வேட்டையில் இரு நாட்களில் ஆஷிப் என்ற குற்றவாளியும் கைது செய்யப்பட்டான். இருவரும் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமையை எதிர்த்து மந்தாசூர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி நடத்திய போராட்டத்தில் குற்றவாளிகளுக்கான தண்டனையை தாங்களே தீர்மானிக்கப் போவதாக கோஷங்களை எழுப்பியுள்ளனர். இது குறித்து பேசிய மந்தாசூர் உயர் காவல் அதிகரி மனோஜ் சிங் சிறுமியின் வாக்குமூலம் பெற்ற பிறகு வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச அரசு பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை உடைய வங்கி கணக்கில் 5 லட்சம் செலுத்தப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து, அம்மாநில முதல்வர் சிறுமியின் தந்தை வங்கி கணக்கில் ரூபாய் 5 லட்சத்தை செலுத்தி உள்ளார். குற்றவாளிகளை போலீஸ் விரைவில் கண்டுபிடித்து தூக்கிலிடப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மாநில அரசு பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல்நலம் மற்றும் கல்விக்கான பொறுப்பை ஏற்கும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ் தெரிவித்து இருந்தார்.
அரசு வழங்கிய பணத்தை ஏற்க மறுத்த சிறுமியின் தந்தை, “ எனக்கு எந்தவொரு இழப்பீடும் தேவையில்லை, குற்றவாளிகள் சாகும்வரை தூக்கிலிடப்பட வேண்டும் ” என்று கூறினார்.
சிறுமியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்ய முயற்சித்தற்காக குற்றவாளிகள் இர்பான் மற்றும் ஆஷிப் கைதாகி உள்ளனர். அதில் ஒருவரின் தாய் வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். ஒருவேளை சிபிஐ விசாரணை நடத்தி என் மகன் குற்றவாளி என்று நிரூபணம் ஆகினால் அவனை தண்டிக்கலாம் என்று ஊடகம் ஒன்றில் கூறியுள்ளார்.
சிறுமியின் பாலியல் வன்புணர்வு வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு ஒன்று சனிக்கிழமை அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மந்தாசூர் தலைமை எஸ்.பி ராகேஷ் மோகன் சுக்லா, “ நாங்கள் இந்த வழக்கின் விசாரணைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்போம், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றவாளியும் போலீசாரால் ரிமான்ட் செய்யப்பட்டுள்ளான். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார் “.இந்த வழக்கு குற்றவாளிகளின் மீது கடத்தல் மற்றும் வன்புணர்வு வழக்குகளும் பொக்சோ சட்டத்தின் கீழும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இஸ்லாமிய தலைவர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இஸ்லாமிய குழுத்தலைவர் யூனஸ் ஷேக் கூறுகையில் "இது போன்ற அரக்கனுக்கு சமுதாயத்தில் இடமில்லை தூக்கில் இட வேண்டும்." என்றார். இஸ்லாமிய அமைப்புகள் தண்டனையை துரிதப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். " இது போன்ற கொடிய குற்றங்களுக்கு மன்னிப்பே இல்லை. அந்த குற்றவாளியின் உடலை புதைக்க இஸ்லாமிய சமுதாயத்தின் எந்த இடுகாடுகளிலும் அனுமதி அளிக்கக்கூடாது என முடிவு எடுத்துள்ளோம்" என்றார் ஷேக்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பற்றி மருத்துவமனையை சேர்ந்தவர் நிர்வாகி கூறுகையில், “ முன்னிருந்த நிலைக்கு தற்போது குழந்தையின் நிலை நன்றாக உள்ளதாகவும், ஆபத்தான கட்டத்தை கடந்து உள்ளார். குழந்தைக்கு ஏற்ற உணவு வழங்கப்படுகிறது, இன்றுபேசவும் செய்துள்ளார். குழந்தையின் உடல் கண்காணிக்கப்படுகிறது. மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதித்து வருகிறார்கள் என்று மீடியாவிற்கு தெரிவித்துள்ளார்.உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் ICU-வில் இருந்து பொது பிரிவுக்கு மாற்ற உள்ளதாக மருத்துவமனை தெரிவித்தது.
இந்தியாவில் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் செய்திகள் அதிகளவில் வெளியாவதில் இருந்து நாட்டில் குழந்தைகளுக்கு இருக்கும் பாதுகாப்பின்மையை எடுத்துரைக்கிறது. இதற்கிடையில், சிறுமிக்கு நடந்த கொடுமையான சம்பவத்தை வைத்து அரசியல் சண்டைகளும், மதச் சண்டைகளும் உருவாகுவதை ஒருபோதும் ஏற்க கூடாது.
குறிப்பிட்ட மதத்தினால் இது ஊடகங்களில் வரவில்லை எனக்கூறுவது முற்றிலும் பொய். அனைத்து ஊடகங்களிலும் இந்த செய்தி வந்தது. பல்வேறு போராடங்கள் நடைப்பெற்று வருகின்றன. பல பிரபலங்கள் இதற்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். பெண்களுக்கு அநீதி இழைக்கும் நபர் எம்மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் குற்றவாளிகளே..! அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.. மத்தியப்பிரதேச சிறுமி சம்பவத்தில் கைதாகிய குற்றவாளிகள் கண்டிப்பாக தூக்கிலிடப்பட வேண்டும்.
Father Demands capital punishment for accused in mandsaur rape case
After protests over gang rape in madhya pradesh, politics takes over