அர்ஜுன் சம்பத் கொலை முயற்சியா ?
கோவையில் உள்ள இந்து சமூக பிரமுகர்களை கொலை செய்யும் நோக்கத்தில் சதி திட்டம் தீட்டி சென்னையில் இருந்து சிலர் கோவை வருவதாக கிடைத்த தகவலை அறிந்து சிறப்பு புலனாய்வு பிரிவு சிலரை கைது செய்த சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது. இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் சக்தி சேனா தலைவர்...
கோவையில் உள்ள இந்து சமூக பிரமுகர்களை கொலை செய்யும் நோக்கத்தில் சதி திட்டம் தீட்டி சென்னையில் இருந்து சிலர் கோவை வருவதாக கிடைத்த தகவலை அறிந்து சிறப்பு புலனாய்வு பிரிவு சிலரை கைது செய்த சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.
இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் சக்தி சேனா தலைவர் அன்பு மாரி ஆகியோரை கொலை செய்ய சென்னையில் இருந்து வந்த 4 பேர் மற்றும் அவர்களை அழைத்து செல்ல வந்தவரையும் கோவை ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்து சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னையின் வியாசர்பாடி ஜாபர் சாதிக் அலி (29) , இஸ்மாயில் (25) திண்டிவனம், சம்சுதீன் (20) பல்லாவரம், சாலாவுத்தின்(25) ஓட்டேரி ஆகியோர் கோவையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்கு வந்ததாக விசாரணையில் தெரிவித்து இருந்தனர். இவர்களை அழைத்து செல்ல வந்த கோவையை சேர்ந்த ஆசிக் (25) என்பவரையும் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து பைக், அரிவாள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைதான சிலரின் முகநூல் பதிவுகள் இந்து முன்னணி பிரமுகர்களுக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பதிவுகளை செய்துள்ளனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி பிரமுகர்களை கொலை செய்வதற்காக வந்தவர்கள் என கைது செய்யப்பட்டவர்களை சிறப்பு புலனாய்வு பிரிவினர் விடிய விடிய விசாரணையை நடத்தியுள்ளனர்.
24 மணி நேர விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்ட நபர்களை கோவை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை செப்டம்பர் 18-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்து பிரமுகர்களை கொலை செய்ய வந்தவர்கள் மீது Unlawful Activities (prevention) Act (UAPA)-ன் படி 15,16,18,20 மற்றும் 38 பிரிவுகளிலும், IPC Section 143, 120(B) பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 6 வது நபராக உக்கடத்தைச் சேர்ந்த பைசல் என்பருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகமடைந்ததாகவும், அவரையும் விசாரணை செய்ய இருப்பதாக தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும், குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்வர் என்பவரையும் விசாரணை செய்ய இருப்பதாக கூறியுள்ளனர்.
அர்ஜுன் சம்பத் கொலை முயற்சி அதிர்ச்சிகரமான சம்பவம். ஏற்கனவே பல இந்து அமைப்பை சேர்ந்த பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளன, அவர்களும் கைது செய்யப்பட்ட வரலாறு இங்கு இருக்கிறது. அப்படி இருக்கையில், தொடர்ந்து இந்து அமைப்பினரை குறிப்பிட்டு இதைப் போன்ற வன்முறைகளை செலுத்துவது பொது சமூகத்திற்கான அமைதியையையும் சேர்த்தே பாதிக்கும். சிறுபான்மை இனத்திற்கு ஆதரவாகவே பலமுறை பொது சமூகம் தமிழகத்தில் குரல் கொடுத்து வருகிறது. இரு பிரிவினருக்கு இடையே உள்ள சகோதரத்துவத்தையும், மனிதாபிமானத்தையும் வளர்க்கும் முயற்சியில் சமூக ஆர்வலர்களும், பொது சமூகமும் எப்போதும் முயல்கிறது.
எப்போதும் ஒரு உறவை பேணிக்காக்கவும், கலவரங்கள் போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்கவும் முக்கியத்துவம் கொடுத்து வரும் சூழலில் இதைப் போன்ற வன்முறையை, தாக்குதலை எப்போதும் , எப்பிரிவினர் செய்தாலும் அதை ஆதரிக்க இயலாது. இரு பிரிவினருக்கு இடையே இதை போன்ற மோதலை உருவாகின்ற பேச்சு, வன்மம் அல்லது கொலை செய்கிற நோக்கத்தோடு நடக்கும் செயல்பாடுகள் எப்போதும் அனைத்து தரப்புக்கும் ஆபத்தாகவே முடியும்.
ஒரு கலவரம் என்றால் அடிப்படைவாதிகள், மதத்தை முன் நிறுத்தும் முட்டாள்களுக்கு மட்டும் பாதிப்பாக இருந்து விடாது. தனி நபருக்கும் பாதிப்பாக அமைந்து விடும். இங்கு அனைத்து சமூகத்தினரும், மதத்தினரும் ஒற்றுமையாக இருப்பதே முக்கியம். தொடர்ந்து சிறுபான்மையினருக்கு ஆதரவாக பொது சமூகம் இருப்பதற்கு காரணம் அவர்களோடு பெரும்பான்மை மோதுகிற பட்சத்தில் பெரும்பான்மை மக்களால் சிறுபான்மை மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்கிற எண்ணத்திலேயே..!!!
வடநாடுகளில் நடப்பது போல் பசு காவலர்கள் என்கிற பெயரில் கொலை அல்லது பெரிய தாக்குதல் நடப்பதில்லை. இங்கு மத நல்லிணக்கணம் பிற மாநிலங்களை விட சிறப்பாக இருக்கிற மாநிலம். அது தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்பதை இரு தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டிய நேரம். இதை நினைவில் வைத்துக் கொண்டு எப்போதும் வன்முறையை அணுகாமல் இருப்பது தான் சிறப்பாக இருக்கும். மத அடிப்படைவாதிகள் சிறுபான்மையினராக இருந்தாலும் அதை உள்ளிருந்து எதிர்க்க வேண்டியது அதைச் சார்ந்த மக்களின் கடமை என்பதை உணர வேண்டும். எப்போதும் வன்முறையை அணுகாமல் சுமூகமான சூழலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதே சரியானதாக இருக்கும்.
பொது சமூகத்திற்கு அமைதி எனும் பெரும் ஆயுதமே தேவையே அன்றி இதை போன்ற வன்முறையை எச்சமூகத்தினரும் எக்காரணத்தை கொண்டும் தூண்டுவதை ஏற்கல் ஆகாது..!
சட்டரீதியாக எதிர்ப்பதும், கருத்தியரீதியாக எதிர்ப்பதே சரியானது. ஹிந்து அடிப்படைவாதத்திற்கு பிற மத அடிப்படைவாதமும், வன்முறையும் பதிலாகாது!
அமைதி நிலவட்டும், வன்முறை விதைப்பவர்களை நெருங்காமல் விளக்கியே வைப்போம்.
Five arrested for plot to kill leaders of Hindu outfits